செவ்வாய், 28 அக்டோபர், 2008

ஜெயலலிதாவின் சூழ்ச்சி - காங்கிரசின் மகிழ்ச்சி

தொடர்ந்து தனது மோசமான அறிக்கைகளால், தமிழகத்தில் ‘ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு’ என்று இருந்த ஒரு முழமையான நிலையை மாற்றினார் ஜெயலலிதா. ஜெயலலிதாவின் அறிக்கைக்கு பதில் அளிக்கும் வகையில் - வைகோ, கண்ணப்பன், இயக்குநர்கள் சீமான், அமீர் போன்றவர்களை கைது செய்திருக்கிறது தமிழக அரசு.
பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக நடைபெற்ற ஆர்ப்பாட்டங்கள், ‘கைதானவர்களை விடுதலை செய்’ என்கிற நிலைக்கு மாறியிருக்கிறது. இது ஜெயலலிதாவின் தந்திரமான சாமார்த்தியத்திற்கு கிடைத்த வெற்றி. ஈழத்தமிழர்களுக்குக் கிடைத்திருக்கிற இன்னொரு மாபெரும் துயரம். (உணர்ச்சிவசப்பட்டு பேசியவர்களின் பேச்சும், ஒரு வகையில் ஜெயலலிதாவின் சதிக்கு சாதகமாக அமைந்து விட்டது)
ஜெயலலிதாவின் பேச்சைக் கேட்டு, தமிழக அரசு எடுத்த ‘சீமான்-அமீர் கைது நடவடிக்கை’, ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக, இதுகாறும் தமிழக அரசு செய்த முயற்சிகளுக்கு பெரிய முட்டுக்கட்டையாக மாறியிருக்கிறது. ‘ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக பேசுவதுகூட பிரச்சினைக்குரியதோ’ என்கிற அச்சம் பொது மக்களிடம் உருவாகியிருக்கிறது.
‘கருணாநிதியே ஆட்சியை ராஜினமா செய்’ என்ற ஜெயலலிதாவின் ஆசையை நிராகரித்த முதல்வர், ‘சீமான்-அமீரை கைது செய்’ என்ற ஜெயலலிதாவின் கோரிக்கையையும் நிராகரித்து இருக்க வேண்டும். ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான சூழலை குலைத்த, குலைக்கிற ஜெயலலிதாவிற்கு துணைபோகாமல், உடனடியாக ‘சீமான், அமீரை’ தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும்.
சமீபமாக ஜெயலலிதா ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக எந்த அறிக்கையும் தராமல், ‘விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள்’ என்று குழுப்பத்தை ஏற்படுத்தும் அறிக்கையை தொடர்ந்து தந்து கொண்டிருக்கிறார் என்பது கவனிக்கத்தக்கது.
நடிகர் வடிவேலு ஒரு படத்தில், ‘எவ்வளவு அடிச்சாலும் தாங்குறான். இவன் ரொம்ப நல்லவன்’ என்று வசனம் பேசுவார். அதுபோல் யார் ஆட்சிக்கு வந்தாலும், வைகோவை கைது செய்வது பரிதாபத்திற்குரியது. கைது செய்யப்பட்ட வைகோ, கண்ணப்பனையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.
***
தமிழக அரசின் முயற்சியால், சிங்கள ராணுவத் தாக்குதலால் பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்க ஒத்துக் கொண்டிருக்கிறது, இலங்கை அரசு. நேற்றுவரை ‘அப்பாவி தமிழர்கள் தாக்கப்படவில்லை’ என்று ஆணித்தரமாக பொய் சொல்லிக் கொண்டிருந்த ராஜபக்சே, இப்போது இந்த நடவடிக்கையால் தமிழர்கள் தாக்கப்படுகிறார்கள் என்பதை ஒத்துக் கொண்டிருக்கிறார்.
சிங்கள ராணுவத்தின் வன்முறையை, மனித உரிமை மீறலை இதையே ஒரு ஆதாரமாகக் கொண்டு, ‘போரை நிறுத்த வேண்டும்’ என்று இலங்கை அரசுக்கு இந்தியா கடுமையன நெருக்குதலை தரவேண்டும். இல்லையேல், இலங்கை ராணுவம் தமிழர்களின் மீது தொடர்ந்து தாக்குதல்கள் நடத்திக் கொண்டே இருக்கும், நாம் இங்கிருந்து நிவாரணப் பொருட்கள் அனுப்பிக் கொண்டே இருப்போம், என்பது அவலத்திற்குரியது.
‘ஈழத் தமிழர்களுக்கு நிவாரணப் பொருட்கள்’ என்கிற இந்த முயற்சி, குண்டடிப்பட்ட ஈழத் தமிழர்களுக்கு கொஞ்சம் மூச்சு விட உதவும். ஆனால், தமிழர்களை சிங்கள ராணுவத்தின் குண்டுகளிலிருந்து இது காப்பாற்றாது.
40 பேரின் எம்பி பதிவியை வேண்டுமானால் காக்ககுமே தவிர, இது நிலையான, நிம்மதியான வாழ்க்கையை ஈழமக்களுக்கு வழங்காது. அதற்கு ஒரே தீர்வு போர் நிறுத்தம் மட்டும்தான்.

-வே. மதிமாறன்

வலைப்பதிவு காப்பகம்