வியாழன், 29 ஜனவரி, 2009

மக்களே யோசியுங்கள்! முத்துக்குமார் எழுதிய கடைசிக்கடிதம்.


அன்பார்ந்த உழைக்கும் தமிழ்மக்களே...

வணக்கம். வேலைக்குப் போகும் அவசரத்திலிருக்கும் உங்களை இப்படி சந்திக்க நேர்ந்ததற்கு நான் வருந்துகிறேன். ஆனால் வேறு வழியில்லை. என் பெயர் முத்துக்குமார். பத்திரிகையாளர் மற்றும் உதவி இயக்குநர். தற்சமயம் சென்னையில் உள்ள பத்திரிகை ஒன்றில் வேலை செய்து வருகிறேன். உங்களைப்போல் தான் நானும். தினமும் செய்தித்தாளையும், இணையத்தையும் பார்த்து பார்த்து, தினம் தினம் கொல்லப்பட்டு வரும் எம் சக தமிழர்களைக் கண்டு சாப்பிட முடியாமல், தூங்க முடியாமல், யோசிக்க முடியாமல் தவிக்கும் எத்தனையோ பேரில் ஒரு சாமானியன். வந்தாரை வாழ வைக்கும் செந்தமிழ் நாட்டில் சேட்டு என்றும், சேட்டனென்றும் வந்தவனெல்லாம் வாழ, சொந்த ரத்தம் ஈழத்தில் சாகிறது. அதைத் தடுத்து நிறுத்துங்கள் என்று குரல் கொடுத்தால், ஆம் என்றோ இல்லை என்றோ எந்த பதிலும் சொல்லாமல் கள்ள மௌனம் சாதிக்கிறது இந்திய ஏகாதிபத்தியம். இந்தியாவின் போர் ஞாயமானதென்றால் அதை வெளிப்படையாகச் செய்ய வேண்டியதுதானே.. ஏன் திருட்டுத்தனமாக செய்ய வேண்டும்?

ராஜீவ்காந்தியைக் கொன்றார்கள் என்ற சொத்தை வாதத்தை வைத்துக்கொண்டு, சில தனிநபர்களின் பலிவாங்கல் சுயநல நோக்கங்களுக்காக ஒரு பெரும் மக்கள் சமூகத்தையே கொன்று குவிக்கத் துடிக்கிறது இந்திய அதிகார வர்க்கம். ராஜீவ் காந்தி கொலையில் விடுதலைப்புலிகள் மட்டும் குற்றம்சாட்டப்படவில்லை. தமிழக மக்களையும் குற்றவாளிகள் என்று குற்றம்சாட்டியது ஜெயின் கமிஷன் அறிக்கை. அப்படியானால் நீங்களும் ராஜீவ்காந்தியைக் கொலை செய்த கொலைகாரர்கள்தானா?

ஜாலியன் வாலாபாக்கில் வெள்ளையன் கொன்றான் என்றார்களே, இவர்கள் முல்லைத் தீவிலும் வன்னியிலும் செய்வதென்ன? அங்கு கொல்லப்படும் குழந்தைகளைப் பாருங்கள். உங்கள் குழந்தைகள் நினைவு வரவில்லையா? கற்பழிக்கப்படும் பெண்களைப் பாருங்கள். உங்களுக்கு அதுபோன்ற வயதில் ஒரு தங்கையோ, அக்காவோ இல்லையா? ராஜீவ் கொல்லப்பட்டபோது காங்கிரசின் முக்கிய தலைவர்கள் ஏன் அவருடன் இல்லை, கூட்டணிக் கட்சித் தலைவியான ஜெயலலிதா, தமிழ்நாட்டில் ராஜீவ் கலந்துகொள்ளும் ஆகப்பெரிய பொதுக்கூட்டத்தில் ஏன் பங்கெடுக்கபோகவில்லை என்பதுபோன்ற கேள்விகள் கேட்கப்படாமலும், இவர்களால் பதில் சொல்லப்படாமலும் கிடக்கின்றன. மக்களே யோசியுங்கள். இவர்கள்தான் உங்கள் தலைவர்களா? பணம், அடியாள் பலம் ஆகியவற்றைக் கொண்டு மிரட்டல் அரசியல் நடத்தி வரும் இவர்கள் நாளை நம்மீதே பாய மாட்டார்கள் என்பதற்கு என்ன நிச்சயம்? அப்படி பாய்ந்தால் யார் நம் பக்கம் இருக்கிறார்கள்?

கலைஞரா? நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்வார்கள் என்று அப்பொழுதும் அவர் அறிவிப்பார். பிறகு, மத்திய அரசைப் புரிந்துகொள்வார்(?!). பிறகு மறுபடி சரியான முடிவை எடுக்க வேண்டி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவார் - இந்த மாசம், இந்த வாரம், இதுவரைக்கும் என்ன எவனும் தொட்டதில்ல என்கிற வின்னர் பட வடிவேல் காமெடியைப் போல. காகிதம் எதையும் சாதிக்காது மக்களே! இப்பொழுது, உலகத் தமிழினத் தலைவர் என்ற பட்டப்பெயரைச் சூடிக்கொள்ளவும், தமிழ்நாட்டில் இருக்கும் பணத்தையெல்லாம் தன் குடும்பத்திற்கே உரித்தாக்கவும் விரும்புகிற தேர்தல் காலத் தமிழர் கலைஞர் மக்களின் கோபத்தை எதிர்கொள்ள பயந்து மருத்துவமனையில் போய் ஒளிந்துகொண்டுள்ளார். தனது மந்திரிகளுக்கு அவசியப்பட்ட துறைகளுக்காக சண்டப்பிரசண்டம் செய்து சதிராடிய இந்த சூரப்புலி உண்மையில் தமிழுக்காகவோ, தமிழருக்காகவோ செய்ததென்ன? ஒருமுறை அவரே சொன்னார், ''தேனெடுத்தவன் புறங்கையை நக்காமலா இருப்பா"னென்று. இவருடைய பம்மலாட்டத்தையெல்லாம் பார்த்தால் ரொம்பவே நக்கியிருப்பார் போலிருக்கிறேதே...

பட்டினிப் போராட்டத்தின் மூலம் களம் இறங்கியிருக்கும் சட்டக்கல்லூரி மாணவர்களே... உங்கள் போராட்டம் வெற்றிபெற சகதமிழனாக நின்று வாழ்த்துகிறேன். உங்களோடு களம் இறங்க முடியாமைக்கும் வருந்துகிறேன். ஈழத் தமிழர் பிரச்னை என்றில்லை, காவிரியில் தண்ணீர் விடச்சொல்லும் போராட்டமென்றாலும் சரி, தமிழ்நாட்டிற்காதவரான போராட்டம் எதுவாக இருந்தாலும் சரி, முதலில் களம் காண்பவர்கள் நீங்கள், வழக்கறிஞர்களும்தான். இந்த முறையும் நான்கு மாதங்களுக்கு முன்பாகவே களத்தில் இறங்கியவர்கள் இந்த இரண்டு தரப்பும்தான். உங்களுடைய இந்த உணர்வை மழுங்கடிக்கவே திட்டமிட்டு இந்திய உளவுத்துறை ஜாதிய உணர்வைத் தூண்டிவிட்டு, அம்பேத்கர் சட்டக்கல்லூரி அனர்த்தத்திற்கு வழிவகுத்திருக்கலாம் என்பது என் சந்தேகம். உலகம் முழுக்க மக்களுக்கான புரட்சிகரப் போராட்டங்களில் முன்கையெடுப்பவர்களாக இருந்தது மாணவர்கள் என்கிற ஜாதிதான். அதேபோல், தமிழ்நாட்டிலும் உங்களுக்கு முந்திய தலைமுறையொன்று இதுபோன்ற ஒரு சூழலில், இதுபோல் குடியரசு தினத்திற்கு முன்பு களம் கண்டுதான் காங்கிரஸ் உள்ளிட்ட தேசியக் கட்சிகளைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்டியடித்தது.

ஆக, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தருணம் உங்கள் கைகளுக்கு மறுபடியும் வந்து சேர்ந்திருக்கிறது. பொதுவாக உலக சரித்திரத்தில் இப்படியெல்லாம் நடப்பதில்லை. கடந்த முறை நடந்ததுபோல், உங்கள் போராட்டத்தின் பலன்களை சுயநலமிகள் திருடிக்கொள்ள விட்டுவிடாதீர்கள். போராட்டத்தின் பலன்களை அபகரித்து ஆட்சிக்கு வந்த தி.மு.க. முதலில் செய்த விசயம் மாணவர்கள் அரசியல் ஈடுபாடு கொள்ளக்கூடாது என சட்டம் போட்டதுதான். ஆட்சிக்கு வந்த அது, தமிழின உணர்வுகளை மழுங்கடித்து, ஒட்டுமொத்த தமிழினத்தையும் மகஜர் கொடுக்கும் ஜாதியாக மாற்றியது. அந்த மரபை அடித்து உடையுங்கள். மனு கொடுக்கச் சொல்பவன் எவனாக இருந்தாலும், அவனை நம்பாதீர்கள். நமக்குள்ளிருக்கும் ஜாதி, மதம் போன்ற வேறுபாடுகளை எரித்துக்கொள்ள இதுதான் தருணம். உண்ணாவிரதத்தையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு களம் காணுங்கள். உண்மையில், இலங்கையில் இந்திய ராணுவ நடவடிக்கை என்பது தமிழர்களுக்கெதிரானது மட்டுமல்ல. ஒட்டுமொத்த இந்தியர்களுக்குமே எதிரானது. சிங்களச் சிப்பாய்களிடம் கற்றுக்கொள்கிற பாலியல் நுணுக்கங்களைத்தானே அவர்கள் அசாமில் அப்பாவிப் பெண்களிடம் பரிசோதித்துப் பார்த்தார்கள்! விடுதலைப்புலிகளை ஒடுக்குவதற்கான சிங்கள வன்முறை நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டு வடகிழக்கு மாநிலப் போராளிகளிடம் பயன்படுத்திக் கூர் பார்த்தார்கள்! போதாதற்கு, ஹைட்டியில் சமாதானப் பணிக்காக அனுப்பப்பட்ட ஐ.நா.வின் ராணுவத்திலிருந்து இந்திய மற்றும் இலங்கை ராணுவம் அவரவர்களுடைய பாலியல் நடவடிக்கைகளுக்காக அடித்துத் துரத்தப்பட்டிருப்பதிலிருந்து என்ன தெரிகிறது - இந்தக் கூட்டணி கொள்கைக்க்கூட்டணியல்ல, பாலியல் கூட்டணி என்றல்லவா!, ஆக இந்திய - இலங்கை இராணுவக் கூட்டு என்பது இந்தியர்களின் அடிப்படை மனித உரிமைகளுக்கும் கூட எதிரானதாக இருப்பதால், அகில இந்திய அளவில் மாணவர்கள், ஜனநாயக அமைப்புகளையும் உங்கள் பின்னால் திரட்டுங்கள்.

இதையெல்லாம் மக்களே செய்ய முடியும். ஆனால், அவர்கள் சரியான தலைமை இல்லாமல் இருக்கிறார்கள். உங்கள் மத்தியிலிருந்து தலைவர்களை உருவாக்குகள். உங்கள் போராட்டத்தை சட்டக்கல்லூரி மாணவர்கல் என்ற இடத்திலிருந்து அனைத்து மாணவர்கள் என்று மாற்றுங்கள். உங்களிடமிருக்கும் வேகமும், மக்களிடமிருக்கும் கோபமும் இணைந்து தமிழக வரலாற்றை அடியோடு மாற்றட்டும். ஆன்பலம், பணபலம், அதிகார வெற்றியை உடைத்து எறியுங்கள். உங்களால் மட்டுமே இது முடியும். 'நாங்கள் தமிழ் மாணவர்கள், தமிழ்நாட்டின் உயிரானவர்கள், இங்கு தமிழினம் அமைதிகொண்டிருந்தால் ஏடுகள் தூக்கி படிப்போம். எங்கள் தமிழர்க்கின்னல் விளைந்தால் எரிமலையாகி வெடிப்போம்' என்ற காசி அனந்தனின் பாடலை ஓர் அறிவாயுதமாக ஏந்துங்கள்.. என் உடலை காவல்துறை அடக்கம் செய்துவிட முயலும். விடாதீர்கள். என் பிணத்தைக் கைப்பற்றி, அதை புதைக்காமல் ஒரு துருப்புச் சீட்டாக வைத்திருந்து போராட்டத்தைக் கூர்மைப்படுத்துங்கள். எனக்கு சிகிச்சையோ, போஸ்ட்மார்டமோ செய்யப்போகும் தமிழ்நாடு மருத்துவக் கல்லூரி மாணவர்களே.. உங்கள் கையால் அறுபட நான் புண்ணியம் செய்திருக்க வேண்டும். காரணம், அகில இந்திய அளவில், மருத்துவக் கல்வியில் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக உயர்சாதி மாணவர்கள் போராடிக்கொண்டிருக்க, தன்னந்தனியாக நின்று, மருத்துவக் கல்வியில் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாகப் போராடியர்களல்லவா நீங்கள்? எனக்கு செய்வதெல்லாம் இருக்கட்டும். நம் சகோதரர்களான ஈழத்தமிழர்களுக்கு உங்கள் பங்குக்கு என்ன செய்யப் போகிறீர்கள்?

தமிழீழம் என்பது தமீழத்தின் தேவை மட்டுமே அல்ல, அது தமிழகத்தின் தேவையும் கூட காரணம், இராமேஸ்வரம் மீனவர்கள், உலகில் ஆடு, மாடுகளைப் பாதுகாப்பதற்குக் கூட சட்டமும், அமைப்புகளும் இருக்கின்றன. இராமேஸ்வரம் தமிழனும், ஈழத்தமிழனும் மாட்டைவிட, ஆட்டைவிடக் கேவலமானவர்கள்? எல்லை தாண்டி போகும் மீனவர்கள், புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் தாக்கப்பட்டு வருவதாக இந்திய மீடியா திட்டமிட்டு பிரச்சாரம் செய்து வருகிறது. இவர்களெல்லாம் செய்தித்தாளே படிப்பதில்லையா? சென்னையின் கடற்கரைகளில் அடிக்கடி தைவான் நாட்டை சேர்ந்த மீனவர்கள் வழிதெரியாமல் வந்த்வர்கள் என்று கைது செய்யப்படுகிறார்கள். பல ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் தூரத்திலிருக்கும் தைவான் மீனவன் வழிதவற முடியுமென்றா, வெறும் பன்னிரெண்டு மைல் தூரத்திற்குள் இராமேஸ்வரம் தமிழன் வழிதவறுவது நம்புவது மாதிரியில்லையாமா?

தமிழ்நாட்டில் வாழ்ந்து வரும் வெளிமாநிலங்களைச் சேர்ந்த சகோதர்களே...

உங்கள் சொந்த மாநிலத்தில் கூட இல்லாத நிம்மதியோடும், பாதுகாப்போடும் வாழக்கூடிய மாநிலம் தமிழ்நாடு தான் என்பது உங்களுக்கு அனுபவத்தால் தெரிந்திருக்கும். நாங்கள் இன்று பெரும் இக்கட்டை எதிர்நோக்கியிருக்கிறோம். ஈழத்திலிருந்துக்கும் எங்கள் சகோதரர்கள் இந்தியர் என்னும் நம் பெயரைப் பயன்படுத்திதான் நம் அரசால் கொலை செய்யப்படுகிறார்கள். இந்தப் போராட்டத்தில் நாங்கள் தனித்துவிடப்படுவதை இந்திய அரசு விரும்புகிறது. அப்படி ஆக்கக்கூடாதென நாங்கள் விரும்புகிறோம். ஆகவே, போராடிக்கொண்டிருக்கும் எங்கள் சகோதரர்களுக்கு உங்கள் ஆதரவும் உள்ளதென மத்திய அரசுக்குத் தெரியப்படுத்துங்கள். அரசுகளில் அங்கம் வகிக்கக்கூடிய உங்கள் தேசிய இனங்களைச் சேர்ந்தவர்களை எம் கரத்தை பலப்படுத்துவதோடு, எதிர்காலத்தில், ஒரு நவநிர்மாண் சேனாவோ, ஸ்ரீராம் சேனாவோ தமிழ்நாட்டில் உருவகவிருக்கும் ஆபத்தைத் தவிர்க்கும் என்பது என் கருத்து.

தமிழ்நாடு காவல்துறையிலிருக்கும் இளைஞர்களே...

உங்கள் மீது எனக்கு இருக்கும் மதிப்பு கொஞ்சம் நஞ்சமல்ல, காரணம், தமிழுக்காக மற்றவர்கள் என்ன செய்தார்களோ, அலுவலர்களை ஐயா என அழைப்பது போன்ற நடைமுறை ரீதியில் தமிழை வாழ வைத்துக்கொண்டிருப்பவர்கள் நீங்கள்தான். மக்களுக்காகப் பாடுபடவேண்டும், சமூக விரோதிகளை ஒழுத்துக்கட்ட வேண்டும் என்பதுபோன்ற உன்னத நோக்கங்களுக்காகத்தான் நீங்கள் காவல்துறையில் இணைந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். ஆனால், அதை செய்ய விடுகிறதா ஆளும் வர்க்கம்? உங்களை சிறுசிறு தவறுகள் செய்ய விடுவதன் மூலம் தன்னுடைய பெருந்தவறுகளை மறைத்துக்கொள்ளும் அதிகார வர்க்கம், உங்களை, எந்த மக்களுக்காகப் பாடுபட நீங்கள் விரும்பினீர்களோ, எந்த மக்களுக்காக உயிரையும் கொடுக்கலாம் என்று தீர்மானித்தீர்களோ, அந்த மக்களுக்கெதிராகவே, பயிற்றுவிக்கப்பட்ட அடியாள்களாக மாற்றுகிறது. டெல்லி திகார் ஜெயிலைப் பாதுகாப்பது தமிழக போலீஸ்தான். இந்தியாவில் பழமையான காவல்துறையான தமிழக காவல்துறை சிறப்பாக செயல்பட்டு வரும் காவல்துறைகளில் ஒன்று. ஆனால் அந்த மதிப்பை உங்களுக்குக் கொடுக்கிறதா இந்திய அரசாங்கம்! மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தமிழகம் வந்து திரும்பிப்போகையில், சென்னை விமான நிலையத்தில், அவருக்கான பாதுகாப்பை வழங்க அனுமதிக்க மறுத்திருக்கிறார்கள் மத்திய காவல் அதிகாரிகள். ஏனென்று கேட்டதற்கு, ராஜீவ் காந்தியை நீங்கள் பாதுகாத்த லட்சணம் தான் தெரியுமே என்று கிண்டல் செய்திருக்கிறார்கள். ராஜீவ்காந்தியைத் தமிழக காவல்துறையால் காப்பாற்ற முடியவில்லை என்பது எவ்வளவு உண்மையோ, அதே அளவுக்கு உண்மை, ராஜீவோடு இறந்தவர்களில் பலர் அப்பாவி போலீஸ்காரர்கள் என்பது. உங்கள் அர்ப்பணிப்புணர்வு கேள்விக்காப்பாற்பட்டது. ஆனால் மேற்படி வெண்ணெய் வெட்டி வீரரர்கள் - அதுதான், இந்திய உளவுத்துறை - ராஜீவின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்ற தகவலை அறிந்தபோதும் மெத்தனமாக இருந்தது என்பது பின்னர் அம்பலமானதல்லவா... இதுவரை காலமும் நீங்கள் அப்பாவி மக்களுக்கெதிராக இருந்தாலும் தமிழகத்தின் பெருமைகளில் ஒன்றாகத்தான் இருக்கிறீர்கள். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த
இந்த தருணத்தில், நீங்கள் மக்கள் பக்கம் இருந்தால் மட்டுமே மக்களிடம் இழந்திருக்கிற பெருமையை மீட்டெடுக்க முடியும். ஒருமுறை சக தமிழர்களுக்காக அர்ப்பணித்துப்பாருங்கள். மக்கள் உங்களை தங்கத்தட்டில் வைத்து தாங்குவார்கள். தமிழனின் நன்றி உணர்ச்சி அளவிடற்கரியது. தன்னுடைய சொந்தக்காசை வைத்து அணை கட்டிக்கொடுத்தான் என்பதற்காகவே அவனுக்கு கோயில் கட்டி. தன் பிள்ளைகளுக்கு அவன் பெயரை வத்துக் கொண்டாடிக்கொண்டிருக்கிறான் முல்லையாற்றின் மதுரை மாவட்டத்தமிழன். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், கொந்தளிக்கப் போகும் தமிழகத்தில், மத்திய அரசு அதிகரிகளுக்கு ஒத்துழைக்க மறுப்பது, ரா, சி.பி.ஐ போன்ற அமைப்புகளைச் சேர்ந்தவர்களை உள்ளூர் மக்களுக்கு அடையாளம் காட்டுவதும்தான். இதை மட்டுமாவது செய்யுங்கள். மற்றதை மக்கள் பார்த்துக்கொள்வார்கள்.

களத்தில் நிற்கும் தமிழீழ மக்களே, விடுதைலைப்புலிகளே...

அனைத்துக்கண்களும் இப்போது முல்லைத்தீவை நோக்கி. தாய்த்தமிழகம் உணர்வுபூர்வமாக உங்கள் பக்கம்தான் நிற்கிறது. வேறு ஏதாவது செய்ய வேண்டும் எனவும் விரும்புகிறது. ஆனால் என்ன செய்வது உங்களுக்கு அமைந்தது போன்ற உன்னத தலைவன் எங்களுக்கில்லையே... ஆனால், நம்பிக்கையை மட்டும் கைவிடாதீர்கள். இதுபோன்ற கையறுகாலங்கள்தான். தமிழகத்திலிருந்து அப்படி ஒருவர் இந்தக் காலத்தில் உருவாகலாம் அதுவரை, புலிகளின் கரங்களை பலப்படுத்துங்கள். 1965ல் நடந்த இந்தி எதிர்ப்புப் போரை சில சுயநலமிகளின் கையில் ஒப்படைத்ததால்தான் தமிழக வரலாறு கற்காலத்திற்கு இழுபட்டுள்ளது. அந்தத் தவறை நீங்கள் செய்து விடாதீர்கள்.

அன்பிற்குரிய சர்வதேச சமூகமே, நம்பிக்கைகுரிய ஒபாமாவே,

உங்கள் மீது எங்களுக்கு இன்னும் நம்பிக்கை இருக்கிறது. ஆனால், இறையான்மை கொண்ட ஒரு குடியரசு தம் குடிமகனை இனஒதுக்கல் மூலமாக கொடுமைப்படுத்தாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. வசதிக்காக அமெரிக்காவின் கடந்த காலத்தையே எடுத்துக்காட்டாக சொல்லலாம். உலகப்புகழ் பெற்ற குத்துச்சண்டை மாவீரன் முகமதலி சொன்னானே, என் சருமத்திலிருக்கும் கொஞ்ச வெண்மையும் கற்பழிப்பின் மூலமாகவே வந்திருக்குமென்று... நீங்கள் அமைதியாக இருக்கும் வரை இந்தியா வாயே திறக்காது. ஒட்டுமொத்த தமிழர்களும் அழிக்கப்பட்ட பிறகு வேண்டுமானால் அது நடக்கும். அதுவரை, இந்தியாவின் வாயைப் பார்த்துக்கொண்டிருக்கப் போகிறீர்களா? வன்னியில், விடுதலைப்புலிகளூக்கு எதிரான போர்தான் நடக்கிறது என்கிறார்கள். புலிகள் மக்களைக் கேடயமாகப் பயன்படுத்துகிறார்காள் என்கிறார்கள். அப்படியானால் அரசு சொன்ன பகுதிக்கு வந்த மக்களை ஏன் கொலை செய்தார்கள்? இது ஒன்று போதுமே, தமிழ்மக்கள் விடுதலைப்புலிகளைச் சார்ந்து நின்றாலும் சரி, இலங்கை அரசைச் சார்ந்து நின்றாலும் சரி, தமிழர்கள் என்ற காரணத்திற்காகவே அவர்கள் கொல்லப்படுகிறார்கள் என்பதற்கு. இது இனப்படுகொலை இல்லையா? இந்தியா, பாகிஸ்தான், சீனா ஆயுதம் கொடுத்தும், ஜப்பான் பணம் கொடுத்தும், கூடுதலாக, இந்தியா நாட்டாமை செய்தும் தமிழர்களைக் கொள்கின்றனரென்றால். நீங்கள் உங்கள் மெளனத்தின் மூலமாகவும், பாராமுகத்தின் மூலமாகவும் அதே கொலையைத்தான் செய்துகொண்டிருக்கிறீர்கள் என்பதை ஏன் உணரவில்லை? ஆயுதம் தாங்கி போராடுவதால் மட்டுமே யாரும் தீவிரவாதியாகிட மாட்டார்கள். அறத்திற்கே அன்பு சார்பென்ப அறியார். மறத்திற்கும் அஃதே துணை என்று பாடியுள்ளான் எங்கள் திருவள்ளூவர்.

புலிகள் ஆயுதங்களைக் கீழே போட வேண்டும் என்கிறார் ஜெயலலிதா - என்னவோ பிரச்சினையே புலிகள் ஆயுதம் அடுத்ததால்தான் வந்தது என்பதைப் போலெ.. உணமையில், புலிகள் தமிழீழ இன அழிப்பிலிருந்து உருவாகி வந்தவர்களே தவிர, காரணகர்த்தாக்கள் அல்லர்(they are not the reason: just an outcome)

இந்திய அரசு இந்தப் பிரச்சினையில் ஈடுபட்டிருப்பது வெளிப்படையாகாத வரை, இலங்கைப் பிரச்சினை உள்நாட்டுப் பிரச்சினை. அதில் தலையிட முடியாது என்றது. சீனா, பாகிஸ்தான் அமெரிக்கா போன்ற நாடுகள் இலங்கையில் ஆதிக்கம் பெறுவதைத் தடுப்பதற்காக செய்வதாகச் சொன்னது. நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்திய, மும்பை தொடர்வெடிகுண்டுகள், பிறகு அண்மையில் நடந்த தாக்குதல் எனப் பலவாறாக இந்திய மக்களைக்கொண்று குவித்த பாகிஸ்தானோடு இணைந்து கொண்டு தமிழர்களைக் கொண்று குவிக்கிறது. அப்படியானால், பாகிஸ்தானின் இந்திய மீதான பயங்கரவாதமென்பது இந்தியா-பாகிஸ்தான் இருதரப்பு அதிகார வர்க்கங்களும் தங்கள் மக்களைச் சுரண்ட பரஸ்பர புரிதலுடன் உருவாக்கிக் கொண்ட ஒன்று என்ற எம் சந்தேகம் ஒருபக்கம் இருக்க, இப்போது, விடுதலைப்புலிகள் தீவிரவாதிகள் அதனால்தான் சண்டை என்கிறது. ராஜீவ் காந்தியைக் கொன்றார்கள் என்கிறது. ராஜீவ்காந்தி ஒரு கவுன்சிலரோ, மாவட்டச் செயலாளரோ அல்ல. அவ்ரை ஏற்கனவே ஒருமுறை கொலை செய்யும் முயற்சி இலங்கையில் நடைபெற்றிருந்த போதும் அந்தக் கொலைகாரன் விசாரிக்கப்படவில்லை. ராஜீவ்காந்தியைக் கொல்ல முயன்ற அந்த சிங்கள வீரன் ஆகியோரையும் குற்றம் சாட்டப்பட்டவர்களாக இணைத்துக்கொண்டு மறுபடியும் விசாரிக்கப்பட வேண்டும் என்பது என் கோரிக்கைகளில் ஒன்று. ராஜீவ் மீது புலிகளுக்கு வருத்தம் இருந்திருக்கலாமே தவிர, கோபம் இருந்திருக்க வாய்ப்பில்லை. காரணம், ராஜீவ் இந்திராவின் புதல்வர். இந்திரா, தமிழீழத்தின் சிறுதெய்வங்களில் எம்.ஜி.ஆருக்குப் பக்கத்திலிருப்பவர்.

இந்தியா சொல்லும் காரணங்கள் அடிக்கடி மாறுவதிலிருந்தே இந்தியா நியாயத்திற்குப் புறம்பாகத்தான் இந்தப்போரில் ஈடுபட்டிருப்பது அம்பலமாகி இருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு சூழலில் நீங்கள் ஏன் நேரடியாகத் தலையிடக்கூடாது? புலிகள் போர்நிறுத்தத்தைப் பயன்படுத்தி ஆயுதம் குவிக்கிறார்கள் என்றது இலங்கை. சந்திரிகாவோ, ரணிலோ, மகிந்தாவோ கடந்த காலங்களில் ஒரு கடவுளாக அல்ல, மனிதர்களாகக்கூட நடந்துகொண்டதில்லை. இவர்கள் ஒரு நிர்பந்தத்தின் பெயரில் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுவிட்டார்கள். என்பதால் மட்டுமே போராளிகள் ஆயுதங்களை ஒப்படைத்துவிட வேண்டும். புனரமைப்புப் பணிகளில் ஈடுபடக்கூடாது என்று எதிர்பார்ப்பது என்னவகை நியாயம்? தாங்கள் நேர்மையாக நடந்துகொள்வோம் என்ற நம்பிக்கையை உண்டாக்குவது மூலமாக மட்டுமே போராளிகளை-ஆயுதத்தைக் கீழே வைக்கச்செய்ய முடியும். கடந்த கால அரசுகள் எவையும் அப்படி செயல்படவில்லை. உதாரணம் ரணில்- கருணா. ஆனால், புலிகள் போர்நிறுத்தத்தைப் பயன்படுத்திக்கொண்டு செய்தது ஆயுதம் வாங்கியது மட்டுமல்ல, அது காலாகாலமாக நடப்பதுதானே- ஓர் அரசு நிர்வாகத்தையே உருவாக்கியுருக்கிறார்கள். சர்வதேசத்தின் கண்களில் இது தீவிரவாதமா? அப்பாவித்தமிழர்களைக் காப்பதற்காகத்தான் போரிடுவதாக பசப்புகிறது இந்தியா. ஆயுத தளபாடங்களும், உளவு விமானங்களும்தான் இலங்கை போகின்றனவே தவிர, இந்தியாவால் அனுப்பப்பட்ட ஒரு பாராசெட்டமால் மாத்திரையைக் காட்டச் சொல்லுங்கள் பார்க்கலாம். இந்த லட்சணத்தில், தமிழீழ மக்களுக்கான வசதிகளை இலங்கை அரசு செய்யுமாம். அதற்கு இந்தியா உதவுமாம்... வேலிக்கு ஓணான் சாட்சி! இப்போது சர்வதேச செஞ்சுலுவைச் சங்கத்தின் ஆம்புலன்ஸ்களைத் தாக்கினார்களே, அவர்களும் விடுதலைப்புலிகளா? ப்ரான்சின் 17 மனித உரிமையாளர்களைக் கொலை செய்தார்களே, அவர்களும் விடுதலைப்புலிகளா? சீனாவின் டாங்கிகள், இந்தியாவின் உளவு விமானங்கள், பாகிஸ்தானின் ஆர்டிலரிகள் மட்டுமல்ல... இப்போது எம்மக்களைக் கொலைசெய்து வருவது சர்வதேச சமூகத்தின் மெளனமும்தான் என்பதை எப்போது உணர்வீர்கள்-நியாயத்தின்பால் பெருவிருப்பு கொண்ட ஒரு மக்கள் சமூகம் பூமியிலிருந்து முற்றாகத் துடைத்தழிக்கப்பட்ட பிறகா? அபாரிஜின்கள், மாயா, இன்கா வரிசையில் நாங்களும் சேர்க்கப்படுவது உங்கள் நோக்கமென்றால், எங்கள் பழங்கதைகள் ஒன்றின்படி ஒவ்வொருநாளும் ஏதேனும் ஒரு வீட்டிலிருந்து ஒருவர் வந்து உங்கள் முன்னால் தற்கொலை செய்து கொள்கிறோம்... எங்கள் சகோதரிகளையும், குழந்தைகளையும் விட்டுவிட்டுச் சொல்லுங்கள். தாங்க முடியவில்லை. அவர்களெல்லாம் மனமார சிரிப்பதை ஒருநாள் பார்ப்போம் என்ற நம்பிக்கையில்தான் நாங்கள் போராடிக் கொண்டிருப்பதே. ஒரு பேச்சுக்கு ஒத்துக்கொள்வதென்றாலும்கூட, விடுதலைப்புலிகள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்றாலும் அப்படி ஒரு தண்டனையை வழங்கும் யோக்கியதை இந்தியாவுக்கோ, இலங்கைக்கோ கிடையாது.

காலம் கடந்து வழங்கப்படும் நீதி அநீதியைவிடக் கொடுமையானது.

1. இந்தியா உடனடியாக தமிழீழத்தின் பகுதிகளிலிருந்து தன் துருப்புகளைத் திரும்பப் பெற்றுக்கொள்வதோடு, மேற்கொண்டு செயற்கைக்கோள் உதவிகள், ராடார் போன்ற உதவிகளைச் செய்யக்கூடாதென்று சர்வதேச சமூகத்தால் கண்டிக்கப்பட வேண்டும். இலங்கையோடு இந்தியா அரசு நடந்தும் முக்கியத்துவமற்ற பேச்சுப்பரிமாற்றங்கள்கூட சர்வதேச சமூகம் மூலமாகவே நடக்க வேண்டும். தமிழக மக்களிடமும், உலகெங்கும் பரந்து வாழும் தமிழீழத்தாரிடமும் இந்தியா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்.

2. ஐநா பொதுச்செயலாளரான பான் கி மூன், தொடர்ந்து தன் தாயகமான சீனாவிற்கு ஆதரவான நிலைப்பாட்டிலிருந்து, ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு வருவதால், ஈழம் தொடர்பான முடிவெடுக்கும் அதிகாரம் அவருக்கு வழங்கப்படக்கூடாது.

3. இலங்கை அரசு எந்தெந்த நாடுகளிடமெல்லாம் கோரப்பட்டு புலிகள்மீது தடை விதிக்கப்பட்டதோ அந்தந்த நாடுகளில் புலிகள் மீதான தடை நீக்கப்பட்டு, தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினர் என்ற குற்றத்திற்காக சிறையிலிருக்கும் அதன் உறுப்பினர்கள் எதுவித நிபந்தனையுமற்று உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.

4. புலிகளின் உறுப்பினர்கள் மீதான பாஸ்போர்ட் தொடர்பான குற்றங்கள் மன்னிக்கப்பட்டு, அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்.

5. புலிகளோடு தொடர்புடையது என்னும் குற்றச்சாட்டின் பேரில் தடை செய்யப்பட தொழில் நிறுவனங்களின் உரிமம் மீண்டும் அளிக்கப்படுவதோடு, தக்க நட்ட ஈடும் வழங்கப்பட வேண்டும்.

6. ராஜீவ்காந்தி கொலை வழக்கு இண்டர்போலால் விசாரிக்கப்பட்டு, உண்மையான குற்றவாளிகள் இனம்காணப்பட வேண்டும்.

7. பிரணாப் முகர்ஜி, கோத்தபாய ராஜபக்க்ஷே, சந்திரிகா, உதயணகார, கேகலிய ரம்புக்வெல, பசில்ராஜப்க்ஷ மகிந்த, பொன்சேகா போன்றோர் நார்கோ அனிலிசிஸ் சோதனைக்குப்பட வேண்டும்.

8.அமைக்கப்படபோகிற தமிழீழத்தை அங்கீகரிக்கிற உரிமையை மட்டுகே சர்வதேசம் மேற்கொள்ளலாமே தவிர, அது யாரின் தலைமையில் அமையவேண்டும என்பதை தமிழீன மக்கள் தான் முடிவுசெய்வார்கள்

9. புலிகள் கை பலவீனமான நேரத்தில், மலையக மக்கள் மீது நடந்த வந்தாக்குதல், எதிர்காலத்தில் அப்பகுதிகளில் மீண்டும் ஒரு பாரிய இன அழிவு ஏற்படுத்தப்படுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதால், மலையக மக்கள் தமிழீழத்தோடு இணைய விரும்புகிறார்களா என்பதை வாக்கெடுப்பு மூலம் அறிந்து அதன்படி செயல்பட வேண்டும் இந்த விசயத்தில் மலையக மக்களின் முடிவே இறுதியானது.

10. சென்னையில், குடிபோதையில் அப்பாவித் தமிழர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து, நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட டக்ளஸ் தேவானந்தாவின் தண்டணைக்காலம் பூர்த்தியாகும் காலத்திற்கும் இலங்கைக்குத் தப்பிச்சென்று விட்டதால், அவர் கைது செய்யப்பட்டு, தமிழக போலிசார் வசம் ஒப்படைக்கப்பட வேண்டும்.

11. பத்திரிகையாளரான லசந்தவின் கொலைக்குக் காரணமான அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்.

12. தமிழ்நாட்டிற்கு தஞ்சம் புகுந்திருக்கும் சிங்கள பத்திரிகையாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.

13.தமிழ்நாட்டிற்கு அகதிகளோடு அகதியாக வந்த சிங்களத்தம்பதியர் மீதான பாஸ்போர்ட் குற்றச்சாட்டு நீக்கப்பட்டு, அவர்களும் அகதிகளாக அங்கீகரிக்கப்பட வேண்டும்.

14. சுட்டுக் கொலை செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் குடும்பங்களுக்கான வாழ்வாதரங்கள் உறுதி செய்யப்பட வேண்டும்.

என்றும் அன்புடன்,

அநீதிகளுக்கெதிரான உங்கள் சகோதரன்,
கு.முத்துக்குமார், கொளத்தூர், சென்னை-99

அருமைத்திமிழ் மக்களே, அநீதிகளுக்கெதிரான போராட்டத்தில் நம் சகோதர்களும், பிள்ளைகளும் அறிவாயுதம் ஏந்தியிருக்கிறார்கள். நான் உயிராயுதம் ஏந்தியிருக்கிறேன். நீங்கள் நகலாயுதம் ஏந்துங்கள். ஆம், உங்கள் கையில் கிடைத்திருக்கும் இந்தத் துண்டறிக்கையை நகலெடுத்து, உங்கள் நண்பர்கள், உறவினர்கள், மாணவர்கள் வசம் கொடுத்து, போராட்டத்திற்கான ஆதரவைப் பெருகப் பண்ணுங்கள் நன்றி.


புதன், 28 ஜனவரி, 2009

கூலிகளை உற்பத்தி செய்வதுதான் கல்வியா?



My Photo
சர்க்கார் இவ்வளவு வரிப்பணத்தை படிப்புக்காக செலவு செய்தும் படிப்பு இலாகா விஷயத்தில் எவ்வளவோ கவலை செலுத்தி வந்தாலும் தங்கள் அரசாங்கம் தங்கள் இஷ்டப்படி நடைபெற கூலிகளை தயார் செய்யும் கருத்தோடுதான் செய்கின்றார்கள். அதனால்தான் தற்காலக் கல்வி வயிற்றுப் பிழைப்புக் கல்வி என்றும் அடிமைக் கல்வி என்றும் சொல்லப்படுகிறது. மனிதனுக்கு கல்வியின் அவசியமெல்லாம் மனிதன் தன் அறிவை வளர்க்கவும், அவ்வறிவால், தான் இன்புறவும், மக்கள் இன்புறவுமாக தன்மை ஏற்படவும் அனுகூலமானதாக இருக்க வேண்டும் என்பதற்கே, இப்போதைய கல்வி எவ்வளவு அதிகமாக கற்றவனானாலும் அது அவனது அறிவுக்கு ஒரு சிறிதும் சம்பந்தமில்லாததாகவே இருக்கிறது. எவ்வளவு பெரிய கல்வியும் ஒரு கலையாகவோ தொழிலாகவோ போய்விட்டதேயல்லாமல் பகுத்தறிவுக்கு ஒரு சிறிதும் பயன்படுவதாக இல்லை.

வியாழன், 22 ஜனவரி, 2009

ஈழத்தமிழர் படுகொலையை கண்டித்து மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு ஆர்ப்பாட்டம்‏



ஈழத்தமிழர்கள் மீதான இலங்கை இராணுவ தாக்குதலை நிறுத்தக்கோரியும், தாக்குதலுக்கு துணை போகிற இந்திய அரசைக்கண்டித்தும் வகுப்புகளைப் புறக்கணிக்க அனைத்துக் கல்லூரி மாணவர் கூட்டமைப்பு விடுத்த வேண்டுகோளை ஏற்று திருப்பூர் சிக்கண்ணா அரசு கல்லூரி மற்றும் பார்க் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து விட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 சிக்கண்ணா கல்லூரி முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு கல்லூரி மாணவர் அன்சாரி தலைமை தாங்கினார், ஆர்ப்பாட்டத்தில் சுமார் 1300க்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்றனர். அதேபோல் பார்க் கல்லூரி மாணவர்கள் ராசேசு குமார் தலைமையில் சுமார் 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பல்லடம் சாலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இவ்விரு ஆர்ப்பாட்டங்களிலும் தமிழ்நாடு மாணவர் கழகஅமைப்பாளர்கள் பன்னீர்செல்வம், கார்த்திகேயன், கிருஷ்ணன், முருகன், பாலச்சந்திரன், பிரகாசு பெரியார் திராவிடர் கழக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

  


புதன், 21 ஜனவரி, 2009

கொளத்தூர் மணி, இயக்குநர் சீமான் விடுதலை

சீமான்,கொளத்தூர் மணி பெ.மணியரசன் ஆகியோர் இன்று சிறையிலிருந்து வெளிவருவார்கள்!

பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, இயக்குநர் சீமான், பெ.மணியரசன் ஆகியோருக்கு சென்னை உயர்நீதி மன்றம் பிணை வழங்கியதை தொடர்ந்து இன்று மாலை 6 மணிக்கு கோவை மத்தியச் சிறையிலிருந்து இம்மூவரும் விடுதலையானார்கள். சிறை வாயிலில் கோவை கு.இராமகிருட்டிணன் தலைமையில் ஆயிரக்கணக்காணோர் பங்கேற்க தாரை,தப்பட்டை முழங்க மிகச்சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. வரவேற்பு நிகழ்ச்சியின் முடிவில் மூவரும் தந்தைபெரியார் சிலைக்கு மாலை அணிவித்தனர். அதைத் தொடர்ந்து கொளத்தூர் மணி, இயக்குனர்சீமான்,

பெ.மணியரசன் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். தொடர்ந்து வரவேற்பு நிகழ்ச்சியில் கல்ந்து கொண்டவர்களிடையே பேசும்போது சீமான் பிரபாகரனை ஆதரித்து பேசக்கூடாது என்று சொல்கிறார்கள் தலைவர் பிரபாகரனை ஆதரிக்காமல் வேறு எவனை ஆதரிப்பது? பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக குரல் கொடுப்போர் ஈழத்துக்கு எதிராக கச்சை கட்டுவது ஏன்? என கேள்வி எழுப்பினார். மிரட்டலுக்கு பயப்படாமல் தொடர்ந்து ஈழத்துக்காகவும்,ஈழமக்களுக்காக போராடுகிற விடுதலைப் புலிகளுக்காகவும் குரல் கொடுப்பேன் என முழங்கினார். வரவேற்பு நிகழ்ச்சியில் பெரியார் திராவிடர் கழக தொண்டர்களுடன் அனைத்துவணிகர்சங்கப்பேரவை,விடுதலைச்சிறுத்தைகள், ஆதித்தமிழர்பேரவை, தலித்விடுதலைக்கட்சி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

வியாழன், 15 ஜனவரி, 2009

இதன் பிறகும் இந்த அரசு இருக்கத்தான் வேண்டுமா...!

தமிழீழம்ஆயுதம் ஏந்திய விடுதலைப் புலிகளை ஒடுக்குகிறோம்' என்ற பெயரில், நிராயுத பாணிகளான அப்பாவித் தமிழர்களின் ரத்தத்தைத் தொடர்ந்து குடித்துக் கொண்டே இருக்கிறது இலங்கை ராணுவம். 'ஒரு தமிழனைக் கொன்றால் நூறு சிங்கள ஓட்டு கிடைக்கும்' என்பதே தங்கள் சூத்திரம் என இலங்கை அரசு செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது. இப்போது, 'புலிகளின் கோட்டை எங்கள் கைவசம்' என்ற கொக்கரிப்பையும் கேட்க முடிகிறது. கோட்டையைப் பிடிக்கும் அந்த முயற்சியில் அப்பாவித் தமிழர்கள் எத்தனை ஆயிரம் பேர் வேட்டையாடப்பட்டார்களோ!இலங்கைத் தமிழரைப் பாதுகாக்கப் போராட்டம், ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், ராஜினாமா மிரட்டல், சர்வ கட்சிக் கூட்டம், டெல்லிப் பயணம் என்று தமிழகத் தலைவர்கள் எடுத்துக் கொண்ட எந்த முயற்சிக்குமே மத்திய அரசு கடைசி வரை செவி சாய்க்கவில்லை. நம் ராணுவ அதிகாரிகள் அங்கு சென்று பயிற்சி தரும் தகவலையும் மத்திய அரசு மறுக்கவில்லை. 
'மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியை இலங்கைக்கு அனுப்பி வைக்கிறோம்' என்று கொடுத்த வாக்குறுதியைக்கூடத் தந்திர மாகத் தள்ளிப் போட்டுக் கொண்டே வருகிறது டெல்லி.இதையெல்லாம் பார்க்கும்போது, 'புலிகளை நாங்கள் முழுவதுமாக ஒடுக்கி விடுகிறோம். அதுவரை உங்கள் தேசத்து மக்களைத் திசை திருப்பும் வகையில் கண்ணாமூச்சி அரசியல் நடத்திக் காலத்தைக் கடத்துங்கள்' என்று மத்திய அரசோடு எழுதப்படாத 'புரிந்துணர்வு ஒப் பந்தம்' ஒன்றைப் போட்டிருக்கிறதோ இலங்கை அரசு என்ற பலமான சந்தேகம் தான் எழுகிறது!நினைத்ததை எல்லாம் நிபந்தனைகளாக விதித்து, குறித்த நேரத்துக்குள் சாதித்துக் கொள்கிற தமிழக ஆளுங்கட்சி, இந்த விஷயத்தில் எள் முனையளவுகூட எதையும் சாதிக்கவில்லை என்பதுதான் வேதனையளிக்கும் நிதர்சனமான உண்மை!'இதன் பிறகும் இந்த அரசு இருக்கத்தான் வேண்டுமோ?' என்று பொதுக்கூட்ட மேடையில் முதல்வர் தழுதழுத்த குரலில் எழுப்பிய கேள்வி, தமிழ் மக்களின் காதில் இன்னமும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது!

நன்றி: 'ஆனந்த விகடன்' தலையங்கம் 14.1.09
 

புதன், 14 ஜனவரி, 2009

கிளிநொச்சி வீழ்ச்சி நிலையானதா?


தமிழீழம்தமிழர்களின் அரசியல் தலைநகரமாக கம்பீர மாக நின்ற கிளிநொச்சி, இப்போது ராணுவத்தின் பிடியில். இலங்கை ராணுவம் கிளிநொச்சியைப் பிடித்தபோது, சில நாய்கள் மட்டுமே தென்பட்டன. மக்கள் முழுதும் வெளியேறி விட்டார்கள். மக்களும் புலிப்படையும் இல்லாத மண்ணைப் பிடித்துள்ளது, சிங்கள ராணுவம்.கிளிநொச்சியின் வரலாறு என்ன? முதலாவது ஈழப்போரில் யாழ் மாவட்டம் முழுதும் விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டில் இருந்தபோது, கிளிநொச்சி நகரம் மட்டும் ராணுவத்தின் வசம் இருந்தது. இலங்கை ராணுவ தளபதி டென்சில் கொப்பேகடுவ - 1984 இல் கிளிநொச்சியில் முகாமிட்டு, விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தத்தை வழி நடத்தி வந்தார். 1985 இல் கிளிநொச்சியில் ராணுவம் முகாமிட்டிருந்த காவல் நிலையத்தில் குண்டுகள் நிரப்பிய வாகனங்களை செலுத்தி, புலிகள் பெரும் தாக்குதலை நடத்தினர். ராஜீவ் காந்தி தமிழர்களைக் கொன்று குவிக்க அனுப்பி வைத்த இந்திய ராணுவமும், கிளிநொச்சியில் கடும் பாதிப்புகளை உருவாக்கியது. 
இந்திய ராணுவம் வெளியேறிய பிறகு, ஈழத்தில் இரண் டாம் கட்டப் போர் தொடங்கியது. கிளிநொச்சி யைப் பிடிக்க விடுதலைப்புலிகள் தீவிரமான தாக்குதல்களைத் தொடங்கியபோது, இலங்கை ராணுவம் கிளிநொச்சியிலிருந்து பின்வாங்கி, ஆணையிறவுக்கு தப்பிச் சென்றனர். கிளிநொச்சி மாவட்டத்தின் முழுப் பகுதியும் புலிகள் கட்டுப் பாட்டில் வந்தது.1996 இல் சந்திரிகா பிரதமராக இருந்தபோது கிளிநொச்சியை மீட்க 'சஞ்ஜெய' என்ற பெயரில் மூன்று கட்ட ராணுவ நடவடிக்கைகளை மேற் கொண்டார். கிளிநொச்சி மீண்டும் வரும் நிலையில் ஆக்கிர மிக்கப்பட்டது. 1997 இல் விடுதலைப் புலிகளின் கடற்படை வலிமை பெற்றது. ராணுவம் யாழ்ப்பாணக் கடல் போக்குவரத்தைப் பயன்படுத்த முடியாத நிலைக்கு புலிகள் தாக்குதல்கள் நடந்தன. எனவே யாழ்ப்பாணத்துக்கு தரைவழிப் பாதையைத் தேட ஆரம்பித்த ராணுவம், 'ஜெயசிங்குறு' என்ற ராணுவ தாக்குதலை மேற்கொண்டது. வவுனியாவி லிருந்து கிளிநொச்சி வரையுள்ள தரைவழிப் பாதையை விடுதலைப்புலிகளிடமிருந்து மீட்பதே, இந்தத் தாக்குதல் நோக்கம். 'ஏ9' பாதை வழியாக ராணுவம் தாக்குதலுக்கு வந்தபோது, விடுதலைப் புலிகள் எதிர்ப்பு தெரிவிக்காமல் உள்ளே அனுமதித்தனர். வழியிலுள்ள மாங்குளம் என்ற ஊரைக் கடந்து, கிளிநொச்சிக்கு ராணுவம் எதிர்ப்பே இன்றி நுழைந்து அங்கே முகாமிட்டது. ராணுவத்தின் மற்றொரு பிரிவு எதிர்ப்பே இன்றி மாங்குளம் வந்தது. உள்ளே நுழைய விட்டு ராணுவத்தினரை வெளியேற முடியாமல் சுற்றி வளைத்து, விடுதலைப்புலிகள் நடத்திய தாக்குதலில் ராணுவம் பலத்த உயிர்ச் சேதத்துடன் பின்வாங்கி ஓடியது. புலிகள் நடத்தி அத்தாக்குதலுக்கு 'ஓயாத அலைகள்-2' என்று பெயர். 
மீண்டும் கிளிநொச்சி புலிகள் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. 1999 நவம்பரில் விடுதலைப்புலிகளின் ஓயாத அலைகள் - 3 தாக்குதல் தொடங்கியது. ஆணையிறவு புலிகள் வசமானது. விமானப்படை, தரைப்படை, கப்பல் படை என்று முப்படையினரும் முகாமிட் டிருந்தும், ஆனை யிரவை ராணுவத்தால் தக்கவைக்க முடியவில்லை.இந்தியாவின் ராணுவ உதவிகள், ராணுவ பயிற்சிகள், ராணுவ ரீதியான ஆலோசனைகளோடு 'ராடார்' கருவிகளைப் பொருத்தி, உளவுத் தகவல்களையும் சிங்கள ராணுவத்துக்கு வழங்கி வரும் நிலையில் சீனா, பாகிஸ்தான், இந்தியாவின் ராணுவ உதவியோடு சிங்கள ராணுவம் கிளிநொச்சியைப் பிடித்துள்ளது.இந்திய ராணுவம் சென்றிருந்தபோது விடுதலைப்புலிகள் இடம் பெயர்ந்த முல்லைத் தீவில் மீண்டும் புலிகள் மக்களோடு இடம் பெயர்ந்துள்ளனர்.

                                                         -நன்றி; பெரியார்முழக்கம்

திங்கள், 12 ஜனவரி, 2009

துரோகம் வென்றது!


சிங்கள ராணுவம் கிளி நொச்சியைப் பிடித்து விட்டதைப் பார்ப்பனர்களும், பார்ப்பன ஊடகங் களும் தேசிய காங்கிரசாரும் தங்களது வெற்றியாகவே மகிழ்ந்து கொண்டாட்டம் போட்டு வருகிறார்கள்! இந்தியாவின் பச்சை துரோகத்துக்கு, தமிழக முதல்வர் கலைஞரும், மவுன சாட்சியாகி, இந்தத் துரோகத்தில், தனது பங்கினையும் பதிவு செய்து கொண்டுள்ளார்.உழைப்பால் உதிரத்தைச் சிந்தி, ஈழத் தமிழர்கள் தங்களுக்கென கட்டமைத்த நிர்வாக தலைநகரம் வீழ்ந்து நிற்கிறது.  3 லட்சம் தமிழர்கள் குடும்பத்தோடு தங்கள் உடைமைகளை அப்படியே விட்டு, தங்களின் பாதுகாப்பு அரணான விடுதலைப்புலிகளோடு இடம் பெயர்ந்து விட்டனர்.மக்கள் நடமாட்டமே இல்லாத கிளிநொச்சிக்குள் புகுந்த ராணுவம், காலி மைதானத்தில் வெற்றிக் கும்மாளம் போடுகிறது.
 
மக்கள் நெரிசலாக இடம் பெயர்ந்த முல்லைத் தீவிலும் சிங்கள விமானங்கள் குண்டுகளைப் பொழிந்து, அப்பாவி மக்களை பிணமாக்கி வருகிறது. மக்களையும் விடுதலைப்புலிகளையும் பிரிக்கவே முடியாது. மக்களிடமிருந்தே விடுதலைப்புலிகள் தமிழீழம்உருவாகி வருகிறார்கள் என்ற உண்மையை 3 லட்சம்  மக்களும் தங்கள் தலைவரோடு இணைந்து இடப் பெயர்வு செய்த நிகழ்வின் வழியாக மீண்டும் உலகுக்கு உணர்த்தியிருக்கிறார்கள்.'மக்களுக்கு சேதாரமே இல்லாத ராணுவ நடவடிக்கை' என்று ராஜபக்சே அப்பட்டமாக கூறும் பொய்யை மான வெட்கமின்றி பார்ப்பன ஊடகங்கள் புகழ்ந்து எழுதுகின்றன. குறிப்பாக பார்ப்பன 'இந்து', ராஜபக்சேயை சிறப்பு பேட்டி  கண்டு வெளியிட்டு,  வெற்றிக் களிப்பில் தள்ளாடுகிறது. இலங்கையில் மனித உரிமை மீறல்களை கண் காணிக்க இந்தியாவின் உச்சநீதிமன்ற நீதிபதி பகவதி தலைமையில் அமைக்கப்பட்ட சர்வதேச வல்லுநர் களைக் கொண்ட பன்னாட்டுக்குழு, இலங்கையின் மிக மோசமான மனித உரிமை மீறல்களை சுட்டிக்காட்டி அங்கு செயல்படவே முடியாது என்று அறிவித்ததை இந்தப் பார்ப்பன ஏடுகள் மறைத்து விடுகின்றன. இனப்படுகொலைகள் நிகழக்கூடிய உடனடி ஆபத்துகள் நிறைந்த உலகின் 8 நாடுகள் பட்டியலில் இலங்கையும்  ஒன்றாக சேர்க்கப்பட்டுள்ளதை ஒதுக்கித் தள்ளிவிட்டு, ராஜபக்சேயை ஜனநாயகத்தின் புனிதராக்கி இந்த பார்ப்பன ஏடுகள் பாராட்டு மாலை களைக் குவிக்கின்றன. (காங்கோ, ஆப்கானிஸ்தான், ஈராக், மியான்மார், பாகி°தான், சோமாலியா மற்றும் சூடானின் தார்பூர் பகுதி ஆகியவை மற்ற ஏழு நாடுகள்ஆகும்) இதற்காக இலங்கையைத் தவிர, ஏனைய நாடுகள் அய்.நா.வின் கண்டனத்துக்கு உள்ளாகிய நிலையில் இந்தியா தரும் பாதுகாப்பு அரவணைப்பால், இலங்கை மட்டும் கண்டனத்தி லிருந்து தப்பி வருகிறது.
 
இந்த உண்மை தெரிந்தும் பார்ப்பன ஏடுகள் ஊமைகள் போல் வேடம் தரித்து நிற்கின்றன.போர் நிறுத்தம் கோரி, தமிழக சட்டசபை ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றிய பிறகு இந்தியாவின் அதிகாரிகள் என்.என்.ஜா, கே.பி.எஸ். மேனன், காங்கிரசின் வெளியுறவுப் பிரிவு இணைச் செயலாளர் இராவ்னி தாக்வர் ஆகியோர் கொழும்புக்குப் போய், தமிழக அரசியல்வாதிகளின் கூக்குரலை ஒதுக்கித் தள்ளிவிட்டு, போரைத் தொடருமாறு இலங்கை அரசை வலியுறுத்தி வந்ததைக்கூட இந்தப் பார்ப்பன ஏடுகள் கண்டிக்கத் தயாராக இல்லை.
 
"தமிழ்நாட்டின் அரசியல் கோமாளிகள் கூறுவதை இந்தியா ஒரு போதும் காதில் வாங்காது"
 
என்று இலங்கை ராணுவ தளபதி சரத் பொன்சேகா திமிருடன் பேசியதை சடங்குக்காக இந்தியா கண்டித்ததே தவிர அவர் கூறியதுதான் நூற்றுக்கு நூறு உண்மை என்பதை செயலில் காட்டிவிட்டது.'கிளிநொச்சியைப் பிடித்தப் பிறகே எனது கொழும்பு பயணம்' என்று இறுமாப்பு காட்டினார், இந்தியாவின் வெளிநாட்டுத் துறை அமைச்சர் வங்காளப் பார்ப்பனர் பிரணாப் முகர்ஜி. கலைஞர் சொன்னாலும் சரி; வேறு எவர் சொன்னாலும் சரி; அசைய மாட்டேன் என்றார்.கிளிநொச்சியை ராணுவம் பிடித்த பிறகுகூட, இந்தியப் பார்ப்பன ஆளும் வர்க்கம் ஓய்ந்துவிட வில்லை. 'ரா' உளவு நிறுவனத்துக்கு சொந்தமான நவீன கருவிகள் பொருத்தப்பட்ட ஒரு உளவு விமானத்தில் 'ரா' அதிகாரிகள் கடந்த 3 ஆம் தேதி வானத்தில் பறந்து வேவு பார்த்து, சிங்கள ராணுவத் துக்கு இரகசிய தகவல்களைத் தெரிவித்து வரு கிறார்கள்.
 
'டைம்ஸ் ஆப் இந்தியா' நாளேடு (ஜன.6) இதை அம்பலப்படுத்தியுள்ளது. 40,000 அடி உயரத்தில் பறக்கும் இந்த விமானத்தில் பொருத்தப்பட்ட காமிரா மூலம் பூமியில் உள்ளவர்களை தெளிவாக படம் பிடித்துவிட முடியும். இரவு நேரத்திலும் படம் பிடிக்க லாம். மேகங்கள் சூழ்ந்திருந்தாலும்கூட படம் பிடிக்க லாம். 40,000 அடி உயரத்தில் பறப்பதால், மற்ற விமானங் களின் பாதையில் குறுக்கிடாது பறக்க முடியும். விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் இருக்கு மிடத்தைக் கண்டறிந்து, சிங்கள ராணுவத் துக்கு உளவு கூறவே இந்திய உளவு நிறுவனம்  விமானத்தில் கிளம்பியுள்ளது. இலங்கை இராணுவத்தைப் போல் பாலஸ்தீனர் களின் காசா பகுதியில், இஸ்ரேல் யூதவெறி ஆட்சி, குண்டுகளைப் போடுகிறது. அதைக் கண்டித்து உலகம் முழுதும் கண்டனக் குரல் வெடிக்கிறது.
 
பார்ப்பன 'இந்து' ஏடு, இஸ்ரேல் குண்டு வீச்சைக் கண்டிக்கும். ஆனால், இலங்கை குண்டு வீச்சை மட்டும் ஆதரிக்கும். காசா மக்கள் மீது குண்டு விழுந்தால் கண்டனம்; தமிழன் மீது குண்டு விழுந்தால் இவர்களுக்கு, ஆனந்தக் களியாட்டம். ஒவ்வொரு நாளும் நாட்டின் நிகழ்வுகளுக்கெல் லாம், தமது பேனாவை உடனே தூக்கும் கலைஞர், மத்திய அரசின் துரோகத்தைக் கண்டிக்காமல், வாயை இறுக மூடிக் கொண்டு விட்டார். "கிளிநொச்சியைப் பிடித்தால் என்ன; அழித்தால் என்ன? இப்போது திருமங்கலத்தை நாங்கள் பிடித்தாக வேண்டும்" என்று சூளுரைத்துக் கிளம்பி விட்டார். 'வீரப்ப மொய்லி'கள் பிரபாகரனை பிடித்துக் கொண்டு வந்து இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று திமிருடன் பேசுகிறார்கள்.
 
போபாலில் விஷ வாயு கசிந்து, பல்லாயிரம் மக்களை உயிர்ப்பலியாக்கி, அமெரிக்காவுக்கு தப்பி ஓடிய யூனியன் கார்பைடு நிறுவனத்தின் தலைவன் ஆன்டர்சனை, இந்தியாவுக்கு திருப்பிக் கொண்டு வந்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க யோக்கியதையற்ற காங்கிரசார், அதே யூனியன் கார்பைடு நிறுவனத்துக்கு, மீண்டும் புதிய தொழில் நிறுவனங்களைத் தொடங்க அனுமதியளித்த மானங் கெட்ட காங்கிரசார், பிரபாகரனை பிடித்து வரச் சொல்லி, ஒப்பாரி வைப்பதுதான் வேடிக்கை; வினோதம்.தமிழர்களின் தாயகப் பகுதியை ராணுவத்தின் பிடிக்குள் கொண்டுவருவது என்ன நியாயம் ?தமிழர்கள் தங்கள் தாயகப் பகுதியில் ஒரு தலை நகரையும், நிர்வாகக் கட்டமைப்புகளையும் உருவாக்கி யதை அழிப்பது என்ன நியாயாம்? சிங்களப் பகுதியிலா, அவர்கள் நிர்வாக அமைப்பை உருவாக்கினார்கள்?இலங்கை எங்கள் நாடு என்று கூறிக் கொண்டு சொந்த நாட்டு மக்கள் மீது குண்டு வீசுவதை கண்டிக்காதது எவ்வகையில் நியாயம்?'அய்வருக்கும் தேவி - அழியாத பத்தினி' என்று கூறி   அதை நம்ப வைத்த பார்ப்பனர்கள் பார்வையில் இவை நியாயங்களாகிவிட்டன!
 
சூடு,சொரணையுள்ள தமிழன் ஒவ்வொருவனும் இந்தப் பார்ப்பன கூட்டத்தையும், தேசிய  காங்கிரசை யும், வரப்போகும் நாடாளுமன்றத் தேர்தலில் பின்னங்கால் பிடறியில் தெறிக்க ஓட ஓட விரட்டிட சபதமேற்க வேண்டும்! பார்ப்பானின் தேசியத்தையும், பார்ப்பானின் காங்கிரசையும் தோலுரிப்பதே இனி மானமுள்ள தமிழனின் கடமையாக மாறவேண்டும்! வராற்று துரோகத்துக்கு வட்டியும் முதலுமாக வாங்கிக் கட்டும் காலம் வந்தே தீரும்!
-நன்றி; பெரியார்முழக்கம்

ஞாயிறு, 11 ஜனவரி, 2009

அடிமைக்கு அடிப்படை:


My Photo
நாம் பொறுப்பை உணருகிறோம். நம் மக்களை விழுந்து கிடக்கும் குழியிலிருந்து மேலேற்ற இந்தக் கொள்கைகள் தான் படிக்கட்டு-ஏணி என்று கருதுகிறோம். நாம் இந்த இழி நிலையில் அதாவது ஜாதியில் கீழாய், படிப்பில் தற்குறியாய், செல்வத்தில் தரித்திரர்களாய், தொழிலில் கூலியாய் ஆட்சியில் அடிமையாய் இருப்பதற்கு நம்மிடம் இன்றுள்ள மடமையும், மடமைக்கு ஆதாரமான மதத்தத்துவக் கொள்கை, மத தர்மம், ஜாதி, வகுப்பு பேதம், கடவுள்கள், கல்வித்தன்மைகள் இவைகள் கொண்ட மக்களின் தேசீயம் முதலியவைகளேயாகும். ஆதலால் அடிப்படையாக பயனுள்ளதான ஆக்க வேலை செய்ய முயற்சிக்கிறோம். -தந்தை பெரியார்.

சுதந்திர மனிதன்


My Photo
 விஞ்ஞான அறிவில்லாதவன் எவ்வளவு பெரிய படிப்பாளியாய் அறிவாளியாய் இருந்தாலும் உலகத்திற்குப் பயன்படாதவனே யாவான். மனிதன் பூரண மனிதன் ஆக வேண்டுமானால் தானாகவே சட்டம் தெரிந்து கொள்ளவும், தானாகவே வைத்தியம் தெரிந்து கொள்ளவும், தானாகவே பொறி இயல் (மெக்கானிசம்) தெரிந்து கொள்ளவும் தகுதி உடையவனாகவும் இவைகளைக் கையாளக் கூடியவனாகவும் ஆக வேண்டும். இப்படிப்பட்டவன்தான் மனிதன் என்று சொல்லத்தக்கவனாக் ஆவான் என்பதோடு இப்படிப் பட்டவன்தான் மனிதச் சுதந்திரம் பெற்றவனாவான்.
-தந்தை பெரியார்.

புதன், 7 ஜனவரி, 2009

ஏன் சூத்திரர்களாக இருக்கவேண்டும்?


My Photo

வான் முட்டும் கோபுரங்கள் கட்டியவர் யார்?அதன் உச்சிக்கெல்லாம் தங்க முலாம் பூசியவர் யார்? தில்லை நடராஜனுக்கு தங்க கூரை வேய்ந்து தந்தவர் யார்? ஆங்காங்கு ஆயிரங்கால் மண்டபங்கள் எழுப்பித்தந்தவர் யார்? சத்திரம் சாவடி கட்டி வைத்தவர் யார்? ஒரு பார்ப்பானாவது ஒரு செல்லாக் காசாவது கோயில்,குளம்-தான தர்மம் இவற்றிற்குக் கொடுத்திருப்பானா? அப்படியிருக்க, இவ்வளவு செய்தும் நாம் ஏன் சூத்திரர்களாக இருக்கவேண்டும்? அவர்கள் மட்டும் ஏன் ஒன்றும் செய்யாமலே நம்மை ஏமாற்றி உண்டு பிராமணர்களாய் வாழ வேண்டும்? நாம் ஏன் இன்று கடவுளையே குடுமியை பிடித்து ஆட்டுகிறோம்? ஏன்? அதனால் நல்லது உண்டாகவில்லை. இது சாமியா குழவிக்கல்லா 

என்று கூடத் துணிந்து கேட்கிறோம் . அது நட்டது நட்ட படியே நின்று கொண்டிருக்கிறதே-"ஆம் உண்மை உண்மை" என்று ஒப்புக்கொள்ளும் தன்மையில். இப்படியெல்லாம் சொல்வதற்காக எந்தச்சாமியும் நம்மீது மான நட்ட வழக்கு தொடரக்காணோமே!

-தந்தை பெரியார்

திங்கள், 5 ஜனவரி, 2009

யார்?

தங்கம் எடுத்தவன் யார்? முத்துக்குளித்தவன் யார்? வயல்கள் செய்தவன் யார்? வரப்பு செதுக்குகிறவன் யார்? மாடமாளிகை கட்டினவன் யார்? நந்தவனம் வைத்தவன் யார்? அனுபவிப்பவன் யார்? என்று சோம்பேறிப்பாட்டு பாடினால் போதுமா? இது செய்தவர்கள் யார், அனுபவிப்பவர் யார் என்று கடுகளவு அறிவுள்ளவனுக்கு தெரியுமே! அதாவது மடையன், ஏமாளி, மானமற்றவன் செய்தான்; தந்திரசாலி, வஞ்சகன், கடவுள் பிரச்சாரக்காரன் அனுபவிக்கிறான்; ஆகவே மடையன் புத்திசாலியாகி மானமற்றவனுக்கு மானஉணர்ச்சி ஏற்பட்டு இந்த நிலைமைக்கு காரணம் நமது ஏமாளித்தனமே ஒழிய கடவுளல்ல, மதமல்ல, முன் ஜன்மமல்ல, விதி அல்ல, இவையெல்லாம் புரட்டு இவைகளைத் தகர்த்தெறிவது எனது முதல் வேலை என்று எவன் எண்ணுகிறானோ அவனே முதலாளிகளை, செல்வவான்களை, மாடமாளிகை கூடகோபுரங்கள் அரண்மனையில் வசிப்பவர்கள் ஆகியவர்களை ஒழிக்கத் தகுந்தவனாவான். —-தந்தை பெரியார். [குடியரசு 6-7-1946]

சனி, 3 ஜனவரி, 2009

பகுத்தறிவாளன் யார்?

எனது புகைப்படம்

1. மன உறுதியும் தெளிவான சித்தனையும் பெற்றவன்.

2. அஞ்சா நெஞ்சுடன் அறிவுக்கு முதலிடம் தந்து ஆக்கப் பணிகளைச் செய்வோன்.

3. எங்கும், எதிலும், யாரிடத்தும் உண்மையை ஆராய்ந்து அறிவோன்.

4. சிந்தனையே எல்லா ஆற்றல்களையும் அளிக்க வழி வகுக்கும் மாமருந்து என உணர்வோன்.

5. பெண்ணினத்துக்குச் சம உரிமை வழங்குபவன்.

6. எண்ணம், செயல் ஆகியவற்றின் அடிப்படையாகப் பகுத்தறிவையே முன்னிறுத்தி இயங்குபவன்.

7. அடக்கமும் அமைதியும் உடையவனாய்த் தற்பெருமையும் தாழ்வு மனப்பான்மையும் இன்றி வாழ்வோன்.

8. துன்பம், தடை, சிக்கல், ஏக்கம், அச்சம், பிணி முதலியவற்றை அறிவியல் முறையில் அகற்றக் கற்றவன்.

9. மனித உடல் பல சிக்கல்கள் பொருந்திய பொறி (இயந்திரம்) என்னும் உண்மையைக் கருத்திற்கொண்டு, உடலை ஓம்பி, காலம் வரும்போது மாள அஞ்சாதவன்.

10. பெயர், புகழ், வீண் பெருமை ஆகியவற்றுக்காக ஆடம்பரமான வாழ்வு நடத்தாமல், தற்புகழ்ச்சியைத் துறந்து, பிறர் நலம் பேணுவோன்.

11. கடவுள், மதம், சாதி, முதலிய பொய்மைகளினின்றும், விடுபடுவதுடன், இனம், மொழி, மரபு, இலக்கியம் முதலிய எல்லைக்கு அப்பாற்பட்டு இயங்குபவன்.

12. மனிதனைச் சமநோக்குடன் அணுகி மதிக்கும் இயல்பும், உண்மை அன்பும், தன்னலமின்மையும், வினைத் தூய்மையும், மிக்கவனாய், ஊக்கமுடன் உழைப்போன்.

13. தனக்காக மட்டும் வாழாது, தான் எற்றுக்கொண்ட பொறுப்பு ஒவ்வொன்றிலும் பிறருக்காக, சமுதாய முன்னேற்றத்துக்காக தொண்டாற்றுபவன்.

நன்றி- பகுத்தறிவு   http://pakuththarivu.wordpress.com/

வெள்ளி, 2 ஜனவரி, 2009

கூவி அழைக்கிறோம்



My Photo
• எங்கள் இயக்கம், சமதர்ம நோக்கமுள்ள உண்மைத் தொண்டர்களை இரண்டு கைகளையும் நீட்டி மண்டியிட்டு வரவேற்கக் காத்திருக்கிறது.
• அது உலக மக்கள் எல்லோரையும் பொறுத்த இயக்கம். சாதி, மதம், வருணம், தேசம் என்கின்ற கற்பனை நிலைகளை எல்லாம் தாண்டிய இயக்கம்.
• பிராமணன், சஷத்திரியன், வைசியன், சூத்திரன், எப்பொழுதும் மனிதரே என்று கூவும் இயக்கம்.
• ஏழை என்றும் பணக்காரன் என்றும், முதலாளி என்றும் தொழிலாளி என்றும், எஜமான் என்றும் கூலி என்றும், ஜமீன்தாரன், வேறுபாடுகளையும் நிர்மூலமாக்கித் தரை மட்டமாக்கும் இயக்கம். மற்றும்
• குரு என்றும் சிஷ்யன் என்றும், பாதிரி என்றும், முல்லா என்றும், முன் ஜன்மம் பின் ஜன்மம் என்றும், கர்ம பலன் என்றும், அடிமையையும், எஜமானனையும், மேல் ஜாதிக்காரனையும், கீழ் ஜாதிக்காரனையும், முதலாளியையும், தொழிலாளியையும், ஏழையையும், பணக்காரனையும், சக்கரவர்த்தியையும், குடிகளையும், மகாத்மாவையும், சாதாரண ஆத்மாவையும், அவனவனுடைய முன்ஜன்ம கர்மத்தின்படி அல்லது ஈஸ்வரன் தம் கடாட்சப்படி உண்டாக்கினார் என்றும், சொல்லலாம். அயோக்கியத்தனமான சுயநலங்கொண்ட சோம்பேறிகளின் கற்பனைகளை எல்லாம் வெட்டித்தகர்த்துச் சாம்பலாக்கி, எல்லோருக்கும் எல்லாம் சமம், எல்லாம் பொது என்ற நிலையை உண்டாக்கும் இயக்கம்.
• சாதி சமய தேசச் சண்டையற்று, உலக மக்கள் யாவரும் தோழர்கள் என்று சாந்தியும் ஒற்றுமையும் அளிக்கும் இயக்கம்.
• இன்று உலகமெங்கும் தோன்றி தாண்டவமாடும் இயக்கம்.
• ஆதலால், அதில் சேர்ந்து உழைக்க வாருங்கள்... வாருங்கள்... என்று கூவி அழைக்கின்றோம்.  
-தந்தைபெரியார்
[குடியரசு 30-07-1933]

வியாழன், 1 ஜனவரி, 2009

நாம் புரட்சிக்காரர்களே!


 
My Photo
பொதுநல சேவை என்பது மனித சமூக சமதர்மத்துக்கு விரோதமானதேயாகும். பொதுநலம் என்றால் என்ன? எல்லோருக்கும் நன்மை செய்ய வேண்டும் என்பதுதான் அதன் பொருளாக முடியும். கொடுமைப் படுத்துகிற கூட்டத்துக்கும், கொடுமைப்படுகின்ற கூட்டத்துக்கும் நன்மை செய்வதென்றால் அதனால் என்ன பிரயோஜனம் ஏற்படும்?  கஷ்டப்பட்ட,படுகின்ற கூட்டத்துக்குத்தான் நன்மை செய்யவேண்டும். திருடனுக்கும் திருட்டுக் கொடுப்பவனுக்கும் எப்படி நன்மை செய்ய முடியும்? ஆதலால் நமது சேவை ஒரு நாளும் பணக்காரனுக்கும்,முதலாளிக்கும் நன்மையாய்க்காண முடியாது. அவர்களுக்கு இனியும் நன்மை செய்வது என்பது நமது கொள்கையுமல்ல. ஆகவே, நாம் பொதுநலச்சேவைக்காரர்கள் அல்ல; நாம் புரட்சிக்காரர்கள் என்று சொல்லிக்கொள்ளுவோம். நமக்குச் சீர்திருத்தக்காரர்களும்,பொதுநலச் சேவைக்காரர்களும் பெரிய விரோதிகளேயாவார்கள். புரட்சி ஆரம்பித்த காலங்களில்தான் சீர்திருத்தங்கள்,பொதுநலச்சேவைகள் புறப்படும். எதற்கு? புரட்சிகளை அடக்குவதற்கு! ஆகையால் நாம் எந்த வித சீர்திருத்தவாதிகளுடனும் எந்தவித பொதுநல வாதிகளுடனும் சேராமல் தனித்து நின்றே புரட்சி செய்ய வேண்டும்.

                                      தந்தை பெரியார் ['குடியரசு' 5-2-1933]

வலைப்பதிவு காப்பகம்