இதற்கு முன்பு தமிழர்களுக்கு எதிராக வன்முறை செய்த கன்னடர்களை விமர்சிக்காமல் இருந்ததற்குக் காரணம், கர்நாடகாவில் இவர் படம் ஓட வேண்டும் என்பதுதற்காகத்தான். ஒக்கேனக்கல் பிரச்சினையின் போது, நிர்பந்தத்தின் காரணமாக, மேடையில் சத்யராஜ் போன்றவர்களின் மிக நேரடியான குற்றச்சாட்டின் நெருக்கடியின் காரணமாக கன்னடர்களை ரஜினி திட்டிப் பேசினார்.
அதன் விளைவாக ‘குசேலன்’ பட வெளியிட்டின் போது கன்னடர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், கன்னடர்களை திருப்தி படுத்துவதற்காக மன்னிப்பும் கேட்டார். அந்த மன்னிப்பின் மறுபக்கம், தமிழகத்தில் ரஜினி ரசிகர்கள் கணிசமான பிரிவினர் ‘அவனா நீ?’ என்று குசேலன் படத்தை புறக்கணித்தனர். (பி. வாசுவும் படத்தில் தன் பங்களிப்பை கணிசமாக செய்திருந்தார்.)
அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதையாக போய்விடுமோ என்ற பயத்தில்தான் ரஜினியின் இந்த கன்னட எதிர்ப்பு வீர வசனமும். ஈழத் தமிழர்கள் மீதான சென்டிமென்ட்டும்.
இதே காரணங்களுக்காகத்தான் நமது ‘உலக நாயகன்’ (என்ன கொடுமை சரவணன்) கமல்ஹாசன், தமிழர் பிரச்சினைகளுக்காக எந்த மேடையில் ஏறி பேசினாலும், பட்டும் படாமலும் ரொம்ப உஷாராக, ஒரு அத்துவைதியை போல் பேசுகிறார். (அய்யங்கார இருந்துக் கிட்டு அத்துவைதைத்தை ஆதரிக்கிறாரு, என்ன பெருதன்மை!)
‘தமிழன் என்கிற குறுகிய எண்ணத்தோடு….’ என்று கமல் பேசியதற்கு அர்த்தம், உண்மையிலேயே அவர் தன்னை உலக நாயகன் என்று நினைத்துக் கொண்டு பேசினார் என்று அர்த்தமாகாது.‘அது சும்மா தமாசு’ என்பது அவருக்கே தெரியும். வேறு மொழிகளிலும், பிற மாநிலங்களிலும் அவருடைய படங்கள் டப்பிங் செய்யப்படுகிறது, நேரடியாக வெளியாகிறது என்பதுதான் அதற்கு அர்த்தம்.
கமலின் முந்தைய சாமார்த்தியமான அந்தப் பேச்சினால்தான் கர்நாடகத்தில், ‘குசேலனுக்கு’ வந்த எதிர்ப்பு ‘தசாவதாரம்’ என்கிற அய்யங்கார் அரசியல் படத்துக்கு வரவில்லை. (அய்யங்கார் மேன்மையை வலியுறுத்தியதால்தான் அந்தப் படத்தின் மீது அய்யர்களுக்குக்கூட கோபம். சில அய்யர்கள் பார்ப்பன எதிர்ப்பாளர்கள் போன்ற போர்வையில் அந்தப் படத்தை கடுமையாக எதிர்த்தார்கள்.)
ஆக, ரஜினி - கமல் இருவருக்கும் கன்னடர், தமிழர் என்கிற இன உணர்வெல்லாம் கிடையாது. அவர்களிடம் ‘பண உணர்வு’ மட்டும்தான் இருக்கிறது.
‘ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்’ என்று அவர்களின் ‘கொள்கைகளை’ வைத்துதான் தலைப்பிட்டேன். மற்றப்படி கே. பாலசந்தரை நான் ‘குட்டை’ என்று சொல்லிவிட்டதாக அர்த்தப்படுத்திக் கொண்டால், அதற்கும் நான் பொறுப்பல்ல.
அதேபோல், ‘தமிழன் என்பது குறுகிய எண்ணம், அய்யங்கார் என்பது பரந்த எண்ணமா?’ என்று கேள்வி கேட்காதீர்கள்.
-வே. மதிமாறன்