இந்தியாவின் 20-க்கும் அதிகமான மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் இப்பேரணியில் பங்கேற்றனர். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்பான அனைத்து இந்திய மாணவர் பெருமன்றம் இப்பேரணிக்கு ஏற்பாடு செய்திருந்தது. புதுடில்லியில் உள்ள இராமலீலா திடலில் தொடங்கிய இப்பேரணியில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
அனைத்து இந்திய மாணவர் பெருமன்றத்தின் தலைவர் உமன் ஜீனு ஜக்காரியா இப்பேரணிக்குத் தலைமையேற்றார். இலங்கை இனப்படுகொலை தொடர்பாக தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் எழுதப்பட்ட அட்டைகளையும், பதாகைகளையும் ஏந்தியவாறு நகரின் முக்கியப் பகுதிகள் வழியாக அவர்கள் ஊர்வலம் நடத்தினர். நாடாளுமன்றம் அமைந்துள்ள சாலைக்கு முன்பாக பல இடங்களில் அவர்களைக் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதற்காகத் தடுப்பு அரண்களை அவர்கள் ஏற்படுத்தினர். ஆனால் தடுப்பு அரண்களை விலக்கிவிட்டு மாணவர்கள் தொடர்ந்து பேரணியை நடத்தினர். இந்திய நாடாளுமன்றத்திற்குச் சற்று தொலைவில் பேரணியை முடித்துக் கொண்ட மாணவர்கள், இலங்கை இனப்படுகொலையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் து.ராஜா, மகளிர் சங்க செயலாளர் ஆனிராஜா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிறிலங்காவின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாசிலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்று கண்டன உரையாற்றினர்.
|