கூட்டுறவு வாழ்க்கை பிறருக்கு நாம் எவ்வாறு சகாயம் செய்வது, எவ்வாறு உதவி செய்வது என்பதை இலட்சியமாகக் கொண்டதேயாகும்.
நமது உடலில் பழைய தனிமைத் தத்துவ இரத்தைத்தை எடுத்துவிட்டுக் கூட்டுறவுத் தன்மை என்கிற இரத்தத்தைப் பாய்ச்ச வேண்டும்.
மனிதன் பகுத்தறிவுள்ள காரணத்தால்தான் தன் சமுதாயக் கூட்டு வாழ்க்கைக்கென்று பல திட்டங்களை வகுத்துக் கொண்டிருக்கிறான். அத்திட்டங்களை நிறைவேற்றத் தனி மனிதனால் முடியாது. அதற்கு மற்றவர் உதவி இருந்தே தீர வேண்டியிருக்கிறது.
கூட்டுறவு என்கிற கொள்கை சரியான உயரிய முறையில் நம்நாட்டில் ஏற்பட்டுவிடுமானால் மக்கள் சமூகமே சஞ்சலமற்று, நாளைக்கு என்ன செய்வதென்ற ஏக்கமின்றி, திருப்தியுடன் நிம்மதியாக-
நலமாக வாழ வழி ஏற்பட்டுவிடும்.
நாம் செலவழிப்பதில் வகைதகையற்ற முறையில் வீண் செலவு செ ய்து வருகின்றோம். கூட்டுறவு முறையில் நமது வாழ்க்கையை நடத்தினால், இன்றைய நமது செலவில் எட்டில் ஒரு பாகம் தான் செலவு ஏற்படும். பாக்கி இன்னும் ஏழு பேருக்கு உதவக் கூடியதாயிருக்கும். நம் நாட்டு நிலைமைகளை மாற்றியமைக்காவிட்டால் நம் வாழ்வு விரைவில் அதோகதியாகிவிடுமென்பது நிச்சயம்.