![]() தமிழ் ஈழத்தில் - சிங்கள ராணுவம் - தமிழர்களை இனப்படுகொலை செய்வது நாளுக்கு நாள் தீவிரமாகி வருகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தையே சூறை யாடி, தமிழர்களை கொன்று குவித்த இராணுவம், சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள், ஜ.நா. பார்வையாளர்கள், தொண்டு நிறுவனங்கள் அனைத்தையும் வெளியேற்றிவிட்டது. |
விடுதலைப் புலிகளின் முழுமையான நிர்வாகத்தின் கீழ் வாழ்ந்து கொண்டிருந்த வன்னிப் பிரதேச மக்கள் மீதும் குண்டு வீசத் தொடங்கிவிட்டது. யாழ்ப்பாணத்தில் 5 மாவட் டங்களிலிருந்து தமிழ் மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறி வருகிறார்கள். சொந்த மண்ணிலேயே "புலம் பெயர்ந்த உள்நாட்டு அகதிகளாக" வெட்ட வெளியில் கொட்டும் மழையில் முகாம்களில் வாழ்க்கையோடு போராடிக்கொண்டிருக்கிறார்கள். இந்தியாவின் பார்ப்பனியம் - தமிழர் படு கொலைக்கு துணைப் போகும் நிலையில் தமிழர்களின் நிலை மிக மோசமடைந்து வரும் ஆபத்தை உணர்ந்த அய்.நா.வின் மனித உரிமைக் குழு, உடனடியாக தமிழர்களுக்கு உதவிடும் மனிதாபிமான நட வடிக்கைகளை மேற்கொள்ள ராஜபக்சேயிடம் அனுமதி கேட்டுப் போராடி, உணவு, மருந்துப் பொருள்களுடன், யாழ்ப்பாணப் பகுதிக்கு விரைந் துள்ளது. யாழ்ப்பாணத்தை பிறப் பகுதிகளுடன் இணைக்கும் ஒரே தரை வழிப் பாதையான ஏ-9 நெடுஞ்சாலைப் பாதையைக் கடந்த ஆகஸ்டு 2006 இல் மூடிய சிங்களப் பேரினவாத அரசு, அதற்குப் பிறகு திறக்கவே இல்லை. இப்போதுதான் முதல் முறையாக அய்.நா.வின் நிவாரண உதவிக் குழுக்களுக்காக 'மனமிறங்கி' திறந்துவிட்டுள்ளது. 51 லாரிகளில் 800 மெட்ரிக் டன் எடையிலான உணவு மருந்துப் பொருள்கள். அதன் வழியாக கடந்த 2 ஆம் தேதி சென்றுள்ளன. இந்த நிவாரணப் பொருள்களை ஏற்றிச் சென்ற லாரிகள் அனைத்துமே இலங்கை அரசு ஏற்பாடு செய்தவையாகும். இதில் 9 லாரிகளில் வெடிப் பொருள்களும் ஏற்றி அனுப்பப்பட்டுள்ளதை ஜ.நா.வின் குழு கண்டறிந்து அதிர்ச்சியடைந்து, தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. சமாதானப் பேச்சுக்கு வழி வகுத்த நோர்வே நாடு, தனது அரசு செலவிலேயே கிளிநொச்சியில் 'சமாதான தூதரகம்' ஒன்றை பெரிய அளவில் கட்டித் தந்தது. அந்த சமாதான தூதரகத்தையே இப்போது சிங்கள ராணுவம் குண்டு வீசி தரைமட்டமாக்கிவிட்டது. சமாதான தூதரகத்துக்கு நேர் எதிரே அமைந்திருந்த, விடுதலைப் புலிகன் அரசியல் தலைமையகமும், அதே நாளில் சிங்களக் குண்டுவீச்சுக்கு பலியாகி தரை மட்டமாக்கப்பட்டுவிட்டது. சமாதானத் தூதரகத்தை தகர்த்து - இனி சமரசப் பேச்சே கிடையாது என்பதை சிங்கள அரசு உணர்த்திவிட்டது. இந்தியாவின் ஆயுதங்களோடும், இந்திய ராணுவத்தைச் சார்ந்த பொறியாளர்களின் நேரடி ஆலோசனைகளோடும் இந்த இனப் படுகொலைகள் ஒவ்வொரு நாளும் தொடருகின்றன. |
புதன், 5 நவம்பர், 2008
ஈழத் தமிழர்களின் அவலங்களுக்கு அரசியல் முலாம் பூசாதீர்! இந்தியாவின் பச்சைத் துரோகம்!
ரஜினி-கமலின் ‘இன உணர்வு’ அல்லது ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்
இதற்கு முன்பு தமிழர்களுக்கு எதிராக வன்முறை செய்த கன்னடர்களை விமர்சிக்காமல் இருந்ததற்குக் காரணம், கர்நாடகாவில் இவர் படம் ஓட வேண்டும் என்பதுதற்காகத்தான். ஒக்கேனக்கல் பிரச்சினையின் போது, நிர்பந்தத்தின் காரணமாக, மேடையில் சத்யராஜ் போன்றவர்களின் மிக நேரடியான குற்றச்சாட்டின் நெருக்கடியின் காரணமாக கன்னடர்களை ரஜினி திட்டிப் பேசினார்.
அதன் விளைவாக ‘குசேலன்’ பட வெளியிட்டின் போது கன்னடர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், கன்னடர்களை திருப்தி படுத்துவதற்காக மன்னிப்பும் கேட்டார். அந்த மன்னிப்பின் மறுபக்கம், தமிழகத்தில் ரஜினி ரசிகர்கள் கணிசமான பிரிவினர் ‘அவனா நீ?’ என்று குசேலன் படத்தை புறக்கணித்தனர். (பி. வாசுவும் படத்தில் தன் பங்களிப்பை கணிசமாக செய்திருந்தார்.)
அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதையாக போய்விடுமோ என்ற பயத்தில்தான் ரஜினியின் இந்த கன்னட எதிர்ப்பு வீர வசனமும். ஈழத் தமிழர்கள் மீதான சென்டிமென்ட்டும்.
இதே காரணங்களுக்காகத்தான் நமது ‘உலக நாயகன்’ (என்ன கொடுமை சரவணன்) கமல்ஹாசன், தமிழர் பிரச்சினைகளுக்காக எந்த மேடையில் ஏறி பேசினாலும், பட்டும் படாமலும் ரொம்ப உஷாராக, ஒரு அத்துவைதியை போல் பேசுகிறார். (அய்யங்கார இருந்துக் கிட்டு அத்துவைதைத்தை ஆதரிக்கிறாரு, என்ன பெருதன்மை!)
‘தமிழன் என்கிற குறுகிய எண்ணத்தோடு….’ என்று கமல் பேசியதற்கு அர்த்தம், உண்மையிலேயே அவர் தன்னை உலக நாயகன் என்று நினைத்துக் கொண்டு பேசினார் என்று அர்த்தமாகாது.‘அது சும்மா தமாசு’ என்பது அவருக்கே தெரியும். வேறு மொழிகளிலும், பிற மாநிலங்களிலும் அவருடைய படங்கள் டப்பிங் செய்யப்படுகிறது, நேரடியாக வெளியாகிறது என்பதுதான் அதற்கு அர்த்தம்.
கமலின் முந்தைய சாமார்த்தியமான அந்தப் பேச்சினால்தான் கர்நாடகத்தில், ‘குசேலனுக்கு’ வந்த எதிர்ப்பு ‘தசாவதாரம்’ என்கிற அய்யங்கார் அரசியல் படத்துக்கு வரவில்லை. (அய்யங்கார் மேன்மையை வலியுறுத்தியதால்தான் அந்தப் படத்தின் மீது அய்யர்களுக்குக்கூட கோபம். சில அய்யர்கள் பார்ப்பன எதிர்ப்பாளர்கள் போன்ற போர்வையில் அந்தப் படத்தை கடுமையாக எதிர்த்தார்கள்.)
ஆக, ரஜினி - கமல் இருவருக்கும் கன்னடர், தமிழர் என்கிற இன உணர்வெல்லாம் கிடையாது. அவர்களிடம் ‘பண உணர்வு’ மட்டும்தான் இருக்கிறது.
‘ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்’ என்று அவர்களின் ‘கொள்கைகளை’ வைத்துதான் தலைப்பிட்டேன். மற்றப்படி கே. பாலசந்தரை நான் ‘குட்டை’ என்று சொல்லிவிட்டதாக அர்த்தப்படுத்திக் கொண்டால், அதற்கும் நான் பொறுப்பல்ல.
அதேபோல், ‘தமிழன் என்பது குறுகிய எண்ணம், அய்யங்கார் என்பது பரந்த எண்ணமா?’ என்று கேள்வி கேட்காதீர்கள்.
-வே. மதிமாறன்
ஞாயிறு, 2 நவம்பர், 2008
இந்திய- இலங்கை அரசுகளைக் கண்டித்து பெரியார் திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம்
சனி, 1 நவம்பர், 2008
இலங்கை தோல்வியை எற்றுக் கொள்ள வேண்டும்-நடிகர் ரஜினி
வெள்ளி, 31 அக்டோபர், 2008
ஈழத் தமிழர்களும் சினிமாவின் அட்டைக் கத்தி வீரர்களும்
கடந்த பல ஆண்டுகளாக நடைபெறும் இலங்கை யுத்தத்தின் காரணமாக, இலங்கை வாழ் ஈழ மக்கள் மிக பெருவாரியாக ஈழத்திலிருந்து வெளியேறி, உலக நாடுகள் முழுக்க பரவினார்கள். அப்படி புலம் பெயர்ந்து மிகுந்த சிரமப்பட்டு ஒரு மரியாதைக்குரிய வாழக்கை நிலையை அமைத்துக் கொண்ட ஈழத்தமிழர்கள், தமிழகத்திலிருந்து இரண்டு மிக மோசமான விஷயங்களை உலகம் முழுக்க கொண்டு சேர்த்தார்கள்.
ஒன்று தமிழ் சினிமா.இரண்டு ஜோதிடம்.
உலகத்தின பல நாடுகளின் தியைரங்குகளில் தமிழ்சினிமா திரையிடப்பட்டதே, ஈழத் தமிழர்கள் உலகம் முழுக்க குடியேறிதற்குப் பிறகே. தமிழ் சினிமாவின் வர்த்தகத்தில் ‘பாடல் ஒலித்தகடு, திரையரங்கில் திரைப்படம் திரையீடு, திரைப்பட சிடி விற்பனை’ என்று பல கோடிகள், ஏறக்குறை 25 சதவீதம் ஈழத்தமிழர்களின் பாக்கெட்டில் இருந்துதான் பிடுங்கப் படுகிறது. இதுபோக இந்தத் தமிழ் சினிமாவின் ஊதாரிகள் பலருக்கு, இன்ப சுற்றுலா, நட்சத்திர இரவு (கலை நிழ்ச்சியாம்) என்று நிகழ்ச்சி நடத்தி அதில் வேறு பணம்.
அநேகமாக ஈழத்தில் சிங்கள ராணுவத்தை எதிர்த்து போராடுகிற போராளிகளுக்கு இவர்கள் செய்த உதவிகளைவிட தமிழ் சினிமா ஊதாரிகளுக்கு இவர்கள் செய்த உதவிகள் நிச்சயம் அதிகம் இருக்கும்.
பெண்களை, தாழ்த்தப்பட்ட மக்களை மிக கேலமாக சித்தரிக்கும் - ஜோதிடம் என்கிற ஒரு மனிதகுல வீரோத மூடநம்பிக்கையின் மீது, தமிழக தமிழர்களைவிட ஆழ்ந்தப் பற்றுக் கொண்ட ஈழத் தமிழர்கள் பலர், தமிழ்நாட்டில் இருந்து பல ஜோதிடர்களை வெளிநாட்டிற்கு வரவைத்து அவர்களுக்கு ராஜ உபச்சாரம் செய்து, ஏரளாமான பணம் கொடுத்திருக்கிறார்கள். கொடுக்கிறார்கள்.
தமிழர்களின் பேராதரவின் காரணமாக பல ஜோதிடர்கள், ‘காலை ஜப்பானில் காபி, மாலை நியூயார்க்கில் காபேர’ என்று உலல்லாச வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ‘ஈழம் எப்போது அமையும்?’ என்று போராளிகளை நம்புவதை விட, ஜோதிடர்களை நம்புகிறவர்களும் இருக்கிறார்கள்.
ஈழத்தமிழர்கள் சிங்கள ராணுவத்தால் படுகொலை செய்யப்படுவதை, ஈழத்தமிழர்களால் பெரும் லாபம் அடையும் மேற் சொன்ன இருவரும், வாய் திறந்து கருத்து சொல்லக் கூட மறுக்கிறார்கள்.
ஜோதிடர்கள் மோசடிப் பேர்வழிகள் என்பது நேரடியாக தெரிந்ததே. அவர்களுக்கு ‘நேரம் சரியில்லை’ என்று கூட புரிந்த கொள்ளலாம். ஆனால் சினிமாவையும் தாண்டி பல்வேறு சமூக பிரச்சினைகளில் அக்கறை உள்ளவர்களாக காட்டிக் கொள்கிற சினிமாக்காரர்களை அப்படி ஒரே வார்த்தையால் வரையறுக்க முடியாது.
***
சினிமாக்காரர்களில் இயக்குநர் சீமான் முயற்சியால், இயக்குநர் பாரதிராஜா தலைமையில் கலந்து கொண்டவர்களைத் தவிர, வேறு யாரும் தன்னிச்சையாய் அறிக்கைக் கூட தரவில்லை. (இயக்குநர் மணிரத்தினம் இதிலும் கலந்து கொள்ளவில்லை.)
நடிகர்கள் அதிலும் குறிப்பாக நாடாள ஆசைப்படும் நடிகர்கள் விஜயகாந்த், ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்ற முத்திய அல்லது மூத்த நடிகர்கள் யாரும் சுயமாக வாய் திறக்கவில்லை. சாதாரண விஷயத்திற்குக்கூட ஊர் நியாயம் பேசுகிற இவர்கள், தமிழர்கள் தாக்கப்படுவதை ஒரு மனிதாபிமான அடிப்படையில் கூட கண்டிக்கவில்லை.
ஒக்கேனேக்கல் விவகாரத்தில் சத்யராஜ் பேச்சை, ஏளனம் செய்து, நாகரீகமற்ற பேச்சாக கண்டித்து, ‘வன்முறை தீர்வாகாது. அவர்களை போல் நாம் நடந்து கொள்ளக்கூடாது.’ என்று ஜென்டில்மேன் போல் வசனம் பேசினார் கமல்ஹாசன். அதற்கு முன்பு தன்னுடைய ‘ஹேராம்’ திரைப்படம் வெளியானபோது, திருட்டு விசிடியை எதிர்த்து சென்னை பாரிமுனையில் ரோட்டில் இறங்கி ‘துணிச்சலாக’ சண்டை போட்டவர்தான் இவர். இந்த மிஸ்டர் கிளினும் நாகரிகமான முறையில் கூட தனது கண்டனத்தை ஈழத் தமிழர்கள் பிரச்சினையில் தெரிவிக்கவில்லை.
கர்நாடகத்தை ஒரு பெரிய ‘மார்க்கெட்டாக’ நினைத்து நடுக்குகிற இந்த நடிகர்கள், அதைவிட மிகப் பெரிய அளவில் தமிழர்களிடம் வர்த்தகம் நடத்திக் கொண்டே, தமிழர்களின் பிரச்சினைக்கு ஒரு கண்டனத்தை கொடுக்கக் கூட தயங்குகிறார்கள் இந்த அட்டைக் கத்தி வீரர்கள்.
இந்த டூப் நாயகர்கள், கும்பல் கூடி நவம்பர் 1 அன்று ஊமைபோல் இவர்கள் இருக்கபோகும் அடையாள உண்ணாவிரதம், இவர்களின் நடிப்புத் திறமைக்கு சிறந்த சான்றாகத்தான் இருக்கும்.
ஈழத் தமிழர்களின் பிரச்சினையிலும் நடிகர்களாக நடந்து கொள்ளும் இவர்களின் படங்களை வாங்கி இனி திரையிடுவதில்லை, இவர்களை அழைத்து இனி ‘கலை’ நிகழ்சிகள் நடத்துவதில்லை என்று உலகெங்கும் வாழம் தமிழர்கள் முடிவெடுக்க வேண்டும். குறிப்பாக மலேசியாவில் உள்ள தமிழர்களும் இந்த எதிர்ப்பில் இணைந்து கொள்ள வேண்டும். இன்ப சுற்றுலாவிற்கும், படப்பிடிப்பிற்கும் வரும் இவர்களை அங்கிருந்த விரட்ட வேண்டும். இது உலகெங்கும் வாழும் ஈழத்தமிழர்கள், தன் தாயக ஈழத்தமிழர்களுக்கு செய்யும் பேருதவியாகத்தான் கருத்தப்படும். இந்தப் பேருதவியை செய்வார்களா ? அல்லது ரஜினியின் எந்திரனுக்காக காத்திருப்பார்களா? அல்லது ஜோதிடர்களை கேட்டு முடிவெடுப்பார்களா? பார்ப்போம்.
-வே. மதிமாறன்
மதி-பதில்
பதில்: குடும்பம் என்ன கதியாகுமோ அது எனக்குத் தெரியாது எப்படிப் பார்த்தாலும் நிச்சயம் திருமணம் பெண்களுக்கு எதிரானது தான். செக்ஸ்ல ஈடுபடுவதற்கு ஒரு பெண் பணம் கேட்டா அது விபச்சாரம். ஆம்பளை பணம் கேட்டா, அது கல்யாணமா? - வே.மதிமாறன்
செவ்வாய், 28 அக்டோபர், 2008
ஜெயலலிதாவின் சூழ்ச்சி - காங்கிரசின் மகிழ்ச்சி
பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக நடைபெற்ற ஆர்ப்பாட்டங்கள், ‘கைதானவர்களை விடுதலை செய்’ என்கிற நிலைக்கு மாறியிருக்கிறது. இது ஜெயலலிதாவின் தந்திரமான சாமார்த்தியத்திற்கு கிடைத்த வெற்றி. ஈழத்தமிழர்களுக்குக் கிடைத்திருக்கிற இன்னொரு மாபெரும் துயரம். (உணர்ச்சிவசப்பட்டு பேசியவர்களின் பேச்சும், ஒரு வகையில் ஜெயலலிதாவின் சதிக்கு சாதகமாக அமைந்து விட்டது)
ஜெயலலிதாவின் பேச்சைக் கேட்டு, தமிழக அரசு எடுத்த ‘சீமான்-அமீர் கைது நடவடிக்கை’, ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக, இதுகாறும் தமிழக அரசு செய்த முயற்சிகளுக்கு பெரிய முட்டுக்கட்டையாக மாறியிருக்கிறது. ‘ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக பேசுவதுகூட பிரச்சினைக்குரியதோ’ என்கிற அச்சம் பொது மக்களிடம் உருவாகியிருக்கிறது.
‘கருணாநிதியே ஆட்சியை ராஜினமா செய்’ என்ற ஜெயலலிதாவின் ஆசையை நிராகரித்த முதல்வர், ‘சீமான்-அமீரை கைது செய்’ என்ற ஜெயலலிதாவின் கோரிக்கையையும் நிராகரித்து இருக்க வேண்டும். ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான சூழலை குலைத்த, குலைக்கிற ஜெயலலிதாவிற்கு துணைபோகாமல், உடனடியாக ‘சீமான், அமீரை’ தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும்.
சமீபமாக ஜெயலலிதா ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக எந்த அறிக்கையும் தராமல், ‘விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள்’ என்று குழுப்பத்தை ஏற்படுத்தும் அறிக்கையை தொடர்ந்து தந்து கொண்டிருக்கிறார் என்பது கவனிக்கத்தக்கது.
நடிகர் வடிவேலு ஒரு படத்தில், ‘எவ்வளவு அடிச்சாலும் தாங்குறான். இவன் ரொம்ப நல்லவன்’ என்று வசனம் பேசுவார். அதுபோல் யார் ஆட்சிக்கு வந்தாலும், வைகோவை கைது செய்வது பரிதாபத்திற்குரியது. கைது செய்யப்பட்ட வைகோ, கண்ணப்பனையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.
***
தமிழக அரசின் முயற்சியால், சிங்கள ராணுவத் தாக்குதலால் பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்க ஒத்துக் கொண்டிருக்கிறது, இலங்கை அரசு. நேற்றுவரை ‘அப்பாவி தமிழர்கள் தாக்கப்படவில்லை’ என்று ஆணித்தரமாக பொய் சொல்லிக் கொண்டிருந்த ராஜபக்சே, இப்போது இந்த நடவடிக்கையால் தமிழர்கள் தாக்கப்படுகிறார்கள் என்பதை ஒத்துக் கொண்டிருக்கிறார்.
சிங்கள ராணுவத்தின் வன்முறையை, மனித உரிமை மீறலை இதையே ஒரு ஆதாரமாகக் கொண்டு, ‘போரை நிறுத்த வேண்டும்’ என்று இலங்கை அரசுக்கு இந்தியா கடுமையன நெருக்குதலை தரவேண்டும். இல்லையேல், இலங்கை ராணுவம் தமிழர்களின் மீது தொடர்ந்து தாக்குதல்கள் நடத்திக் கொண்டே இருக்கும், நாம் இங்கிருந்து நிவாரணப் பொருட்கள் அனுப்பிக் கொண்டே இருப்போம், என்பது அவலத்திற்குரியது.
‘ஈழத் தமிழர்களுக்கு நிவாரணப் பொருட்கள்’ என்கிற இந்த முயற்சி, குண்டடிப்பட்ட ஈழத் தமிழர்களுக்கு கொஞ்சம் மூச்சு விட உதவும். ஆனால், தமிழர்களை சிங்கள ராணுவத்தின் குண்டுகளிலிருந்து இது காப்பாற்றாது.
40 பேரின் எம்பி பதிவியை வேண்டுமானால் காக்ககுமே தவிர, இது நிலையான, நிம்மதியான வாழ்க்கையை ஈழமக்களுக்கு வழங்காது. அதற்கு ஒரே தீர்வு போர் நிறுத்தம் மட்டும்தான்.
-வே. மதிமாறன்