புதன், 30 ஜூலை, 2008

நல்லது.

வீதியில் போகும்நாயும் சாகிறது.
நாமும் தானே கடைசியில் சாகிறோம்.
சும்மா இருப்பதை விட நாமும்
ஒரு நல்ல காரியத்திற்காக- நல்ல உணர்ச்சியோடு,
மானத்தோடு
சாகிறதுதானே நல்லது.
-தந்தை பெரியார்

செவ்வாய், 29 ஜூலை, 2008

பல துறைகளுக்கு

1. மக்களிடம் உணர்ச்சி, ஒழுக்கம் ஏற்படவேண்டுமானால் சினிமா ஒழிக்கப்பட வேண்டும்.
2. நீதி, நேர்மை ஏற்படவேண்டுமானால், வக்கீல் முறை ஒழிக்கப்பட வேண்டும்.
3. நாட்டில் காலிகள், அயோக்கியர்கள் ஒழிக்கப்பட வேண்டுமானால்பத்திரிகைகள் பெரிதும் ஒழிக்கப்பட வேண்டும்.
4. அரசியலில் நல்ல ஆட்சியும், நாணயமும் ஏற்படவேண்டுமானால்தேர்தல் முறை ஒழிக்கப்பட வேண்டும்.
5. வியாபாரத்தில் நாணயக் குறைவும், கள்ள வியாபாரமும் ஒழிக்கப்படவேண்டுமானால் லைசென்சு, பெர்மிட், கட்டுப்பாடு முறைஒழிக்கப்பட வேண்டும்.
6. தொழில் துறையில் தொழிலாளர்களிடையே சுமூகமும், நாணயமும்,பொறுப்பும் ஏற்பட வேண்டுமானால் லாபத்தில் பங்கு கொடுத்து, தொழிலாளர் சட்டம் ஒழிக்கப்படவேண்டும்.
7. அய்க்கோர்ட்டில் சமூக நீதி வேண்டுமானால் பார்ப்பனரை நீதிபதியாகநியமிப்பது ஒழிக்கப்படவேண்டும்.
- தந்தை பெரியார்

திங்கள், 28 ஜூலை, 2008

சாதி-தீண்டாமை ஒழிய

தீண்டாமையைப்பற்றி மக்களை ஏமாற்றி அதை நிலை நிறுத்தத்தான்சாதி-மத-தெய்வ சம்பந்தமான தடைகள் ஏற்படுத்தப்படுகிறதேயழியஇவற்றின் பக்தி காரணமாக அல்லவே அல்ல. இதனாலேதான் நாம்தீண்டாமை ஒழிவுக்கு சாதியும், மதமும், தெய்வமும் ஒழிந்தாக வேண்டும் என்கிறோம். இம்மூன்றும் ஒழியப் போவதில்லை. தெய்வம் உள்ளவரை மதம் இருந்துதான் தீரும். மதம் உள்ளவரை சாதி இருந்துதான் தீரும்.சாதி உள்ளவரை தீண்டாமை இருந்துதான் தீரும்
-தந்தை பெரியார்

கொள்ளை லாபம் அடிப்பதை தடுக்க

தொழிலாளிகளுக்கு எவ்வளவு கூலி கொடுப்பது என்பதை யோசிப்பதுதான் அரசியல் திட்டத்தில் ஒருகொள்கையாக இருக்கின்றதே தவிர,முதலாளி எவ்வளவு லாபத்துக்கு மேல்சம்பாதிக்கக் கூடாது, என்பதாக யாராவதுதிட்டம் போடுகின்றார்களா? பாருங்கள்..
-- தந்தை பெரியார்

வெள்ளி, 25 ஜூலை, 2008

நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்

"மனிதனுக்கு மனிதன் தொடக்கூடாது; கண்ணில் படக்கூடாது; தெருவில் நடக்கக்கூடாது; கோயிலுக்குள் போகக்கூடாது; குளத்தில் நீர் எடுக்கக்கூடாது; என்கின்றவை போன்ற கொள்கை தாண்டவமாடும் ஒரு நாட்டைப் பூகம்பத்தால் அழிக்காமலோ, எரிமலையின் நெருப்புக்குழம்பால் எரிக்காமலோ, சமுத்திரம் பொங்கி மூழ்கச்செய்யாமலோ,பூமிப்பிளவில் அமிழச்செய்யாமலோ, சண்டமாருதத்தால் துகளாக்கமலோ விட்டிருப்பதைப் பார்த்த பிறகும் கூட கடவுள் ஒருவர் இருக்கிறார் என்றும், சர்வதயாபரர் என்றும் யாராவது சொல்ல வந்தால் அவர்களை என்னவென்று நினைப்பது என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்."
-தந்தைபெரியார்

இழிசாதித் தன்மை நீங்க

நமக்கு மந்திரி பதவியோ,கவர்னர் பதவியோ தேவையில்லை நமக்குத் தேவை எல்லாம் நமது இன இழிவு ஒழிப்பே. அது இந்த ஆட்சியால் முடியாது என்றால் இந்த ஆட்சியை ஒழித்துக்கட்ட வேண்டியது தான். ஒழித்துவிட்டு என்னசெய்வாய்? துலுக்கனையோ, ருசியக்காரனையோ,ஜெர்மன்காரனையோ, ஜப்பான்காரனையோ கூப்பிட்டுக் கொள்ள வேண்டியது தான்! நம்மை இழிசாதி என்று சொல்லாதவன் எவனாவது ஆண்டு விட்டு போகட்டுமே.
-தந்தைபெரியார்

புதன், 23 ஜூலை, 2008

பகுத்தறிவுவாதி

நான் பகுத்தறிவுவாதி.
எனக்கு
மதம்,
கடவுள்,
மொழி,
நாடு,
அரசு
இதைப்பற்றியெல்லாம் கவலையில்லை.
-தந்தைபெரியார்

உடைப்பஞ்சம் ஒழிய

ஆண்களும் பெண்களும் ஒரே மாதிரியாக லுங்கி கட்டவேண்டும். ஜிப்பா போட வேண்டும்.உடைகளில் ஆண்-பெண் வித்தியாசம் இருக்கக் கூடாது.ஒரே மாதிரி உடை என்று சொல்லுகிறபோது அனாவசியமான ஆடம்பரத்தை ஒழிக்கவேண்டும். ஆண்களைப் போலவே தாங்களும் ஆகவேண்டுமே என்றில்லாமல், வீண் அல்ங்காரம் செய்து கொண்டு திரிவது பெண் சமுதாயத்தின் கீழ் போக்குக்குத்தான் பயன்படும்.
நம் நாட்டுப் பெண்களின் முன்னேற்றத்தை வேகமாகத் தடுத்து வருவது அவர்களது புடவை, நகை, துணி அலங்கார வேஷங்கள்தான் என்பதை 'அவர்கள்' உணர வேண்டும்.
பெண்கள் எல்லாம் ஆறடி,ஏழடி என்று கூந்தலை வளர்த்துக்கொள்வது அநாகரீகமும்-தேவையற்ற தொல்லையுமாகும். ஆண்களைப் போலவே பெண்களும் கிராப் வைத்துக் கொள்ள வேண்டும்.
-தந்தைபெரியார்.

செவ்வாய், 22 ஜூலை, 2008

எனது உணர்ச்சி...

ஒரு தாயின் வயிற்றில் பிறந்த எல்லா மக்களுக்கும் சம அனுபவம் இருக்க வேண்டும் என்று கருதி, ஒன்றுக்கொன்று குறைவு,அதிகம் இல்லாமல் பார்த்துக் கொள்வது எப்படி ஒரு தாய்க்கு இயற்க்கை குணமாக இருக்குமோ அது போலத்தான் எனக்கும் தோன்றுகிறது. மற்றும் அந்தத்தாய் தனது மக்களில் உடல் நிலையில் இளைத்துப்போய்,வலிவு குறைவாய் இருக்கிற மகனுக்கு , மற்றக் குழந்தைகளுக்கு அளிக்கிற போசனையை விட எப்படி அதிக போசனையைக் கொடுத்து மற்ற குழந்தைகளோடு சரி சமசமானமுள்ள குழந்தையாக ஆக்க வேண்டுமென்று பாடுபடுவாளோ,அது போலத்தான் நான் வலுக் குறைவான பின் தங்கிய மக்களிட்ம் அனுதாபம் காட்டுகிறேன். இந்த அளவுதான் நான் பார்ப்பனரிடமும்,மற்ற வகுப்பு மக்களிடமும் காட்டிக்கொள்ளும் உணர்ச்சியாகும்.
-தந்தைபெரியார்

சனி, 19 ஜூலை, 2008

ஏன் சூத்திரர்களாக இருக்கவேண்டும்?

வான் முட்டும் கோபுரங்கள் கட்டியவர் யார்?அதன் உச்சிக்கெல்லாம் தங்க முலாம் பூசியவர் யார்? தில்லை நடராஜனுக்கு தங்க கூரை வேய்ந்து தந்தவர் யார்? ஆங்காங்கு ஆயிரங்கால் மண்டபங்கள் எழுப்பித்தந்தவர் யார்? சத்திரம் சாவடி கட்டி வைத்தவர் யார்? ஒரு பார்ப்பானாவது ஒரு செல்லாக் காசாவது கோயில்,குளம்-தான தர்மம் இவற்றிற்குக் கொடுத்திருப்பானா? அப்படியிருக்க, இவ்வளவு செய்தும் நாம் ஏன் சூத்திரர்களாக இருக்கவேண்டும்? அவர்கள் மட்டும் ஏன் ஒன்றும் செய்யாமலே நம்மை ஏமாற்றி உண்டு பிராமணர்களாய் வாழ வேண்டும்? நாம் ஏன் இன்று கடவுளையே குடுமியை பிடித்து ஆட்டுகிறோம்? ஏன்? அதனால் நல்லது உண்டாகவில்லை. இது சாமியா குழவிக்கல்லா என்று கூடத் துணிந்து கேட்கிறோம் . அது நட்டது நட்ட படியே நின்று கொண்டிருக்கிறதே-"ஆம் உண்மை உண்மை" என்று ஒப்புக்கொள்ளும் தன்மையில். இப்படியெல்லாம் சொல்வதற்காக எந்தச்சாமியும் நம்மீது மான நட்ட வழக்கு தொடரக்காணோமே!

-தந்தை பெரியார்

செவ்வாய், 15 ஜூலை, 2008

ஒழுக்கம் வளர...

யோக்கியர்களே அரசியல், பொதுவாழ்வுக்கு வரும்படியான நிலையை இன்னமும் நம்முடைய நாடு எய்தவில்லை. ஏதோ ஒரு சிலர் யோக்கியர்களும் இருக்க நேரலாம்; என்றாலும் அவர்கள் யோக்கியமாய் நடந்துகொள்ளமுடியாத சூழ்நிலையும்,யோக்கியமாய் நடந்து கொண்டாலும் பயன் எற்படாத சூழ்நிலையும் இருந்து வருவதனால் யோக்கியமாய் நடந்து கொள்வது முட்டாள்தனம் என்று அவர்கள் கருதும்படியாக நேரிட்டு விடுகிறது. மனித ச்முதாயத்தில் ஒழுக்கமும் நல்ல அரசியலும் ஏற்பட வேண்டுமானால் அயோக்கியத் துரோகிகளை, மானமற்ற இழிமக்களை,நாணயம்-ஒழுக்கமற்ற ஈனமக்களைப் பொது வாழ்வில் தலைகாட்டாமல் அடித்து விரட்டுவதேதான் சரியான வழியாகும்

-தந்தை பெரியார்

திங்கள், 14 ஜூலை, 2008

வீரன்

கெட்டவர்களுக்கு விரோதியாகி கேட்டை
ஒழிக்க முற்படுகின்றவனே வீரன்-
உண்மையான தொண்டன்.

-தந்தைபெரியார்

வேர்

சாதியை ஏற்படுத்தியவன் அதை தனியாக வைக்கவில்லை. அதனுடன் மதம், சாத்திரம்,கடவுள்,ஆகியவற்றையும் முடிந்து வைத்தான். ஆகவேதான் அடி மரத்தையே நாங்கள் அசைக்கிறோம்

- தந்தைபெரியார்

வெள்ளி, 11 ஜூலை, 2008

நீதி என்றால் என்ன?

நல்லவர்களைப் பாதுகாக்க வேண்டும். கஷ்டப்பட்டவர்களைக் கைதூக்கி விட வேண்டும். குறைபாடுகள் உள்ளவர்களின் குறைகளைக் களைய வேண்டும். அதுபோலவே குற்றம் புரிபவர்களைத் தண்டிக்கவும், கொலைகாரர்களைக் கொல்லவும், அக்கிரமக்காரர்களை அழிக்கவும் வேண்டும்.
-தந்தைபெரியார்

நீதிபதிகள்

வக்கீல்கள் தொழிலே பொய், புரட்டுபேசி எப்படியாவது தமது கட்சிக்காரனைசெயிக்க வைக்க வேண்டும் என்பதாகும். கொலை செய்தவனைக் நிரபராதி என்றும், நிரபராதியைக் கொலையாளி என்றெல்லாம் வாதிப்பவர்கள். இவர்களில் இருந்து நீதிபது வந்தால் அவர்களிடம் எப்படி நீதியை எதிர்பார்க்க முடியும்? நேற்று வரையில் விபச்சாரத் தொழில் புரிந்தவளை அவள் பத்தினியாக இனி நடப்பாள் என்று எதிர்பார்ப்பது போன்றதே யாகும்.
-தந்தைபெரியார்

தவிர்க்க முடியாத தப்பு...

தப்புத்தான் என்றாலும் சிலதப்பு செய்து தீரவேண்டிய தப்பு ஆகின்றது. அழிந்துபொன நந்தவனத்தில் ஆடு மேய்ந்தால் என்ன கழுதை மேய்ந்தால் என்ன என்று இருக்கலாம். நந்த வனத்திற்கு பக்கத்தில் நமதுவீடு; கழுதையை விரட்டாவிட்டால் நம் வீட்டுத் திண்ணையில் வந்து விட்டை போடும் என்றால் நந்தவனத்தைப் பற்றிக் கவலை இல்லாவிட்டாலும் கழுதையை விரட்டித்தானே தீரவேண்டும்.
-தந்தைபெரியார்

வியாழன், 10 ஜூலை, 2008

கண்ணாமூச்சி

சின்னவனாய்
அன்று...
என்

கண்களை
கட்டிவிட்டு
ஆட்களை
கண்டுபிடி
என்றார்கள்.
முயன்றேன்...

முடியவில்லை
பெரியவனாய் இன்று-

கண்களைத்
திறந்துகொண்டே
ஆட்களை
கண்டுபிடிக்கும்
விளையாட்டு...
முயல்கிறேன்...

முடியவில்லை.
-காசி ஆனந்தன்

புதன், 9 ஜூலை, 2008

சிந்தியுங்கள்!

நமக்கு சரிஎன்று படுவதாலோ,அல்லதுஒரு கருத்தை நமக்குச் சொன்னவர்கள் நல்லவர்கள் என்பதாலோ,நம் பெற்றோர்களால் சொல்லப்பட்டது என்பதாலோ அல்லது நம்முடைய ஆசிரியரால் கற்பிக்கப்பட்டது என்பதாலோ எந்த ஒரு கருத்தையும் ஏற்றுக் கொள்ளாதீர்கள். அதனால் எல்லாருக்கும் என்ன நன்மை அந்தக் கருத்து நம் வாழ்க்கைக்கு அவசியமானதாக இருக்கிறதா என்று நீங்கள் சிந்தித்து ஏற்றுக்கொள்ளுங்கள்!

நாமம் போட்டவன் இழிவானவன்; பட்டை போட்டவன் அசல் மடையன்


நாங்கள் எதற்காக இந்த முயற்சியில் இறங்கியுள்ளோம், பிரச்சாரம் செய்து வருகின்றோம் என்பதை நீங்கள் உணர வேண்டும். இன்றைக்கு சமுதாயத் துறையில் 100க்கு 97 மக்களாக உள்ள நாம் 100க்கு மூன்று பேராக உள்ள பார்ப்பனர்களுக்கு தாசி மக்களாக, அடிமைகளாக அவமானத்தைச் சுமந்து கொண்டு, சூடு சொரணையற்ற மக்களாக உள்ளோம். இன்றைக்கு நாம் நமக்கு அந்நியமான ஆட்சியில் அடிமையாக இருக்கிறோம். நமக்கு அந்நியமான மொழி, கலாச்சாரம், நாகரிகம், உணவு, உடைப் பழக்கம் முதலியவற்றைக் கொண்டவர்களின் ஆட்சியின் கீழ் இருக்கிறோம். இந்த அவமானமும், கொடுமைகளும் போக்கப்பட வேண்டும் என்று நான் தான் பாடுபட்டுக் கொண்டு வருகிறேன்.
நான் கடுமையாகப் பேசுவதாகக் கூறுகிறார்கள். நான் கடுமையாகப் பேசாமல் வேறு என்ன செய்வது? எப்படியாவது அவனுக்கு ரோஷ உணர்ச்சி, மான உணர்ச்சியைத் தூண்டிவிட்டு திருத்த வேண்டும் என்பதுதான் எனது தொண்டுமுறை. பட்டைப் போட்டவனை அசல் மடையன் என்று சொல்கிறேன்; நாமம் போட்டவனைஎல்லாம் பார்ப்பனனின் இழிமக்கள் என்று கூறுகிறேன். ஆதாரம் இல்லாமலா கூறுகிறேன்? இந்த நாட்டு ராஜாக்களின் பெண்டாட்டிகள் எல்லாம் பார்ப்பானிடம் படுத்துப் புரண்டு இருக்கிறார்கள். அப்படிப் போவது புண்ணியமாகக் கருதப்பட்டு இருந்தது.
கேரளத்திலே நம்பூதிரிக்குப் பிறந்தவன் என்று சொல்லிக் கொள்வதிலே ஒவ்வொருவரும் பெருமைப்படுகிறானே! நாயருக்குப் பிறந்ததாகக் கூறினால் அவமானம்; நம்பூதிரிக்குப் பிறந்தவர் என்று கூறினால் வெகுமானம். அந்த நிலைமை அங்கு இருக்கிறதே! எப்படி எல்லாம் நம் நிலை இருக்கிறது என்பதை சிந்தித்துப் பாருங்கள். நான் கடவுளை கற்பித்தவனை முட்டாள் என்று சொல்லுகிறேன் என்று ஆத்திரப்படுகிறார்கள். கடவுள் இல்லை என்று சொன்னவர்களை உங்கள் சாஸ்திரத்தில் எவ்வளவு வசைபாடி இருக்கிறீர்கள். கடவுள் இல்லை என்று சொல்லுகிறவனின் பெண்டாட்டியை கற்பழிக்க வேண்டும் என்று எழுதி இருக்கிறானே வசைபாடியது மட்டுமல்ல கொலையே செய்து இருக்கிறார்களே!
இன்றைய அரசமைப்புச் சட்டத்திலிருந்து உங்கள் இந்து மத ஆதாரங்கள் அனைத்திலும் நூற்றுக்கு மூன்று பேராக உள்ள பார்ப்பான், முஸ்லிம், கிறித்துவன் இவர்களைத் தவிர்த்து பாக்கி அத்தனைப் பேரும் சூத்திரர்கள் தானே! வெட்கப்பட வேண்டாமா? பார்ப்பான் ‘சர்மா' என்ற பட்டம் வைத்துக் கொள்ளலாம். சூத்திரன் மட்டும் ‘தாசன்' என்ற பட்டத்திற்கே அருகதை உடையவன், தாசன் என்றால் என்ன அர்த்தம்? ‘தாசிபுத்திரன்' என்றல்லவா அர்த்தம்? யாருக்கு ரோஷம் வருகிறது? யாருக்கு வெட்கம் வருகிறது? சொல்லுகிற எங்கள் மீது முட்டாள்தனமாக உங்களுக்குக் கோபம் வருகிறதே தவிர, உண்மையை உணர்ந்து பார்க்கவில்லையே?
சட்டத்திலேயே கூறி விட்டானய்யா, பார்ப்பானைத் தவிர அத்தனை பேரும் தாசிப்புத்திரன் என்று. சட்டத்திலே தீண்டாமை ஒழிக்கப்பட்டதாக வரி இருக்கிறது. ஆனால், அதற்கடுத்த வரியிலே என்ன கூறப்பட்டு இருக்கிறது? தீண்டாமை ஒழிக்கப்படுகிறது. ஆனால், மத சம்பந்தப்பட்ட காரியங்களில் மட்டும் தீண்டாமை அனுசரிக்கப்படும் என்றல்லவா எழுதி வைத்து இருக்கிறான். இது எந்த விதத்தில் நியாயம்? வெறுங்கல்லைத் தொட்டுப் பார்ப்பதற்கு ஒரு சாதிக்குதான் உரிமை உண்டென்றால், மற்றவன் கதி என்ன?
இதை எண்ணிப் பார்த்து மனம் புழுங்கிப் போராட்டம் நடத்தத் திட்டமிட்டேன். மன்னார்குடி கோயிலைத் தேர்ந்தெடுத்து கர்ப்பக் கிரகத்திற்குள் நுழைவது என்று ஏற்பாடு செய்தேன். ஏராளமான தோழர்கள் போராட்டத்தில் கலந்து கொள்ள கையொப்பம் போட்டுக் கொடுத்தார்கள். நம் முதல்வர் கலைஞர் பார்த்தார். அய்யா எதற்காக இந்தப் போராட்டத்தைத் தொடங்க வேண்டும்? நானே அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக சட்டம் செய்கிறேன் என்று புது சட்டத்தையே உருவாக்கிவிட்டார்.
பார்த்தான் பார்ப்பான், சுப்ரீம் கோர்ட்டுக்கு படை எடுத்தான். கலைஞர் சட்டத்தைச் செல்லாது என்று தூக்கிப் போட்டுவிட்டான். நம் நிலை என்ன? பழைய கருப்பன் கருப்பனே என்ற தன்மைதான். நம்நிலைமை இப்படித்தான் நீடிக்க வேண்டுமா? நம் பிறவி இழிவுக்குப் பரிகாரமே கிடையாதா? பார்லிமெண்டைப் பொறுத்தவரை, எதிரிகளின் பலம்தான் அதிகம். அதில் பிரவேசித்து நாம் ஒன்றும் செய்ய முடியாது. எனவே, இந்த ஆட்சியில் இருந்து கொண்டு நம் இழிவை ஒழிக்க முடியாது. பிரிந்துதான் ஆகவேண்டும். பிரிவினை என்று கேட்டால் ஏழாண்டு தண்டனையாம், அனுபவிப்போமே!
சட்டத்தைக் கொளுத்திவிட்டு மூன்று ஆண்டு சிறை அனுபவிக்கவில்லையா? வெளிநாட்டுக்காரன் பார்த்தால் காறித் துப்ப மாட்டானா? நூற்றுக்கு மூன்று பேராக உள்ள கூட்டம் 97 பேர்களை ‘தாசிபுத்திரன்' என்று சொல்கிற அரசியல் சட்டம் இந்தியாவில் இன்னும் இருக்கிறதே என்று வெளிநாட்டுக்காரன் சிரிக்க மாட்டானா?

-தந்தைபெரியார்

திங்கள், 7 ஜூலை, 2008

சுதந்திரம்

பொதுவாகச் சொல்லவேண்டுமானால் மக்களுக்கு இருக்கவேண்டிய மானம்,அவமானமற்ற தன்மை,கண்ணியம், நேர்மை, முதலிய சாதாரணக்குணங்களை நமது சுதந்திரம் எரித்துச் சாம்பலாக்கி வருகிறது. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் இந்தச்சுதந்திரம் உள்ளவரை மக்களில் நேர்மையுள்ள யோக்கியன்இருக்கமாட்டான் என்றுதான் சொல்ல வேண்டும். ஏனென்றால்,இந்தச் சுதந்திரம் ஏற்பட்டதே பித்தலாட்டக்காரர்கள்,நாணயமற்றவர்கள்,மக்களை ஏமாற்றி-வஞ்சித்து பழக்கப்பட்டுத் தேறினவர்கள், பொறுப்பற்றகாலிகள் முதலியவர்களது முயற்சியினால்,தந்திரத்தினால் என்றால் இதில் யோக்கியம்,நேர்மை,உண்மை எப்படி இருக்கமுடியும்.
-தந்தைபெரியார்

ஞாயிறு, 6 ஜூலை, 2008

சுயநலம்

சுய நலத்துக்கு அறிவே தேவையில்லை உணவுக்கு அலைவதும்,உயிரைக்காப்பதும் எந்தச்சீவனுக்கும் இயற்கை.ஒவ்வொரு சீவனிடத்திலும் ஒவ்வொரு அருமையான, அற்புதமான, அதிசயமான குணங்கள் உண்டு என்றாலும் அவற்றையெல்லாம் அந்தந்தச் சீவனின் சுயநலத்துக்கேதான் பயன்படுத்துகின்றன
தந்தைபெரியார்

மதம்

ஏழைகளின் கோபத்திலிருந்து
பணக்காரர்களை காப்பாற்றும்
எளிய தந்திரத்தின் பெயர்தான்
மதம்.
-ஆஸ்கார் ஒயில்ட்

வெள்ளி, 4 ஜூலை, 2008

அணு ஒப்பந்த அழிச்சாட்டியம்!!

கள்ளத் திருடன்பேர் கரிகாற் சோழனா?கொள்ளைக் காரன் பேர் குமண வள்ளலா?
குடலை உருவி மாலையாய்ப் போடும்கொள்ளிவாய்ப் பேய் குடியிருக்கும் இடம்பேர் 'வெள்ளை மாளிகை' என்றால் விளங்குமா?
பிணமலை அடுக்கப் பெருக்கத்தின் பேர்தான் அணு ஒப்பந்தம் அழிச்சாட் டியமா?அழுகிய மலமே! பழிகார புஷ்ஷே
படுகுழி வெட்டப் பழகிப் பழகிச் சுடுகாட்டையே நீ தொழுது கிடக்கிறாய்!
உன்சுட்டு விரலுக்கு கட்டுப் பட்டே பெட்டிப் பாம்பாய் எம்பெருந் தலைகள்
நூறுகோடிப்பேர் தன்மானத்தைக் கூறுபோட்டு உன்முன் குனிந்து நிற்கமானங்கெட்ட ஒரு மன்மோகன் சிங் அலுவாலியா சித்ம்பரஅடிமைக் கும்பல்அடுத்த வரிசையில் அத்வானி... சின்ஹா...
உன் ஆதிக்க வலையில் வீழ்ந்தபின்தன்னாதிபத்திய தம்பட்டம் எதற்கு?
அங்கேபார்!கியூபா நாட்டுக்கிழவன் காஸ்ட்ரோபிடரி சிலிர்க்கப் பீரிட் டெழுகிறான்அர்ஜென்டீனா அரிமா முழக்கம் கயவனே உன் காதுகள் கிழிக்கும்
ஐ.நா.மன்ற சுவர்கள் அதிரமுதுகெலும்புள்ள சாவேஸ் எழுந்து சாத்தான் என்றுனைச் சாற்றிய வீரம்சிவப்புக் கேயுள்ள செம்மாந்தப் பெருமிதம்.
-தமிழேந்தி
நன்றி.சிந்தனையாளன் ஜூலை 2008

வியாழன், 3 ஜூலை, 2008

மனிதச்சீவன்

சாதியின் பெயரால் உயர்வு தாழ்வு...மதத்தின் பெயரால் வேற்றுமை உணர்ச்சி...தேசத்தின் பெயரால் குரோதத் தன்மை... முதலான இழி குணங்களை மனிதனிடமே அதிகமாகக் காண்கிறோம். மற்றும் கடவுளின் பெயரால் மேல் கீழ் நிலை முதலாகிய அயோக்கியத்தன்மைகள் மனிதச் சீவனிடமே உண்டு. பகுத்தறிவின் காரணமாக மனிதச்சீவன் உயர்ந்தது என்று சொல்ல வேண்டுமானால் மேற்கண்ட கெட்ட தீய இழிவான அயோக்கியத்தனமான குணங்கள் என்பவைகள் எல்லாம் மனிதனிடம் இல்லாமல் இருக்கவேண்டும். அப்பொழுதுதான் மற்ற பகுத்தறிவில்லாச் சீவராசிகளை விட மனிதச்சீவன் மூளை விசேடம் முதலிய அவயவத்தை நன்மைக்காகப் பிரயோகித்துக் கொண்ட சீவன் என்று சொல்லப்படும். அதில்லாத நிலையில் எவ்விதத்திலும் மனிதச்சீவன் மற்றசீவப்பிராணிகளை விட உயர்ந்ததல்ல என்பதோடு பல விதத்தில் தாழ்ந்தது என்றும் சொல்ல வேண்டியிருக்கிறது.
--தந்தைபெரியார்

செவ்வாய், 1 ஜூலை, 2008

இயக்கம்

ஒருவன் உழைப்பில் ஒருவன் நோகாமல் சாப்பிடுகிறதென்கிற தன்மை இருக்கும் வரையிலும், ஒருவன் தினம் ஒருவேளைக் கஞ்சிக்கு மார்க்கமில்லாமல் பட்டினி கிடந்து சாவதும், மற்றொருவன் தினம் அய்ந்து வேளை சாப்பிட்டு விட்டு வயிற்றைத் தாடவிக்கொண்டு சாயுமான நாற்காலியில் சாய்ந்து கொண்டிருக்கிற தன்மையும் இருக்கிற வரையில், ஒருவன் இடுப்புக்கு வேட்டி இல்லாமல்திண்டாடுவதும், மற்றொருவன் மூன்று வேட்டி போட்டுக்கொண்டு உல்லாசமாக திரிவதான தன்மை இருக்கின்ற வரையிலும்,பண்க்காரர்க ளெல்லாம் தங்களது செல்வம் முழுமையும் தங்களுடைய சுய வாழ்விற்கே எற்ப்பட்டது என்று கருதிக்கொண்டிருக்கிற தன்மை இருக்கின்ற வரையிலும் சுயமரியாதை இயக்கம் இருந்தேதான் தீரும்.மேற்கண்ட தன்மைகள் ஒழியும் வரை இவ்விய்க்கத்தை ஒழிக்க யாராலும் முடியாதென்பதே நமது உறுதி.
-தந்தைபெரியார்

வாழ்க்கை

தம்மைத் தாம் பெரிதாகவும்,தம் தகுதிக்கு மேற்பட்ட சன்மானம் வேண்டு மென்றும் எண்ணிக்கொண்டு இருப்பவர்கள் எப்போதும் கஷ்டப்பட்டே தீருவார்கள். எவ்வளவு பெரிய பதவியும் வருவாயும் வந்தாலும் ஆசையால் மனம் வாடிச் சதா அதிருப்தியில் ஆழ்ந்துதான் இருப்பார்கள். எப்போதும் கடன்காரர்களாகவும் தான் இருப்பார்கள். ஆதலால் வருவாய் போதாமல் இருப்பதற்கும் கடன்காரர்களாய் இருப்பதற்கும் காரணம் நமது பலவீனத்தின் பயனான பேராசையும் அவசியமுமே ஆகும். என்னை நான் சின்னவன் என்றும்,குறைந்த செலவில் வாழ்வதற்கு தகுதியுடையவன் என்றும் எண்ணிக்கொண்டிருக்கும் காரணத்தாலேயே நான் என் யோக்கியதைக்கு மீறின பெருமையுடையவனாகவும் தாராளமாகச் செலவு செய்பவனாகவும் கருதிக்கொண்டிருக்கிறேன். நான் மூட்டை தூக்குவதில் பாரத்தினால் கஷ்டப்பட்டிருப்பேனே யொழிய மூட்டை தூக்குவது அவமானம் என்று ஒருபோதும் கஷ்டப்பட்டதில்லை. அதேபோல் மனதைகட்டுப்படுத்தச் சக்தி இருந்தால் எல்லாம் தானாகவே சரிப்பட்டு விடும்.
- தந்தைபெரியார்

வலைப்பதிவு காப்பகம்