கழகப் பொதுச்செயலாளர் கோவை இராமகிருட்டிணன் சார்பில் உயர்நீதி மன்றத்தில் வழக்கறிஞர் கிளாடிஸ்டேனியல் தாக்கல் செய்த மனுவில் இடம் பெற்றுள்ள வேறு சில தகவல்கள்:
1. 1957 ஆம் ஆண்டு பதிப்புரிமை சட்டத்தின் 17 வது பிரிவின்படி பதிப்புரிமையை வழங்குவோர் வழங்கப்படுவோருக்கு கட்டாயமாக அதை எழுத்துப்பூர்வமாக தரவேண்டும். மனுதாரர் அறக்கட்டளை விதிகளில் அப்படி பதிப்புரிமை வழங்கியதற்கான பிரிவுகள் ஏதுமில்லை.
2. அறக்கட்டளை விதிகளின்படியே பதிப்புரிமை உண்டு என்று வாதிட முடியாது. காரணம் விலைக்கு வாங்கப்பட்ட சொத்துக்களுக்கு மட்டும் தான் அறக்கட்டளையே ஏற்படுத்தப் பட்டிருப்பதாகவே விதிகள் கூறுகின்றன. பெரியாரின் எழுத்தும் - பேச்சும் விலை கொடுத்து வாங்கப்பட்டவை அல்ல. அவை பெரியாரால் படைக்கப்பட்டவை. வாங்கப்பட்ட பொருளுக்காக பெரியார் உருவாக்கிய அறக்கட்டளையின் விதி 22 - பெரியாரால் படைக்கப்பட்ட அவரது எழுத்து - பேச்சுகளுக்குப் பொருந்தாது. சமூகநீதி, பெண்ணுரிமை என்று மக்களின் சமத்துவத்துக்காகப் போராடிய புரட்சிகரமான தலைவர் பெரியார்; அத்தகைய ஒரு தலைவர் தனது எழுத்துகளை தனக்காகவோ, தனது அறக்கட்டளைக்காகவோ வியாபாரமாக்க முயற்சிக்கவில்லை. அவரது வாழ்நாளில் தனது எழுத்துகளுக்காக அவர் எந்த ‘ராயல்டியும்’ பெற்றது இல்லை. தனது கருத்துகளை மக்களிடம் கொண்டு சென்று விழிப்புணர்வை உருவாக்குவதே அவரது நோக்கமாக இருந்தது.
3. பெரியாரின் எழுத்துகளுக்கான பதிப்புரிமை தனக்கே உரியது என்பதை நிரூபிக்க மனுதாரரி டம் எந்த சான்றும் இல்லை. இதில் மிக மோசமாக அவர் தோல்வியடைந்திருக்கிறார். இந்த உரிமை கோருவதற்கே தொடர்பில்லாத வராக (Stranger) - அந்நியராக அவர் இருக்கிறார். தனக்குத்தான் பதிப்புரிமை உண்டு என்பதற்கு எந்த ஆவணமும் மனுதாரர் சமர்ப்பிக்காத நிலையில் நீதிமன்றம் மனுதாரரின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்.
4. பெரியாரின் எழுத்தும் - பேச்சும் ஏற்கனவே மக்களின் சொத்தாகிவிட்டது. ஏற்கனவே பல்வேறு பதிப்பகங்கள் - பெரியார் நூல்களை வெளியிட்டு விட்டன. மனுதாரர் கடந்த காலங்களில் இந்த வெளியீடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இந்த வழக்கு கூட தனிப்பட்ட பகைமையினால் தான் மனுதாரர் தொடுத்துள்ளாரே தவிர, அவர் கூறுவதுபோல் பெரியார் எழுத்துகளுக்கு பதிப்புரிமை கோரி அல்ல.
5. மனுதாரர் கூறுவதுபோல் - பெரியார், பெண்களின் முன்னேற்றத்துக்கு மட்டும் பாடுபட்டவர் அல்ல; ஒட்டு மொத்த சமூகத்தின் சமத்துவத்துக் காகவும் அவர் பாடுபட்டுள்ளார். மனுதாரருக்கு பெரியாரின் அடிப்படை தத்துவமே தெரிய வில்லை. யுனெ°கோ நிறுவனம் வழங்கிய விருதும், புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் ‘தொண்டு செய்து பழுத்த பழம்’ பாடலுமே, பெரியார் ஒட்டு மொத்த சமூகத்தின் சமத்துவத்துக்குப் போராடியதை உணர்த்து கின்றன.
6. பெரியாரின் ஒவ்வொரு தொண்டர்களுக்கும் அவரது எழுத்துகளைப் பரப்பும் உரிமை உண்டு. பெரியாரின் தத்துவங்களை தனிநபர்களிடமோ, அல்லது நிறுவனங்களிடமோ முடக்கிவிட முடியாது. ஏதோ சில - பெரியாரின் எழுத்து களை, மனுதாரர் சேகரித்து வைத்திருப்பதாலேயே பெரியார் சிந்தனைகளுக்கு அவர் பதிப்புரிமை கோரிவிட முடியாது. வேண்டுமானால் எங்கள் அடிச்சுவட்டைப் பின்பற்றி அவர் பெரியார் சிந்தனைகளை தாராளமாக வெளியிடட்டும்.
7. நூற்றுக்கணக்கில் அச்சடித்து பத்திரிகைகள் வெளி வந்த பிறகு, அதன் பிரதிகள் எல்லோரி டமும் போய் விடுகிறது. இந்த நிலையில் தன்னிடம் இருப்பது மட்டுமே ‘ஒரிஜினல்’ என்று மனுதாரர் எப்படி உரிமை கோருகிறார் என்பது தான் புரியவில்லை. பெரியார் பத்திரிகை அவரது தொண்டர்கள் பலரிடம் இருக்கிறது. உண்மையில் மனுதாரரிடம் தான் பெரியாரின் பல பத்திரிகைள் இல்லை.