சனி, 21 பிப்ரவரி, 2009

யாரா இருக்கும் அது?

hc-clash26
’தமிழக அரசுக்கு எதிராக சதி’ முதல்வர் அறிக்கை

  • தமிழகம் முழுவதும் ஏற்பட்ட, மின்சார தட்டுப்பாட்டால், பொது மக்கள் பெரும் அவதி. பல சிறுதொழிற்சாலைகள் மூடப்பட்டன.பல தொழிலாளர்கள் வேலை இழப்பு.
  • உணவுப் பொருட்களின் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்வு.

  • வீட்டு வாடகை, நிலம், கட்டுமானப் பொருட்கள் விலையை கட்டுப்படுத்தமுடியவில்லை. ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பெரும் அவதி.
  • டாஸ்மாக் மதுக்கடைகளினால் பல குடும்பங்கள் சீரழிவு.

  • அரசு பேருந்துகளில் மறைமுக விலையேற்றம்.
  • ராஜா என்கிற தமிழக அமைச்சர், ஈரோட்டில் நிலமோசடி வழக்கில் ஈடுப்பட்டார், என்பதால் அமைச்சர் பதவி பறிப்பு.
  • திண்டிவனம் அருகே உள்ள ரெட்டணை கிராமத்தில் தேசிய ஊரக உறுதித் திட்டத்தில் பணிபுரிந்த மக்கள், முறையான கூலி கேட்டு மறியல் செய்த போது அவர்கள் மீது தடியடி, துப்பாக்கிச்சூடு.

  • ஈழத் தமிழர்களை கொலை செய்யும், சிங்கள ராணுவத்திற்கு இந்திய அரசு உதவி. தமிழர்கள் தீக்குளிப்பு. தமிழகம் கொந்தளிப்பு.  தமிழகஅரசின் மெத்தனம்.

  • ‘ஈழத்தமிழர்களுக்கு எதிரானப் போரை நிறுத்து’ என்ற பொதுநோக்கில் தங்கள் நலன்களைப் புறம் தள்ளி தமிழர்களுக்காகப் போராடிய வழக்கறிஞர்கள் மீது தமிழக போலிசாரின் கொலைவெறித் தாக்குதல். படுகாயமுற்ற வழக்கறிஞர்கள் மீதே, கொலை முயற்சி வழக்கு.

ஆமாம், யாரா இருக்கும் அது?

அதாங்க, முதல்வர் சொல்லி இருக்கிறாரே,  ‘தமிழக அரசுக்கு எதிராக சதி பண்றாங்க’ என்று.  அதுதான் யாருன்னு தெரியிலையே?

-வே. மதிமாறன்

வழக்கறிஞர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் - தமிழகத்தில் ராமராஜ்ஜியம்தான் நடக்கிறது...அரண்மனையின் வாசலில் பிணத்தைக் கிடத்திவிட்டுக் கதறி அழுதான். தன் பிள்ளையின் சாவுக்கு ராமனே காரணமென நிந்தித்தான். மன்னனின் ஆட்சியில் படிந்திட்ட பாவந்தான் தன் மகனின் மரணத்திற்குக் காரணம் என்றான். மனம் போனபடி, பழித்தான், சபித்தான். குற்றவாளியைப் பிடித்துத் தணடித்துச் செத்துப்போன தன் மகனைப் பிழைக்கச் செய்யாவிட்டால் அரண்மனை வாசலிலேயே பட்டினப் போர் நடத்தித் தற்கொலை செய்து கொள்வேன் என்று அச்சுறுத்தினான். அதைக்கேட்டு நாரதன் உட்பட அறிவார்ந்த எட்டு ரிஷிகளுடன் ராமன் கலந்தாலோசித்தான். அந்த அறிஞர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் - நாட்டு மக்களுள் அதாவது ராம ராஜ்ஜியத்தல் யரோ ஒரு சூத்திரன் தவம் செய்து கொண்டிருப்பதாகவும் அச்செயல் தருமத்திற்கு எதிரானது என்றும் நாரதன் சொன்னான். தரும (புனித) சட்டங்களின்படி பிராமணர்கள் மட்டுமே தவம் செய்யலாம். பிராமணர்களுக்குச் சேவகம் செய்வதே சூத்திரர்களுடைய கடமை என்று மேலும் நாரதன் கூறினான். தருமத்திற்கு எதிராக ஒரு சூத்திரன் தவம் செய்வது பெரும் பாவம், குற்றம் என்று ராமன் திடமாய் நம்பினான். உடனே தன் தேரில் ஏறி நாட்டைச் சுற்றிவந்தான். அடர்ந்த காட்டுப் பகுதியில் ஒருவன் கடினமானதொரு தவத்திலாழ்ந்திருப்பதைக் கண்டான். இராமன் அவனைநோக்கிப் போனான். அந்தத் தவம் செய்து கொண்டிருந்தவன் தான் சம்பூகன் என்னும் சூத்திரனா-? மனித உருவிலேயே மோட்சத்திற்குச் செல்லத்தவம் செய்பவனா? என்று கூடக் கேட்டறியாமல், விசாரணையோ, எச்சரிக்கையோ, உண்மை நியாயத்தை அறிந்திடும் நோக்கமோ இன்றி சம்பூகனின் தலையைச் சீவிவிட்டான் ராமன். அதே நொடியில் எங்கே தொலை தூரத்து அயோத்தியில் அகாலமரணமைடைந்த பிராமணனின் மகன் மீண்டும் உயிர் பெற்றானாம். கடவுள்களெல்லாம் மன்னன், ராமனின் மீது மலர் தூவி மகிழ்ந்தார்களாம். ……………………………………………. சம்பூகனை கொன்ற நற்செயலைப் பாராட்டி தெய்வ மகிமையுள்ள காப்பு ஒன்றை அகத்தியன் ராமனுக்குப் பரிசாய் அளித்தான்.’ - அயோத்தியில் நடந்த ராமனின் ஆட்சியைப் பற்றி டாக்டர் அம்பேத்கர். *** ‘சுப்பிரமணிய சுவாமி என்கிற ஒரு பார்ப்பனர், தமிழர்களுக்கு எதிராக இருக்கிறார் என்பதால் சில வழக்கறிஞர்கள் அவரை அடித்துவிட்டார்கள்’ என்று சொல்லப்பட்டது. உடனே, பார்ப்பனப் பத்திரிகைகள், பார்ப்பன ஆதரவாளர்கள், “தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது. இந்த ஆட்சியில் யாருக்கும் (பார்ப்பனர்களுக்கு) பாதுகாப்பில்லை. இந்த ஆட்சியை உடனடியான கலைக்க வேண்டும்.” என்று மனம் போனபடி, பழித்தார்கள், சபித்தார்கள். மருத்துவனையில் இருக்கும் முதல்வர் சு. சுவாமி என்கிற ஒரு பார்ப்பனர் மீது நடந்த தாக்குதலை நினைத்து மிகவும் மனம் வருந்தி, தனது அறிவார்ந்த குழுக்களிடம், கலந்தாலோசித்து இருக்கிறார். பிறகு அதன் விளைவு, சென்னை உயர்நீதி மன்றத்தில், சரியாக மூன்று மணிக்கு ஆரம்பித்திருக்கிறது. சுப்பிரமணிய சுவாமியை உண்மையில் தாக்கினார்களா? தாக்கியது இந்த வக்கீல்கள்தானா? என்று கூடக் கேட்டறியாமல், விசாரணையோ, எச்சரிக்கையோ, உண்மை நியாயத்தை அறிந்திடும் நோக்கமோ இன்றி ஏறக்குறை 1000 அதிரடி ‘காவல்’ துறையினரால், வழக்கறிஞர்கள் சுற்றி வளைக்கப்பட்டு, சரமாரியாக தாக்கப்பட்டார்கள். தலை, கால், கை உடைந்து பல வழக்கறிஞர்கள் மருத்துவமனையில் கிடத்தப்பட்டார்கள். வழக்கறிஞர்களைத் தாக்கிய ‘காவல் துறை’ யின் இந்த ‘நற்செயலை’ பார்ப்பனப் பத்திரிகைகள், பார்ப்பன ஆதரவாளர்கள் பாராட்டி மலர் தூவி வாழ்த்துகிறார்கள். சம்பூகனை கொன்றதும் உயர்தெழுந்த பார்ப்பனச் சிறுவனைப் போல், வழக்கறிஞர்கள் மீது போலீஸ் கொலை வெறி தாக்குதல் நடத்தி முடித்த உடன், சுப்பிரமணிய சுவாமி, மகிழ்ச்சி அடைந்து, காவல்துறையின் ‘நற்செயலை’ பாராட்டியும், வழக்கறிஞர்களை ‘மாமா பயல்கள்’ என்றும் என்று கண்ணியமான வார்த்தையாலும் பேசியிருக்கிறார்.(சி.என்.என். தொலைக்காட்சி) நடிகர் ‘சோ’ அகத்தியனைப்போல் மகிழ்ச்சியடைந்திருக்கிறார். தெய்வ மகிமையுள்ள 


காப்பை முதல்வரின் கையில், கட்டுவாரா? தெரியவில்லை. ராமாயண ஆட்சி அல்லது காட்சி மீண்டும் நடந்திருக்கிறது சில ஆண்டுகளுக்கு முன்னால், முதல்வர் ஸ்ரீராமனை, கடுமையாக விமர்சித்துவிட்டார் என்று வேதாந்தி என்கிறவன், அவர் தலையை வெட்டச் சொன்னான். ஸ்ரீராமன், தன்னை தானே விமர்சித்து பேசிக் கொள்வதற்குக்கூடவா உரிமையில்லை. சாட்சாத் ஸ்ரீராமபிரான்தான் தமிழகத்து முதல்வராக இருக்கிறார். முட்டாள் வேதாந்தி. நீ என்ன ராம பக்தன்?. -வே. மதிமாறன் 

திங்கள், 16 பிப்ரவரி, 2009

விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கப்பட வேண்டும்


mc21


mc11

ஈழத் தமிழர்களுக்கும் தமிழகத் தமிழர்களுக்கும் துரோகம் செய்யும் காங்கிரஸ் கட்சியை எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அனைத்துத் தொகுதிகளிலும் வீழ்த்துவோம் என்று சென்னையில் பல்லாயிரக்கணக்கில் திரண்ட மக்கள் உறுதி ஏற்றனர்.
ஈழத் தமிழர்கள் இனப் படுகொலையைக் கண்டித்து தீக்குளித்து வீரச்சாவடைந்த “வீரத் தமிழ் மகன்” முத்துக்குமாருக்கு வீரவணக்கம் செலுத்தும் கூட்டம் பெரியார் திராவிடர் கழகம் சார்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை சென்னை எம்.ஜி.ஆர். நகரில் நடைபெற்றது.

“தேனிசை” செல்லப்பா எழுச்சி இசையைத் தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் “விடுதலை” இராசேந்திரன், தமிழ்த் தேசப் பொதுவுடைமை கட்சி பொதுச் செயலாளர் பெ.மணியரசன், மருத்துவர் எழிலன், வழக்கறிஞர் அமர்நாத், இயக்குநர் சீமான் ஆகியோர் உரையாற்றினர்.

விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கப்பட வேண்டும், தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தை அங்கீகரிக்க வேண்டும் என்ற கருத்தை அனைவரும் வலியுறுத்தினர்.

தமிழ்த் தேசப் பொதுவுடைமை கட்சியின் பொதுச் செயலாளர் பெ.மணியரசன் ஆற்றிய உரையில்,

இந்திய இராணுவத்தை அனுப்பி ஆயிரக்கணக்கான தமிழர்களை ஈழத்தில் கொன்று குவிப்பதற்கு ராஜீவ் காரணமாக இருந்ததையும், ராஜீவ்-ஜெயவர்த்தன ஒப்பந்தத்துக்குப் பிறகு கொழும்பு சென்ற ராஜீவ் காந்தியை சிங்கள சிப்பாய் ஒருவன் துப்பாக்கி கட்டையால் தாக்கி கொலை செய்ய முயற்சித்ததையும் எடுத்துக் காட்டினார்.

தமிழர்களின் உரிமைகளைக் காக்கக்கூடிய ஒரு அரசு தமிழ்நாட்டில் இல்லை என்றும், யார் ஆட்சியில் இருந்தாலும் தமிழக சட்டமன்றம் டெல்லிக்கு கொத்தடிமை சேவை செய்யும் அதிகாரமற்ற மன்றமே என்றும் தோழர் மணியரசன் சுட்டிக்காட்டினார்.

தமிழ்நாட்டில் 40 நாடாளுமன்ற உறுப்பினர்களை தமிழ்நாட்டின் உணர்வுகளையும் உரிமைகளையும் காப்பதற்குத்தான் டில்லிக்கு அனுப்பினோமே தவிர, டில்லியின் துரோகத்தை தமிழ்நாட்டில் நியாயப்படுத்துவதற்கு அல்ல என்றும், காங்கிரசின் துரோகத்தை மக்கள் மன்றத்தில் அம்பலப்படுத்துவதே இனி தமிழின உணர்வாளர்களின் எதிர்கால வேலைத் திட்டம் என்று கூட்டத்தில் தலைவர்கள் அறிவித்தபோது கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான மக்களும் ஆரவாரம், கரவொலி எழுப்பியதோடு காங்கிரசை வீழ்த்துவோம் என்று முழக்கமிட்டனர்.

பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆற்றிய உரையில்,

ராஜீவ் காந்தி ஈழத் தமிழர்களுக்கு செய்த துரோகத்தை பட்டியலிட்டுக் கூறியபோது கூட்டத்தினர் கைதட்டி வரவேற்றனர்.

பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் “விடுதலை” இராசேந்திரன் ஆற்றிய உரையில்,

தடை செய்யப்பட்ட இயக்கங்களை ஆதரித்துப் பேசலாம் என்று உச்ச நீதிமன்றமே தீர்ப்பு வழங்கியுள்ளதை எடுத்துக்காட்டினார்.

ஈழப் போராளி அமைப்புகளிடையே மோதல்களை உருவாக்கியது இந்திய உளவு நிறுவனம் தான் என்றும், இதை 1990 ஆம் ஆண்டிலேயே சட்டமன்றத்தில் அறிவித்த முதலமைச்சர் கலைஞர், இப்போது விடுதலைப் புலிகள் சகோதர போர் நடத்துவதாக குற்றம் சாட்டுவது முரண்பாடு அல்லவா என்று கேட்டார்.

தமிழர் வரிப்பணத்தில் சிறிலங்காவுக்கு ஆயுத உதவி செய்யும் இந்திய அரசை எதிர்த்து வரிகொடா இயக்கத்தைத் தொடங்குவோம் என்று  கேட்டுக் கொண்டார்.

திரைப்பட இயக்குனர் சீமான் ஆற்றிய உரையில்,

எத்தனை முறை கைது செய்தாலும் சீமானின் குரலை நசுக்கி விட முடியாது. தமிழர்களின் ஒரே பாதுகாப்பு அரணாக விளங்கும் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு ஆதரவாக தனது குரல் ஒலித்துக் கொண்டே இருக்கும் என்றார்.

இரு நாட்களுக்கு முன் புதுவையில் இயக்குனர் சீமான் ஆற்றிய உரைக்காக புதுவை காவல்துறை வழக்கு பதிவு செய்த நிலையில், எந்த நேரத்திலும் அவர் கைது செய்யப்படலாம் என்ற பரப்பரப்புக்கு இடையே கூட்டம் நடைபெற்றது.

அதே நாளில் சென்னை மயிலாப்பூரில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் கூட்டமும் நடைபெற்றது. பெரும் பொருட்செலவில் விளம்பரம் செய்து நடத்தப்பட்ட இந்த கூட்டத்தில் திரண்டவர்களை விட ஐந்து மடங்கு கூட்டம் பெரியார் திராவிடர் கழகத்தின் கூட்டத்துக்கு திரண்டதாக “விண்” தொலைக்காட்சி தனது செய்தி ஆய்வில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

நன்றி.

http://www.paristamil.com/tamilnews/?p=28280
 

ஞாயிறு, 15 பிப்ரவரி, 2009

புலிகள் தான் மக்கள், மக்கள் தான் புலிகள்: சீமானின் ஆவேச பேச்சுஈழத்தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துக்குமாருக்கு பெரியார் திராவிடர் கழகம் சார்பில் சென்னையில் எம்.ஜி.ஆர். நகரில் அஞ்சலி கூட்டம் நடைபெற்றது. இதில் பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் மணி, தமிழ் தேசிய பொதுவுடைமை கட்சியின் செயலாளர் பெ.மணியரசன், விடுதலை ராஜேந்திரன், திரைப்பட இயக்குனர் சீமான் ஆகியோர் பங்கேற்று பேசினார்கள்.

இயக்குனர் சீமான் பேசுகையில், இன்று நடக்கும் இந்த கூட்டத்திற்கு போலீசார் தடை விதிக்கப்போவதாக சொன்னார்கள். தடை தடை என்றால் அதை உடை உடை என்றுதான் எனக்கு தோன்றுகிறது. 

கார் எரிக்கிற கட்சியாக காங்கிரஸ் கட்சி இருக்கிறது. பிரபாகரனுக்கு ஆதரவாகவும், தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவாக பேசுகிறார் என்று என்னை கைது செய்பவர்கள், என்னுடைய காரை எரித்தவர்களை, இந்திய கம்யூனிஸ்ட் அய்யா தா.பாண்டியன் அவர்களின் காரை எரித்தவர்களை கைது செய்யாதது ஏன்?

நான் கலவரம் செய்வதாக புதுச்சேரி அரசு சொல்கிறது. கலகக்காரர் பெரியாரின் பேரன் நான். தமிழின எழுச்சிக்காக கலகத்தைச் செய்தேன். தமிழர்கள் ஜனநாயக வாதிகளாக இருக்கிறார்கள். முத்துக்குமாரும் ஜனநாயக வாதியாகத்தான் இருந்திருக்கிறான். அதனால்தான் தீக்குளித்தான். ஆனால் நாடு சொல்கிறது தமிழன் தீவிரவாதி என்று. 

முத்துக்குமார் தீவிரவாதி, நான் தீவிரவாதி ஆனால் என் காரையும், தா.பாண்டியன் காரையும் எரித்த காங்கிரஸ்காரன் தேசியவாதி. 

தமிழீழ மண்ணில் அமைதிப்படை செய்த அக்கிரமங்களை தமிழர்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள். 

இலங்கையில் 48 மணி நேரம் போர் நிறுத்தம் என்பதை ராஜபக்சே சொல்லவில்வை. இந்திய அரசின் அதிகாரிகள்தான் சொல்கிறார்கள். அப்படியானால் போரை நடத்துவது யார்? 

இந்த போரில் விடுதலைப்புலிகள் கொல்லப்படுகிறார்கள் என்ற செய்தி வருகிறதா? அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுகிறார்கள் என்றுதான் செய்திகள் வருகிறது. 

புலிகளை நெருங்க முடியாது. ஏனென்றால் மக்கள்தான் புலிகள். புலிகள் தான் மக்கள். மக்களிடம் இருந்துதான் புலிகள் உருவாகிறார்கள் என்பதால் மக்களை திட்டமிட்டு அழிக்கிறது சிங்கள அரசு. 

7 நாடுகளின் ராணுவ தளபதிகள் சேர்ந்து திட்டம் தீட்டுகிறார்கள். ஆனால் இவர்களால் விடுதலைப்புலிகளை நெருங்க முடியவில்லை. நெருங்கி பார். என்ன ஆகும் என்று தெரியும். 

உலகின் மிகப்பெரிய புரட்சியாளன் எங்கள் அண்ணன் பிரபாகரன். புலிகள் பயங்கரவாதிகள் அல்ல. அவர்களை ஆயுதங்களை கீழே போடச்சொல்லாதீர்கள். அது ஒரு மக்கள் ராணுவம். உயிரையே ஆயுதமாக்கி போராடும் மக்கள் ராணுவத்தை ஆயுதத்தை கீழே போடச் சொல்லாதீர்கள். 

எதுவும் தானாக மாறாது. நாம்தான் மாற்ற வேண்டும். அதுபோல் நாடு தானாக வராது. நாம்தான் அடைய வேண்டும். தமிழீழம் அமைந்தே தீரும் என்றார். 


நன்றி. நக்கீரன் இணையம்

http://www.nakkheeran.in

செவ்வாய், 3 பிப்ரவரி, 2009

முத்துக்குமாரிடம் இருந்து நாம் பெற்றுக் கொள்ள வேண்டியது, தீக்குளிப்பை அல்ல. ‘தீ’ யை!


முத்துக்குமாரிடம் இருந்து நாம் பெற்றுக் கொள்ள வேண்டியது, தீக்குளிப்பை அல்ல. ‘தீ’ யை!

ஈழப் பிரச்சினைக் குறித்தும் அதில் இந்தியத் தமிழர்களின், இந்தியாவின் பங்களிப்புக் குறித்தும், இதுவரை பல கட்டுரைகள் பல அறிஞர்களால் ஆழமாக எழுதப்பட்டிருக்கிறது. அப்படி எழுதப்பட்டிருக்கிற கட்டுரைகள் படிப்பவரை, அவர் எந்த அமைப்பை, எந்தக் கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் அவரை ஒத்துக் கொள்ள வைக்கிற, கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அதை ஒதுக்கி வைத்துவிட்டு, ஒரே புள்ளியில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக செயலாற்ற அழைக்கிற அளவிற்கு இதுவரை ஒரு கட்டுரையும் எழுதப்பட்டதில்லை. ஆனால், முத்துக்குமாரின் கட்டுரை வடிவில் அமைந்திருக்கிற அந்த நான்கு பக்கக் கடிதம், அதை செய்திருக்கிறது. அதை நிரூபித்தது போல், அவரின் எழுச்சிமிகு இறுதி ஊர்வலத்தில் பல்வேறு இயக்கங்களும், மக்களும் லட்சக்கணக்கில் கலந்து கொண்டு தங்கள் உணர்வுகளை எழுச்சியோடு பதிவு செய்தனர். ஈழத்தமிழர்களுக்காக ‘முத்துக்குமார் நடத்திய அந்த எழுச்சிமிகு அணிவகுப்பில்‘ கலந்துக் கொண்டதை, என்னுடைய தகுதியாக, என் அரசியல் நடவடிக்கைகளில் மிகவும் சிறப்பு வாய்ந்தா ஒன்றாக, மிகப் பெருமையோடு கருதுகிறேன். ஏனோதானோ என்றோ, அல்லது தன்னைப் பெரிய அறிவாளியாக, எழுத்தாளனாக காட்டிக் கொள்ள வேண்டும் என்றோ பல மேற்கோள்களைக் காட்டி, படிப்பவனை மிரட்டி நானூறு பக்கங்களுக்கும் மிகாமல், ‘பெரும் குறிப்பு‘ வரைகிற எழுத்தாளர்கள் மத்தியில், நான்கே பக்கத்தில், தனது முதல் எழுத்திலேயே, வெறும் துண்டு பிரசுரத்தில் ஓர் இரவுக்குள் தமிழகத்தையே தலைகீழாகப் புரட்டி விட்டார் முத்துக்குமார். தான் கொண்ட கொள்கையின் மீது அர்ப்பணிப்பும், உண்மையும், துணிவும், தியாக உள்ளமும் இருந்தால், நானூறு பக்கங்கள் அல்ல, நாலே வார்த்தையில் கூட மக்களை தட்டி எழுப்ப முடியும் என்பதற்கு முத்துக்குமாரின் ‘உயில்‘ ஒரு சாட்சி. நமக்கு பாடம். *** அரசியல் அலசல் கொண்ட கட்டுரையை, கடிதத்தை மிகச் சிறப்பாக எழுதுவது, முயன்றால் எல்லோருக்கும் முடிகிற காரியம்தான் என்றாலும், மரணத்தை முடிவு செய்துவிட்டு, எழுதச் சொல்லுங்கள், அவர் எவ்வளவு பெரிய அறிஞராக இருந்தாலும், அவருக்கு ஒண்ணாவது வாய்பாடைக் கூட ஒழங்காக எழுதவராது. தாய்நாட்டிற்காக, மரணத்தைக் கண்டு அஞ்சாத அந்தச் சிறப்பு இந்திய வரலாற்றில் மாவீரன் பகத்சிங்கிடம் இருந்தது. மறுநாள் காலையில் தூக்கு, இரவு லெனின் ‘அரசும் - புரட்சியும்‘ என்ற நூலைப் படித்துக் கொண்டிருக்கிறார் பகத். சிறைக்காவலர், “மன்னிப்பு எழுதிக் கொடுத்தால், தூக்கிலிருந்து தப்பலாமே” என்கிறார். பகத்சிங் சொல்கிறார், “என் மரணத்தைப் பார்த்து லட்சக் கணக்கான இளைஞர்கள் தாய்நாட்டின் விடுதலைக்காக போராட வருவார்கள். என் மரணம் இளைஞர்கள் மத்தியில் எழுச்சியை உண்டு பண்ணும். அதற்காகவே நான் தூக்குகயிறை முத்தமிடுகிறேன்” என்று சொல்லிவிட்டு மீண்டும் தீவிரமாக லெனின் ‘அரசும் - புரட்சியும்‘ என்ற நூலைப் படித்திருக்கிறார் பகத். முத்துக்குமாரின் மிகச் சிறப்பும், பகத்சிங்கைப் போன்றே மரணத்தை மயிறளவுக்கூட மதிக்காததன்மைதான். தன் மரணத்தை முடிவு செய்துவிட்டு, மிகப் பெரிய அரசில் தீர்வை அலசி ஆராய்ந்து ஒவ்வொரு வார்த்தையிலும் நெருப்பு வைத்து எழுதியிருக்கிறார் தமிழகத்து பகத்சிங் முத்துக்குமார். அவர் வைத்துக் கொண்ட நெருப்பைவிடவும் அவர் வைத்த நெருப்பு, லட்சக்கணக்கான தமிழ் இளைஞர்கள் நெஞ்சில், ‘திகுதிகு‘ வென்று பற்றி சூராவளியாய் தமிழகம் முழுக்க சுற்றி அடிக்கிறது. தோழர்களே, முத்துக்குமாரின் அந்த நான்கு பக்க தீபந்தம், நம் கையில் இருக்கிறது. அந்த மாவீரன், மாமேதை முத்துக்குமார் நமக்கு வழிகாட்டிச் சென்றிருப்பது, நம்மை வருத்திக் கொள்ள, கொளுத்திக்கொள்ள அல்ல. தமிழனப் பகையை வருத்த, கொளுத்த. ஆம் தோழர்களே, முத்துக்குமாரிடம் இருந்து நாம் பெற்றுக் கொள்ள வேண்டியது, தீக்குளிப்பை அல்ல. ‘தீ‘ யை. அந்தத் ‘தீ‘ ஈழத்தமிழர்களுக்கு எதிரான, தமிழனத்திற்கு எதிரான, வஞ்சிக்கப்படும் மக்களுக்கு எதிரான சதியைப் பற்ற வைப்பதற்காக மட்டுமே நமக்கு பயன்பட வேண்டும். அது ஒன்றுதான் முத்துக்குமாருக்கு நாம் செய்யும் உண்மையான வீர வணக்கம். -வே. 

மதிமாறன்

வலைப்பதிவு காப்பகம்