
'மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியை இலங்கைக்கு அனுப்பி வைக்கிறோம்' என்று கொடுத்த வாக்குறுதியைக்கூடத் தந்திர மாகத் தள்ளிப் போட்டுக் கொண்டே வருகிறது டெல்லி.இதையெல்லாம் பார்க்கும்போது, 'புலிகளை நாங்கள் முழுவதுமாக ஒடுக்கி விடுகிறோம். அதுவரை உங்கள் தேசத்து மக்களைத் திசை திருப்பும் வகையில் கண்ணாமூச்சி அரசியல் நடத்திக் காலத்தைக் கடத்துங்கள்' என்று மத்திய அரசோடு எழுதப்படாத 'புரிந்துணர்வு ஒப் பந்தம்' ஒன்றைப் போட்டிருக்கிறதோ இலங்கை அரசு என்ற பலமான சந்தேகம் தான் எழுகிறது!நினைத்ததை எல்லாம் நிபந்தனைகளாக விதித்து, குறித்த நேரத்துக்குள் சாதித்துக் கொள்கிற தமிழக ஆளுங்கட்சி, இந்த விஷயத்தில் எள் முனையளவுகூட எதையும் சாதிக்கவில்லை என்பதுதான் வேதனையளிக்கும் நிதர்சனமான உண்மை!'இதன் பிறகும் இந்த அரசு இருக்கத்தான் வேண்டுமோ?' என்று பொதுக்கூட்ட மேடையில் முதல்வர் தழுதழுத்த குரலில் எழுப்பிய கேள்வி, தமிழ் மக்களின் காதில் இன்னமும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது!
நன்றி: 'ஆனந்த விகடன்' தலையங்கம் 14.1.09