சனி, 21 பிப்ரவரி, 2009

வழக்கறிஞர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் - தமிழகத்தில் ராமராஜ்ஜியம்தான் நடக்கிறது...



அரண்மனையின் வாசலில் பிணத்தைக் கிடத்திவிட்டுக் கதறி அழுதான். தன் பிள்ளையின் சாவுக்கு ராமனே காரணமென நிந்தித்தான். மன்னனின் ஆட்சியில் படிந்திட்ட பாவந்தான் தன் மகனின் மரணத்திற்குக் காரணம் என்றான். மனம் போனபடி, பழித்தான், சபித்தான். குற்றவாளியைப் பிடித்துத் தணடித்துச் செத்துப்போன தன் மகனைப் பிழைக்கச் செய்யாவிட்டால் அரண்மனை வாசலிலேயே பட்டினப் போர் நடத்தித் தற்கொலை செய்து கொள்வேன் என்று அச்சுறுத்தினான். அதைக்கேட்டு நாரதன் உட்பட அறிவார்ந்த எட்டு ரிஷிகளுடன் ராமன் கலந்தாலோசித்தான். அந்த அறிஞர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் - நாட்டு மக்களுள் அதாவது ராம ராஜ்ஜியத்தல் யரோ ஒரு சூத்திரன் தவம் செய்து கொண்டிருப்பதாகவும் அச்செயல் தருமத்திற்கு எதிரானது என்றும் நாரதன் சொன்னான். தரும (புனித) சட்டங்களின்படி பிராமணர்கள் மட்டுமே தவம் செய்யலாம். பிராமணர்களுக்குச் சேவகம் செய்வதே சூத்திரர்களுடைய கடமை என்று மேலும் நாரதன் கூறினான். தருமத்திற்கு எதிராக ஒரு சூத்திரன் தவம் செய்வது பெரும் பாவம், குற்றம் என்று ராமன் திடமாய் நம்பினான். உடனே தன் தேரில் ஏறி நாட்டைச் சுற்றிவந்தான். அடர்ந்த காட்டுப் பகுதியில் ஒருவன் கடினமானதொரு தவத்திலாழ்ந்திருப்பதைக் கண்டான். இராமன் அவனைநோக்கிப் போனான். அந்தத் தவம் செய்து கொண்டிருந்தவன் தான் சம்பூகன் என்னும் சூத்திரனா-? மனித உருவிலேயே மோட்சத்திற்குச் செல்லத்தவம் செய்பவனா? என்று கூடக் கேட்டறியாமல், விசாரணையோ, எச்சரிக்கையோ, உண்மை நியாயத்தை அறிந்திடும் நோக்கமோ இன்றி சம்பூகனின் தலையைச் சீவிவிட்டான் ராமன். அதே நொடியில் எங்கே தொலை தூரத்து அயோத்தியில் அகாலமரணமைடைந்த பிராமணனின் மகன் மீண்டும் உயிர் பெற்றானாம். கடவுள்களெல்லாம் மன்னன், ராமனின் மீது மலர் தூவி மகிழ்ந்தார்களாம். ……………………………………………. சம்பூகனை கொன்ற நற்செயலைப் பாராட்டி தெய்வ மகிமையுள்ள காப்பு ஒன்றை அகத்தியன் ராமனுக்குப் பரிசாய் அளித்தான்.’ - அயோத்தியில் நடந்த ராமனின் ஆட்சியைப் பற்றி டாக்டர் அம்பேத்கர். *** ‘சுப்பிரமணிய சுவாமி என்கிற ஒரு பார்ப்பனர், தமிழர்களுக்கு எதிராக இருக்கிறார் என்பதால் சில வழக்கறிஞர்கள் அவரை அடித்துவிட்டார்கள்’ என்று சொல்லப்பட்டது. உடனே, பார்ப்பனப் பத்திரிகைகள், பார்ப்பன ஆதரவாளர்கள், “தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது. இந்த ஆட்சியில் யாருக்கும் (பார்ப்பனர்களுக்கு) பாதுகாப்பில்லை. இந்த ஆட்சியை உடனடியான கலைக்க வேண்டும்.” என்று மனம் போனபடி, பழித்தார்கள், சபித்தார்கள். மருத்துவனையில் இருக்கும் முதல்வர் சு. சுவாமி என்கிற ஒரு பார்ப்பனர் மீது நடந்த தாக்குதலை நினைத்து மிகவும் மனம் வருந்தி, தனது அறிவார்ந்த குழுக்களிடம், கலந்தாலோசித்து இருக்கிறார். பிறகு அதன் விளைவு, சென்னை உயர்நீதி மன்றத்தில், சரியாக மூன்று மணிக்கு ஆரம்பித்திருக்கிறது. சுப்பிரமணிய சுவாமியை உண்மையில் தாக்கினார்களா? தாக்கியது இந்த வக்கீல்கள்தானா? என்று கூடக் கேட்டறியாமல், விசாரணையோ, எச்சரிக்கையோ, உண்மை நியாயத்தை அறிந்திடும் நோக்கமோ இன்றி ஏறக்குறை 1000 அதிரடி ‘காவல்’ துறையினரால், வழக்கறிஞர்கள் சுற்றி வளைக்கப்பட்டு, சரமாரியாக தாக்கப்பட்டார்கள். தலை, கால், கை உடைந்து பல வழக்கறிஞர்கள் மருத்துவமனையில் கிடத்தப்பட்டார்கள். வழக்கறிஞர்களைத் தாக்கிய ‘காவல் துறை’ யின் இந்த ‘நற்செயலை’ பார்ப்பனப் பத்திரிகைகள், பார்ப்பன ஆதரவாளர்கள் பாராட்டி மலர் தூவி வாழ்த்துகிறார்கள். சம்பூகனை கொன்றதும் உயர்தெழுந்த பார்ப்பனச் சிறுவனைப் போல், வழக்கறிஞர்கள் மீது போலீஸ் கொலை வெறி தாக்குதல் நடத்தி முடித்த உடன், சுப்பிரமணிய சுவாமி, மகிழ்ச்சி அடைந்து, காவல்துறையின் ‘நற்செயலை’ பாராட்டியும், வழக்கறிஞர்களை ‘மாமா பயல்கள்’ என்றும் என்று கண்ணியமான வார்த்தையாலும் பேசியிருக்கிறார்.(சி.என்.என். தொலைக்காட்சி) நடிகர் ‘சோ’ அகத்தியனைப்போல் மகிழ்ச்சியடைந்திருக்கிறார். தெய்வ மகிமையுள்ள 


காப்பை முதல்வரின் கையில், கட்டுவாரா? தெரியவில்லை. ராமாயண ஆட்சி அல்லது காட்சி மீண்டும் நடந்திருக்கிறது சில ஆண்டுகளுக்கு முன்னால், முதல்வர் ஸ்ரீராமனை, கடுமையாக விமர்சித்துவிட்டார் என்று வேதாந்தி என்கிறவன், அவர் தலையை வெட்டச் சொன்னான். ஸ்ரீராமன், தன்னை தானே விமர்சித்து பேசிக் கொள்வதற்குக்கூடவா உரிமையில்லை. சாட்சாத் ஸ்ரீராமபிரான்தான் தமிழகத்து முதல்வராக இருக்கிறார். முட்டாள் வேதாந்தி. நீ என்ன ராம பக்தன்?. -வே. மதிமாறன் 

வலைப்பதிவு காப்பகம்