சிங்கள ராணுவம் கிளி நொச்சியைப் பிடித்து விட்டதைப் பார்ப்பனர்களும், பார்ப்பன ஊடகங் களும் தேசிய காங்கிரசாரும் தங்களது வெற்றியாகவே மகிழ்ந்து கொண்டாட்டம் போட்டு வருகிறார்கள்! இந்தியாவின் பச்சை துரோகத்துக்கு, தமிழக முதல்வர் கலைஞரும், மவுன சாட்சியாகி, இந்தத் துரோகத்தில், தனது பங்கினையும் பதிவு செய்து கொண்டுள்ளார்.உழைப்பால் உதிரத்தைச் சிந்தி, ஈழத் தமிழர்கள் தங்களுக்கென கட்டமைத்த நிர்வாக தலைநகரம் வீழ்ந்து நிற்கிறது. 3 லட்சம் தமிழர்கள் குடும்பத்தோடு தங்கள் உடைமைகளை அப்படியே விட்டு, தங்களின் பாதுகாப்பு அரணான விடுதலைப்புலிகளோடு இடம் பெயர்ந்து விட்டனர்.மக்கள் நடமாட்டமே இல்லாத கிளிநொச்சிக்குள் புகுந்த ராணுவம், காலி மைதானத்தில் வெற்றிக் கும்மாளம் போடுகிறது.
மக்கள் நெரிசலாக இடம் பெயர்ந்த முல்லைத் தீவிலும் சிங்கள விமானங்கள் குண்டுகளைப் பொழிந்து, அப்பாவி மக்களை பிணமாக்கி வருகிறது. மக்களையும் விடுதலைப்புலிகளையும் பிரிக்கவே முடியாது. மக்களிடமிருந்தே விடுதலைப்புலிகள் உருவாகி வருகிறார்கள் என்ற உண்மையை 3 லட்சம் மக்களும் தங்கள் தலைவரோடு இணைந்து இடப் பெயர்வு செய்த நிகழ்வின் வழியாக மீண்டும் உலகுக்கு உணர்த்தியிருக்கிறார்கள்.'மக்களுக்கு சேதாரமே இல்லாத ராணுவ நடவடிக்கை' என்று ராஜபக்சே அப்பட்டமாக கூறும் பொய்யை மான வெட்கமின்றி பார்ப்பன ஊடகங்கள் புகழ்ந்து எழுதுகின்றன. குறிப்பாக பார்ப்பன 'இந்து', ராஜபக்சேயை சிறப்பு பேட்டி கண்டு வெளியிட்டு, வெற்றிக் களிப்பில் தள்ளாடுகிறது. இலங்கையில் மனித உரிமை மீறல்களை கண் காணிக்க இந்தியாவின் உச்சநீதிமன்ற நீதிபதி பகவதி தலைமையில் அமைக்கப்பட்ட சர்வதேச வல்லுநர் களைக் கொண்ட பன்னாட்டுக்குழு, இலங்கையின் மிக மோசமான மனித உரிமை மீறல்களை சுட்டிக்காட்டி அங்கு செயல்படவே முடியாது என்று அறிவித்ததை இந்தப் பார்ப்பன ஏடுகள் மறைத்து விடுகின்றன. இனப்படுகொலைகள் நிகழக்கூடிய உடனடி ஆபத்துகள் நிறைந்த உலகின் 8 நாடுகள் பட்டியலில் இலங்கையும் ஒன்றாக சேர்க்கப்பட்டுள்ளதை ஒதுக்கித் தள்ளிவிட்டு, ராஜபக்சேயை ஜனநாயகத்தின் புனிதராக்கி இந்த பார்ப்பன ஏடுகள் பாராட்டு மாலை களைக் குவிக்கின்றன. (காங்கோ, ஆப்கானிஸ்தான், ஈராக், மியான்மார், பாகி°தான், சோமாலியா மற்றும் சூடானின் தார்பூர் பகுதி ஆகியவை மற்ற ஏழு நாடுகள்ஆகும்) இதற்காக இலங்கையைத் தவிர, ஏனைய நாடுகள் அய்.நா.வின் கண்டனத்துக்கு உள்ளாகிய நிலையில் இந்தியா தரும் பாதுகாப்பு அரவணைப்பால், இலங்கை மட்டும் கண்டனத்தி லிருந்து தப்பி வருகிறது.
இந்த உண்மை தெரிந்தும் பார்ப்பன ஏடுகள் ஊமைகள் போல் வேடம் தரித்து நிற்கின்றன.போர் நிறுத்தம் கோரி, தமிழக சட்டசபை ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றிய பிறகு இந்தியாவின் அதிகாரிகள் என்.என்.ஜா, கே.பி.எஸ். மேனன், காங்கிரசின் வெளியுறவுப் பிரிவு இணைச் செயலாளர் இராவ்னி தாக்வர் ஆகியோர் கொழும்புக்குப் போய், தமிழக அரசியல்வாதிகளின் கூக்குரலை ஒதுக்கித் தள்ளிவிட்டு, போரைத் தொடருமாறு இலங்கை அரசை வலியுறுத்தி வந்ததைக்கூட இந்தப் பார்ப்பன ஏடுகள் கண்டிக்கத் தயாராக இல்லை.
"தமிழ்நாட்டின் அரசியல் கோமாளிகள் கூறுவதை இந்தியா ஒரு போதும் காதில் வாங்காது"
என்று இலங்கை ராணுவ தளபதி சரத் பொன்சேகா திமிருடன் பேசியதை சடங்குக்காக இந்தியா கண்டித்ததே தவிர அவர் கூறியதுதான் நூற்றுக்கு நூறு உண்மை என்பதை செயலில் காட்டிவிட்டது.'கிளிநொச்சியைப் பிடித்தப் பிறகே எனது கொழும்பு பயணம்' என்று இறுமாப்பு காட்டினார், இந்தியாவின் வெளிநாட்டுத் துறை அமைச்சர் வங்காளப் பார்ப்பனர் பிரணாப் முகர்ஜி. கலைஞர் சொன்னாலும் சரி; வேறு எவர் சொன்னாலும் சரி; அசைய மாட்டேன் என்றார்.கிளிநொச்சியை ராணுவம் பிடித்த பிறகுகூட, இந்தியப் பார்ப்பன ஆளும் வர்க்கம் ஓய்ந்துவிட வில்லை. 'ரா' உளவு நிறுவனத்துக்கு சொந்தமான நவீன கருவிகள் பொருத்தப்பட்ட ஒரு உளவு விமானத்தில் 'ரா' அதிகாரிகள் கடந்த 3 ஆம் தேதி வானத்தில் பறந்து வேவு பார்த்து, சிங்கள ராணுவத் துக்கு இரகசிய தகவல்களைத் தெரிவித்து வரு கிறார்கள்.
'டைம்ஸ் ஆப் இந்தியா' நாளேடு (ஜன.6) இதை அம்பலப்படுத்தியுள்ளது. 40,000 அடி உயரத்தில் பறக்கும் இந்த விமானத்தில் பொருத்தப்பட்ட காமிரா மூலம் பூமியில் உள்ளவர்களை தெளிவாக படம் பிடித்துவிட முடியும். இரவு நேரத்திலும் படம் பிடிக்க லாம். மேகங்கள் சூழ்ந்திருந்தாலும்கூட படம் பிடிக்க லாம். 40,000 அடி உயரத்தில் பறப்பதால், மற்ற விமானங் களின் பாதையில் குறுக்கிடாது பறக்க முடியும். விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் இருக்கு மிடத்தைக் கண்டறிந்து, சிங்கள ராணுவத் துக்கு உளவு கூறவே இந்திய உளவு நிறுவனம் விமானத்தில் கிளம்பியுள்ளது. இலங்கை இராணுவத்தைப் போல் பாலஸ்தீனர் களின் காசா பகுதியில், இஸ்ரேல் யூதவெறி ஆட்சி, குண்டுகளைப் போடுகிறது. அதைக் கண்டித்து உலகம் முழுதும் கண்டனக் குரல் வெடிக்கிறது.
பார்ப்பன 'இந்து' ஏடு, இஸ்ரேல் குண்டு வீச்சைக் கண்டிக்கும். ஆனால், இலங்கை குண்டு வீச்சை மட்டும் ஆதரிக்கும். காசா மக்கள் மீது குண்டு விழுந்தால் கண்டனம்; தமிழன் மீது குண்டு விழுந்தால் இவர்களுக்கு, ஆனந்தக் களியாட்டம். ஒவ்வொரு நாளும் நாட்டின் நிகழ்வுகளுக்கெல் லாம், தமது பேனாவை உடனே தூக்கும் கலைஞர், மத்திய அரசின் துரோகத்தைக் கண்டிக்காமல், வாயை இறுக மூடிக் கொண்டு விட்டார். "கிளிநொச்சியைப் பிடித்தால் என்ன; அழித்தால் என்ன? இப்போது திருமங்கலத்தை நாங்கள் பிடித்தாக வேண்டும்" என்று சூளுரைத்துக் கிளம்பி விட்டார். 'வீரப்ப மொய்லி'கள் பிரபாகரனை பிடித்துக் கொண்டு வந்து இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று திமிருடன் பேசுகிறார்கள்.
போபாலில் விஷ வாயு கசிந்து, பல்லாயிரம் மக்களை உயிர்ப்பலியாக்கி, அமெரிக்காவுக்கு தப்பி ஓடிய யூனியன் கார்பைடு நிறுவனத்தின் தலைவன் ஆன்டர்சனை, இந்தியாவுக்கு திருப்பிக் கொண்டு வந்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க யோக்கியதையற்ற காங்கிரசார், அதே யூனியன் கார்பைடு நிறுவனத்துக்கு, மீண்டும் புதிய தொழில் நிறுவனங்களைத் தொடங்க அனுமதியளித்த மானங் கெட்ட காங்கிரசார், பிரபாகரனை பிடித்து வரச் சொல்லி, ஒப்பாரி வைப்பதுதான் வேடிக்கை; வினோதம்.தமிழர்களின் தாயகப் பகுதியை ராணுவத்தின் பிடிக்குள் கொண்டுவருவது என்ன நியாயம் ?தமிழர்கள் தங்கள் தாயகப் பகுதியில் ஒரு தலை நகரையும், நிர்வாகக் கட்டமைப்புகளையும் உருவாக்கி யதை அழிப்பது என்ன நியாயாம்? சிங்களப் பகுதியிலா, அவர்கள் நிர்வாக அமைப்பை உருவாக்கினார்கள்?இலங்கை எங்கள் நாடு என்று கூறிக் கொண்டு சொந்த நாட்டு மக்கள் மீது குண்டு வீசுவதை கண்டிக்காதது எவ்வகையில் நியாயம்?'அய்வருக்கும் தேவி - அழியாத பத்தினி' என்று கூறி அதை நம்ப வைத்த பார்ப்பனர்கள் பார்வையில் இவை நியாயங்களாகிவிட்டன!
சூடு,சொரணையுள்ள தமிழன் ஒவ்வொருவனும் இந்தப் பார்ப்பன கூட்டத்தையும், தேசிய காங்கிரசை யும், வரப்போகும் நாடாளுமன்றத் தேர்தலில் பின்னங்கால் பிடறியில் தெறிக்க ஓட ஓட விரட்டிட சபதமேற்க வேண்டும்! பார்ப்பானின் தேசியத்தையும், பார்ப்பானின் காங்கிரசையும் தோலுரிப்பதே இனி மானமுள்ள தமிழனின் கடமையாக மாறவேண்டும்! வராற்று துரோகத்துக்கு வட்டியும் முதலுமாக வாங்கிக் கட்டும் காலம் வந்தே தீரும்!
-நன்றி; பெரியார்முழக்கம்