புதன், 10 செப்டம்பர், 2008

‘யுக்திகளே’ இவர்களுக்கு இலட்சியம்!

பெரியார் நினைவிடம் பெரியார் திடலுக்குள். பெரியார் அருங்காட்சியகம் (அப்படி ஒன்று இருக்கிறதா என்று எவரும் கேட்டுவிடக் கூடாது) பெரியார் திடலுக்குள். நடத்தும் மாநாடுகளும் பெரியார் திடலுக்குள். இப்படி பெரியார் திடலுக்குள் பெரியாரை முடக்கிப் போட்டவர்கள் ‘பெரியாரியலை’யும் பெரியார் திடலுக்குள்ளே முடக்கிட துடிக்கிறார்கள்.
‘குடிஅரசில்’ பெரியாரின் எழுத்து பேச்சுகளை காலவரிசைப்படி இதுவரை வெளியிட முன் வராதவர்கள் - பெரியார் திராவிடர் கழகம் - கடும் முயற்சி எடுத்து வெளிக் கொணரும்போது, “முடியாது; எங்கள் பெரியார் திடலுக்குள்ளே தான் இருக்க வேண்டும்; அது எங்களின் சொத்து; எவராவது வெளியிட்டால், 15 லட்சத்தை, இழப்பீடாக எடுத்து வை” என்கிறார்கள்.
பார்ப்பனர்களும் இப்படித்தான் ‘வேதம்’ தங்களிடமே இருக்கவேண்டும் என்று நிலைப்படுத்தி - அதை மறை பொருளாக்கினார்கள். அதன் காரணமாகவே அது ‘மறை’ என்னும் பெயர் பெற்றது. பெரியார் எழுத்தும் பேச்சும் காலவரிசைப்படி முழுமையாக வெளி வருவதைக் கண்டு இவர்கள் ஏன் பதட்டமடைகிறார்கள்? கொள்கையை முன்னெடுக்கவே பெரியார் அதற்கான செயல் யுக்திகளைப் பின்பற்றினார் என்பதற்கான அடுக்கடுக்கான சான்று கள் அந்த எழுத்துகளிலும், பேச்சு களிலும் பொதிந்து கிடப்பதுதான், இதற்குக் காரணம்.காங்கிரசை பெரியார் ஆதரித்த போதும் சரி; எதிர்த்த போதும் சரி; நீதிக்கட்சியை ஆதரித்த போதும்; அதைக் கடுமையான கண்டனத்துக்கு உள்ளாக்கியபோதும்; காமராசர் ஆட்சியை ஆதரித்த போதும்; பக்தவத்சலம் ஆட்சியை எதிர்த்து போர்க்கொடி உயர்த்திய போதும் - பெரியாரின் உறுதியான கொள்கை அடிப்படையிலான ‘செயல் யுக்திகளை’ புரிந்து கொள்ள முடியும். தனது லட்சியங்களை முன்னிறுத்தியே அவரது ஆதரவும் எதிர்ப்புகளும் இருந்திருக்கின்றன.
ஆனால் வீரமணியைப் பொறுத்தவரை ‘யுக்திகளே’ (Strategies) அவரது ஒரே லட்சியமாகிவிட்டது. அந்த ‘யுக்தி’ களுக்காகவே, அவ்வப்போது கொள்கை பரப்பலை செய்து வருகிறார்.தோழர் தியாகுவும் இதே கருத்தை, சென்னையில் பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் சுட்டிக் காட்டினார். வீரமணியின் லட்சியம் ‘யுக்தி’ (Strategy) தான். யுக்திக்காகவே அவரது பெரியார் கொள்கை பரப்புதல் நடந்து கொண்டிருக்கிறது என்பதற்கு பல சான்றுகளைப் பட்டியலிட முடியும்.
“ஆயுள் உள்ள வரை ஆதரவாக இருப்பேன்”; “அன்பு சகோதரி ஜெயலலிதா ஆட்சிக்கு ஆபத்து வருமேயானால் திராவிடர் கழகம் தற்கொலைப் படையாக மாறும்” என்று “சமூக நீதி காத்த வீராங்கனைக்கு” இன்று கலைஞருக்கு பாராட்டு மழை பொழிவது போல் அன்றும் நாள்தோறும் வாழ்த்துப்பாக்களை பாடிக் கொண்டிருந்தபோது, திராவிடர் கழகத்துக்குள் கொள்கை உணர்வுள்ள இளைஞர்கள் தட்டிக் கேட்டார்கள். வீரமணி, அவர்களை எல்லாம் ‘துரோகிகள்’ பட்டியலில் சேர்த்தார். 1996 இல் பெரியார் திராவிடர் கழகம் உருவானது. கடும் நெருக்கடிக்கு உள்ளான வீரமணி, தனது ‘யுக்தி’யைப் பயன்படுத்தி நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு திட்டங்களை தீட்டினார்.
அவசர அவசரமாக பிரச்சார நூல்களை வெளியிட் டார்கள்; புத்தக சந்தைகளை நடத்தினார்கள்; மாநாடுகள் கூட்டப்பட்டன; இவ்வளவும் ‘பெரியார் திராவிடர் கழகம்’ உருவான பிறகு தான்! அய்.அய்.டி. பார்ப்பன ஆதிக்கத்தை எதிர்த்து, பெரியார் திராவிடர் கழகம் தொடர்ந்து ஆறு ஆண்டுகாலம் களத்தில் நின்று போராடியது. ‘ராமலீலாவை’ எதிர்த்து ‘இராவண லீலா’ நடத்தி, ராமன் படத்தை எரித்து, பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள் ஒவ்வொரு வருடமும் சிறை ஏகினார்கள். அடுக்கடுக்கான போராட்டங்களை முன்னெடுத்து, பெரியார் இயக்க மரபின் தொடர்ச்சியாக பெரியார் திராவிடர் கழகம் பயணப்பட்டபோது, வீரமணியின் ‘விடுதலை’ முகத்தைத் திருப்பிக் கொண்டது. இவைபற்றியெல்லாம் ஒரு வரி செய்தியும் கிடையாது. கேட்டால், ‘துரோகிகள்’ நடத்தும் ‘பார்ப்பன எதிர்ப்பு’ எங்களுக்கு உடன்பாடானது அல்ல என்று சமூக நீதிகாத்த வீராங்கனைக்கு புகழாரம் சூட்டும் தங்களின் பார்ப்பன எதிர்ப்பே ‘அக்மார்க்’ முத்திரையுடையது என்றார்கள்.
பெரியார் மறைவுக்குப் பிறகு, அன்னை மணியம்மையார் தலைமை ஏற்ற நிலையில், பெரியார் கருத்துகளை கடவுள், மதம், பெண்ணுரிமை போன்ற தலைப்புகளில் தொகுத்து, ‘பெரியார் களஞ்சியம்’ வெளியிடும் திட்டத்தைத் தொடங் கினார். 6 தொகுதிகள் வரை வெளிவந்தன. 6வது தொகுப்பு வெளி வந்தது 1991 அக்டோபர். அப்போது ‘அம்மா’ ஆட்சிக் கட்டிலுக்கு வந்த நேரம். அம்மாவுக்கு வாழ்த்துப்பா பாடு வதிலும், கலைஞருக்கு எதிராக அர்ச்சனைகளை நடத்து வதிலும்தான் காலம் உருண்டோடியது. யுக்தியையே லட்சிய மாக்கிக் கொண்டவர்கள், வேறு என்ன செய்வார்கள். ஆட்சி யாளர்களின் ஆதரவைத் தக்க வைத்துக் கொள்வதற்கான ‘யுக்திகளே’ திராவிடர் கழகத்தின் செயல்பாடுகளாயின.
2003 ஆம் ஆண்டு ‘பெரியார் திராவிடர் கழகம்’ பெரியாரின் ‘குடிஅரசு’ பேச்சு எழுத்துகளைத் தொகுத்து, 1925 ஆம் ஆண்டுக்கான முதல் தொகுதியை வெளியிட்டது. பெரியார் சொத்துகளையும் அறக்கட்டளை களையும் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள கி.வீரமணி, இந்தத் தொகுப்புகளை ஏன் வெளியிடவில்லை என்ற கேள்விகள் வீரமணியை நெருக்கடிக்கு உள்ளாக்கின. அந்த நெருக்கடியிலிருந்து மீள, ஒரு ‘யுக்தி’யாக பெரியார் களஞ்சியத்தின் அடுத்த தொகுப்பை ‘சாதி-தீண்டாமை’ எனும் தலைப்பில் 2004 ஆம் ஆண்டில் வெளியிட்டார்.
பெரியார் களஞ்சியத்தின் 6 ஆம் தொகுப்புக்குப் பிறகு 7வது தொகுப்பை வெளியிட கி.வீரமணிக்கு 13 ஆண்டு காலம் தேவைப்பட்டிருக்கிறது. அதுவும் எப்படி வந்தது? 2003 ஆம் ஆண்டு பெரியார் திராவிடர் கழகம் ‘குடிஅரசு’ முதல் தொகுப்பை வெளியிட்ட பிறகு தான்! அதற்குப் பிறகு தான் ‘குடிஅரசு’ நூல்களை குறுந்தகடுகளாக வெளியிடும் அறிவிப்பும் வந்தது. தனது நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான ‘யுக்தியாகவே’ வீரமணி செயல்பட்டத்தைப் புரிந்து கொள்ள முடியும். ‘சாதி தீண்டாமை’ (7வது தொகுப்பு), 2004 ஆம் ஆண்டு ஒரு தொகுப்பும், 2005 ஆம் ஆண்டு ஒரு தொகுப்பும் (8வது தொகுப்பு) என ஆண்டுக்கு ஒரு தொகுப்பை திராவிடர் கழகம் வெளியிட்டது. அதற்குப் பிறகு 2006 ஆம் ஆண்டில் பெரியார் திராவிடர் கழகம் 1926 ஆம் ஆண்டு ‘குடிஅரசில்’ பெரியார் பேச்சு எழுத்துக்களைத் தொகுத்து ஒரே நேரத்தில் இரு தொகுதிகளை வெளியிட்ட போது, மீண்டும் வீரமணிக்கு அதிர்ச்சி.
“இந்த துரோகிகளுக்கு வேறு வேலையே கிடையாது போலிருக்கு, நம்ம உயிரை வாங்குறானுங்க. பேசாமல், நாம ஒரு அரசியல் கட்சியை துதி பாடுவதுபோல், அவனுகளும், ஒரு அரசியல் கட்சிக்குப் பின்னாலே போக வேண்டியது தானே. இந்த ‘துரோகி’களுக்கு எதற்கு இந்த வேண்டாத வேலை” என்று மனம் புழுங்கியிருப்பார். நெருக்கடியிலிருந்து மீள - மீண்டும் - ‘சாதி-தீண்டாமை’ தொகுப்புகள் தொடர்ச்சி யாக வெளிவரத் தொடங்கின. நாமும் மகிழ்ச்சி அடைந்தோம். எப்படியோ, பெரியார் நூல்களை வெளிவரச் செய்திருக்கிறோமே என்ற மகிழ்ச்சி தான்.
பெரியார் திராவிடர் கழகம் தனது செயல்பாட்டை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியது. ‘குடிஅரசு’ தொகுப்புகளை வெளியிடுவதில் தீவிரம் காட்டி, 1925-லிருந்து 1938 வரை 27 தொகுதிகளை ஒரே நேரத்தில் வெளியிட திட்டமிட்டு அறிவித்தது வீரமணியால் அதைத் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. இனியும், இவர்களை அனுமதிக்கக் கூடாது என்று தடைப்படுத்தும் முயற்சிகளில் இறங்கி விட்டார்.
பெரியார் கருத்துகளைப் பரப்பு வதற்கு பெரியார் பெயரில் இயக்கம் நடத்துகிறவர்களே தடுக்கிறார்களே என்று கேள்விகள் மக்கள் மன்றத்தில் வெடித்த நிலையில், பெரியார் கருத்துகளைப் பரப்பும் “துரோகிகள்”, “அநாமதேயங்கள்”, “வெளியேற்றப் பட்டவர்கள்” பட்டியல் மேலும் நீண்டு விடும் என்ற அச்சத்தில் மீண்டும் ‘யுக்தி’ யைப் பயன்படுத்தினார். அதுதான் நடந்து முடிந்துள்ள மாநாடு. தொண்டர் களை தக்க வைத்துக் கொள்ள வழக்க மாக வீரமணி நடத்தும் “யுக்தி” தான்.
“பெரியார் திராவிடர் கழகம்’ 28 தொகுதிகளை ரூ.3500-க்கு வழங்கு கிறதா? இதோ நான் 30 தொகுதிகளை ரூ.2500-க்கு தருகிறேன். ஒரு ‘பை’ இலவசம்” என்று அறிவிப்புகள் வரு கின்றன. இதுவும் நமக்கு மகிழ்ச்சி தான். பெரியார் கொள்கைகள் தீவிரமாகப் பரவும் போதுதான் மக்கள் உண்மை யான பெரியாரியலைப் புரிந்து கொள் வார்கள். சமூக மாற்றத்துக்கும் தயார் ஆவார்கள் என்பதில் நமக்கு உறுதியான நம்பிக்கை உண்டு. பெரியார் கொள்கை பரப்புதலை ‘யுக்திக்காகவே’ நடத்தி வரும் கி.வீரமணியின் பார்வையில் நாங்கள் “துரோகிகளாகவும்” “நீக்கப் பட்டவர்களாகவும்” இருக்கிறோம் என்பதுதான் நாங்கள் உண்மையான பெரியாரியல்வாதிகள் என்பதற்கான சான்று. ஒன்றை மட்டும் சொல்லி வைக்கிறோம். பெரியார் திராவிடர் கழகத்தை முடக்கி விட்டு, ‘யுக்திகளுக் குள்ளேயே’ காலத்தை கடத்தி விடலாம் என்று மட்டும் கனவு காண வேண் டாம். அடிக்க அடிக்க எழும் பந்து போல், பெரியார் திராவிடர் கழகம் வலுப் பெற்று, களப் பணிகளில் இறங்கும்; எங்களின் தோழர்கள் உறுதி யான கொள்கையாளர்கள்; திருவரங்கம் பெரியார் சிலை உடைக்கப்பட்டபோது - தாங்கள் யார் என்பதை அடையாளம் காட்டியவர்கள். நன்கொடை செலுத்தி கல்லூரிகளில் படிக்க வந்த அப்பாவி மாணவர்கள் அல்ல.
பெரியாரின் ‘குடிஅரசுகள்’ வீர மணிகள் இருட்டடிக்கும் சுயமரியாதை இயக்கக் காலத்தின் உணர்வலைகளை இனி தட்டி எழுப்பப் போவது உறுதி. அப்போது ‘யுக்தி’யாளர்களும் அவரது ‘பக்தியாளர்களும்’ கல்வி நிறுவனங் களின் கணக்குகளை பார்த்துக் கொண் டிருக்க முடியாது; ‘துரோகிகள்’ என்று புலம்பிக் கொண்டிருக்க முடியாது. காலத்தின் அறை கூவலை சந்திக்க வேண்டியிருக்கும்.
- ‘இரா’

நன்றி

http://periyarmuzakkam.blogspot.com/2008/09/blog-post_09.html

வலைப்பதிவு காப்பகம்