புதன், 31 டிசம்பர், 2008

அரசியல் என்பது வயிற்றுப் பிழைப்பு


My Photo
சுயமரியாதையையும், சமத்துவத்தையும் விட நமக்கு வேறு பெரிய காரியம் வேண்டுவதில்லை. சுயமரியாதையும், சமத்துவமும் அற்ற ஜன சமூகம் அரசியலைப் பற்றி பேசுவதென்றால் அது வெறும் மடமையும், புரட்டும், வயிற்றுப் பிழைப்புமல்லாமல் வேறல்ல. நமது வாலிபர்கள் அரசியல் என்னும் பெயரால் ஏமாந்து போகிறார்கள். அரசியல் என்கிறதொத்து வியாதிக்கு பலியாகாமல் நமது வாலிபர்களைக் காப்பாற்றவேண்டும்.
தந்தை பெரியார் [குடியரசு 6-2-1927]

அயோக்கியர்களின் மார்க்கம்


My Photo
அரசியல் என்பது உத்தியோகம், பதவி, சம்பளம் ஆகியவைகளைப் பொறுத்ததாய் இருப்பதால் தேசியம், தேச பக்தி என்பது பெரிதும் வயிற்றுச் சோற்றுக்கு வழி செய்து கொண்டு பதவி, உத்தியோகம் பெற ஆசைப்படுபவர்களிடம் கூலி பெற்றுக் கொண்டு குலைப்பதே மகாப்பெரிய தேசியமாய் விளங்குகிறது.
இந்த மாதிரி அரசியலும் தேசியமும் ஏழைப்பாட்டாளி மக்கள் தலையில் கையை வைத்து அவர்களது ரத்தம் வேர்வையாய்ச் சிந்த உழைக்கும் உழைப்பை கொள்கை கொண்டு சோம்பேறிகளும், அயோக்கியர்களும்,  பொறுப்பற்ற காலிகளும் பிழைக்கத்தான் மார்க்கமாய் இருந்து வருகின்றது.

தந்தை பெரியார்    [குடியரசு 20-9-1936]

செவ்வாய், 30 டிசம்பர், 2008

ஆயுதம்

அகிம்சை என்பது கோழைத்தனம் என்பேன் மற்றவர்களைக் கோழையாக்கி அடக்கித் தாங்கள் வாழ-தந்திரக்காரர்கள் அகிம்சை என்று பேசுகிறார்கள். நம் நாட்டில் அகிம்சையைப் பற்றிப் பேசிய சமணர்களின் தலைகள் பனங்காயாட்டம் வெட்டப்பட்டன. 'ஒருகன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தை திருப்பிக் காட்டு', மேல் வேடியைக் கேட்டால் இடுப்பு வேட்டியையுங் கொடு' என்றார் ஏசு.  ஆனால் இன்று அந்தக் கிருத்துவர்கள் தான் வெடிகுண்டு,அணுகுண்டு  செய்கிறார்கள்.   இம்சை செய்வதற்காக அல்ல; எதிரியிடம் ஒரு அணுகுண்டு இருக்கும் போது என்னிடமும் 2,3 இருக்கிறது என்று சொன்னால்தான்  தான் தப்பிக்க முடியும் என்கிற நிலை இருக்கிறது. செங்கோல் தடியும்,உடைவாளும் இல்லாத அரசன் கிடையாது. எந்தக் கடவுள் ஆயுதம் இல்லாமல் இருக்கிறது கத்தியும்,கழுவுமே சைவத்தைக் காப்பாற்றின. ஆயுதம் இல்லாத காரணத்தினாலேயே சமணம் அழிந்தது.எனவே நமக்கு அவசியம் கத்தி வேண்டும்.    
                                     தந்தைபெரியார் -['விடுதலை' 25-10-1956]

திங்கள், 29 டிசம்பர், 2008

அரசியல் தொண்டு ஒரு புரட்டு

சமூகத்தொண்டிற்கும்,அரசியல் தொண்டிற்கும்,ஒன்றுகொன்று சம்பந்தம் வைத்துக் கொள்ளுவதானது சமூகத்தொண்டிற்கு பெருத்தகேடு சூழ்வதேயாகும். அரசியல் தொண்டு என்பதாக ஒரு தொண்டே இல்லை என்பதும் அது அவ்வளவும் புரட்டு என்பதுமே நமது அபிப்பிராயம். அப்படி ஒன்று இருப்பதாக யாராவது வாதத்தில் வெல்லலாமானாலும் அது கண்டிப்பாய் இது சமயம் நமது நாட்டிற்கு தேவை இல்லாதது என்றே சொல்லுவோம். அரசியல் அயோக்கியர்களை உற்பத்தி செய்து அவர்கள் மூலம் பாமர மக்களை வஞ்சிக்கச்செய்வதே அல்லாமல் வேறில்லை 
    அரசியலில் உழல்வதென்பது என்றைக்கு இருந்தாலும் ஒரு நாளைக்காவது மனிதன் தன்னை அயோகியனாக்கிக் கொள்ளாமலும் தேசத்தை சமூகத்தை காட்டிக் கொடுக்காமலும் வாழும்படி செய்யவே முடியாது.  
                 
                                                             -தந்தை பெரியார்



ஜனவரி-8 சென்னை வரும் இந்திய பிரதமருக்கு கருப்புக்கொடி

ஜனவரி-8 சென்னை வரும் இந்திய பிரதமருக்கு கருப்புக்கொடி‏

ஜனவரி-8 சென்னை வரும் இந்திய பிரதமருக்கு கருப்புக்கொடி‏

ஈழத் தமிழரைக் கொன்று குவிக்கும் இலங்கை அரசுக்கு துணை போகும் இந்திய பிரதமர் மன்மோகன்சிங் வருகிற சனவரி 8-ஆம் தேதி சென்னை வருகிறார் அவரை எதிர்த்து கருப்புக்கொடி போராட்டம் நடத்துவதாக பெரியார் திராவிடர் கழகம் அறிவித்துள்ளது. 

இதனை இன்று கோவையில் செய்தியாளர்களிடம் பெரியார்திராவிடர் கழக பொதுச்செயலாளர் கோவை கு.இராமகிருட்டிணன் தெரிவித்தார் 

ஞாயிறு, 28 டிசம்பர், 2008

துரோகமல்ல...


My Photo
நமது வீட்டில் கொசுக்களின் உபத்திரவம் அதிகம் என்பதாக வைத்துக்கொள்வோம். கொசுக்கடிக்கு பயந்து  கொண்டு நாம் கொசுவலை போட்டுப் படுத்துக்கொண்டால் அது கொசுவுக்குத் துரோகம் செய்தது ஆகுமா? கொசுக்கள் எல்லாம் கூடிக்கொண்டு கொசுவாதம், கொசுத்துவேஷம் என்று சத்தம் போட ஆரம்பித்தால்   கொசுவுக்குப் பயந்துகொண்டு கொசு வலையை அறுத்தெரிந்து விட்டு கொசுக்கள் நமது ரத்தத்தை உறிஞ்சி நமக்கு வியாதியை உண்டாக்கும்படி நாம் தடிக் கட்டையர்களாக படுத்துக்கொள்ளுவதா? ஒருவர் 
தன் சொத்தை பாதுகாத்துக்கொள்ள நினைத்தால் அச்சொத்தைக் கொள்ளையடிக்க காத்திருப்பவனுக்கு கஷ்டமாகத்தான் தோன்றும். நமது வீட்டில் திருடலாம் என்று நினைத்திருப்பவனுக்கு நாம் கதவை தாழிட்டுக் கொண்டு  பத்திரமாய்ப் படுத்திருப்பது  துரோகமாய்க்கூட தோன்றலாம்.  ஒரு சமயம் இதனால் அத்திருடன்  குடும்பம் பட்டினி கிடக்கவும் நேரிடலாம். அதற்காக நம் பயந்து கொண்டோ, பரிதாபப் பட்டுக்கொண்டோ கதவை திறந்து போட்டு படுத்துக் கொள்ள வேண்டுமா? கொஞ காலத்திற்கு நாம் பந்தோபஸ்தாயிருந்தோமானால் திருடன் வந்து பார்த்துவிட்டு ஏமாற்றமடைந்து வீட்டுக்குப்போய் பட்டினி கிடப்பானானால் பிறகு தானாகவே இந்த தொழில் இனி நமக்கு பிரயோஜனப்படாது என்பதாகக் கருதி வேறுஏதாவது யோக்கியமான தொழிலில் ஈடுபட்டு யோக்கியமாக பிழைக்கக் கற்றுக்கொள்வான். ஆதலால் நாம் ஜாக்கிரதையாக இருப்பதன் மூலம் நமது சொத்து பதுகாக்கப் படுவதன் மூலம் திருடனும் யோக்கியனாவதற்கு மார்க்கம் ஏற்படுகிறது. ஆகையால் 
இம்மாதிரி சங்கங்கள் ஏற்படுத்துவதையோ நமது சுயமரியாதையையும் சமத்துவத்தையும் வேறு ஒருவனுக்கு பறிகொடுக்காமல் காப்பாற்ற முயலுவதினாலேயோ எந்த விதத்திலும் யாருக்கும் துரோகம் செய்தவர்களாக 
மாட்டோம். 

                                                    --தந்தைபெரியார்
                                                      [குடியரசு 6-2-1927]





சனி, 27 டிசம்பர், 2008

அரசுக்கு அறிவுரை



My Photo
சாதி வித்தியாசமோ, உயர்வு தாழ்வோ கற்பிக்கின்ற புத்தகங்களைப் படிக்க ஆரம்பித்தால் அவற்றைப் பறிமுதல் செய்ய வேண்டும். உயர்வு தாழ்வு, வித்தியாசம் முதலியவை கொண்ட மடாதிபதிகளை எல்லாம் சிறையில் அடைத்துவிட வேண்டும். பொது சனங்கள் கிளர்ச்சி செய்தால் மடாதிபதிகளைத் தீவாந்திரத்திற்கு அனுப்பிவிட வேண்டும். சுவாமிகளுக்கு உள்ள நகைகள், வாகனங்கள், பூமிகள் எல்லாவற்றையும் பறிமுதல் செய்து, அவைகளை விற்றுப் படிப்பில்லாதவர்களுக்குப் படிப்பும், தொழில் இல்லாதவர்களுக்கு தொழிலும்,  சீவனமும் ஏற்படுத்த உபயோகப்படுத்திவிட வேண்டும்.

--------தந்தை பெரியார்.

வெள்ளி, 26 டிசம்பர், 2008

மனித வாழ்வு



My Photo
மனிதனின் வாழ்வு எப்படி இருக்கிறதென்றால், மிருகங்களின் வாழ்வைப் போல்தான் இருக்கிறது. மனிதன் திருமணம் செய்து கொள்ள வேண்டியது, குழந்தைகள் பெற வேண்டியது. அதைக் காப்பாற்றி அதற்குத் திருமணம் செய்ய வேண்டியது. பின் அது குட்டி போட வேண்டியது. அதைக் காப்பாற்ற வேண்டியது என்று சாகிறவரை தான் போட்ட குட்டியைக் காப்பாற்றுவதிலும், அதற்கு வேலை தேடுவதிலும், அதன் நல்வாழ்விற்குப் பாடுபடுவதிலுமே கழிகிறதே ஒழிய பகுத்தறிவு உடைய மனிதன் தனது சமுதாயத்திற்குப் பயன்படுவது கிடையாது.

------தந்தை பெரியார்

புதன், 24 டிசம்பர், 2008

கையில் காசு இல்லாவிட்டால்


My Photo
 இன்றைய அமைப்பில் கையில் காசு இல்லாவிட்டால் மனிதன் பெரிதும்  யோக்கியனாகக்கூட நடந்துகொள்ள முடியாது.  மனிதன் துரோகி, நம்பிக்கை மோசக்காரன், அயோக்கியன் ஆவதற்குக் காசில்லாக் கொடுமையும், காசு ஆசையும் தான் காரணம்.  ஆனதால் நல்ல முறையில் கொஞ்சக் காசு சம்பாதித்தாலும் அதைப் பத்திரப்படுத்தி வைத்தால் சிரமப்படவோ தவறாக நடந்து கொள்ளவோ வேண்டியதில்லை. 
                                                                                                          ---தந்தை பெரியார்

செவ்வாய், 23 டிசம்பர், 2008

பெரியாரின் கட்டளைகள்


My Photo
1. தொண்டர்களுக்குத் தனிப்பட்ட யாரிடமோ அல்லது தனிப்பட்ட எந்த வகுப்பிடமோ சிறிதும் கோபம், வெறுப்பு, துவேஷம் கூடாது.
2. கடின வார்த்தை, கேவல வார்த்தை, மன வருத்தம் அல்லது ஆத்திரமூட்டும் வார்த்தை கண்டிப்பாய்   பிரயோகிக்கக் கூடாது.
3. போலீஸ்காரரிடம் நமக்குச் சிறிதும் வெறுப்பு, கோபம், விரோத உணர்ச்சி இருக்கக் கூடாது.
4. போலீஸ்காரர் முன் வந்ததும் அவரைப் பார்த்து புன்சிரிப்பு காட்ட வேண்டும்.
5. கூப்பிட்டால், கைது செய்ததாய்ச் சொன்னால் உடனே கீழ்ப்படிய வேண்டும்.
6. போலீஸ்காரர் அடித்தால் மகிழ்ச்சியோடு, சிரித்த முகத்துடன் அடி வாங்க வேண்டும்.  நன்றாய் அடிப்பதற்கு வசதி கொடுக்க வேண்டும்.
7. போலீஸ்காரர் பக்கத்தில் வந்தவுடன் நீங்கள் மெய்மறந்து பக்தியில் இருப்பது போல், ஒரு மகத்தான     காரியத்தை நாம் சாதிப்பதற்கு இந்த அற்ப அதாவது நம் சரீரத்துக்கு மாத்திரம் சிறிது தொந்தரவு, வலி    கொடுக்கக்கூடிய காரியத்தை ஏற்கும் வாய்ப்பு [பாக்கியம்] நமக்குக் கிடைத்திருக்கிறது என்று வரவேற்கும்   தன்மையில் இருக்க வேண்டும்.
8. போலீஸ்காரர் அடிக்கும் போது தடுக்கும் உண்ர்ச்சியோ, தடியை மறிக்கும் உணர்ச்சியோ கண்டிப்பாக இருக்கக்கூடாது.
9. அப்படிப்பட்ட தொண்டர், சர்வாதிகாரியாக இருந்தாலும் அவர்கள் அருள் கூர்ந்து கிட்டவே வரக்கூடாது.
10. ஒலி ஒலிப்பதில் அசிங்கமான வார்த்தைகள், தனிப்பட்ட மனிதர்களைக் குறிக்கும் வார்த்தைகள்    கண்டிப்பாய் உச்சரிக்கக் கூடாது.
11. எந்தக் காரியத்தின் மூலமும் தொண்டர்கள், நடத்துபவர்கள், தலைவர்கள் பலாத்கார உணர்ச்சி, பலாத்கார பயன் உள்ள எண்ணங்கள், செய்கைகள் கொள்ளக்கூடாது.
12. போலீஸார் சுடுவார்களானால் பொது ஜனங்கள் ஒடலாம், ஆனால் தொண்டர்கள் மார்பைக் காட்டியே ஆக வேண்டும்.
13. இந்தி எதிர்ப்பு இயக்கம், காரியாலயம், நிர்வாகம், நிர்வாகஸ்தர்கள் ஆகியவர்களுக்குத் தொண்டர்கள் அடிமை போல் க்ட்டுப்பட்டாக வேண்டும்.
14. பெண்கள் இடமும், மற்றும் இயக்கத்தில் உள்ளவர்களிடமும், வெளியே உள்ளவர்களிடமும் அன்பாய், மிகமிக யோக்கியமாய் நடந்து கொள்ள வேண்டும்.
   இப்படிப் பட்ட பல காரியங்களில் மிகுதியும் கண்டிப்பாய் கட்டுப்பட்டு நடக்க வேண்டியது அவசியமாகும்
                                                                                                        -----தந்தை பெரியார்

திங்கள், 22 டிசம்பர், 2008

பேதம் ஒழிய வேண்டும்

நம்மைப் படைத்த கடவுள் உயர்வு தாழ்வு கற்பித்து நம்மை ஏன் சிருட்டிக்க வேண்டும்? உலகச் சமூகத்தில் நீக்ரோ இனந்தான் கீழ்ப்பட்டது.  அவர்களை வாணிபர்கள் விலைக்கு வாங்கி விற்றார்கள்; அவர்கள் வீதியில் நடக்கக் கூடாது என்றெல்லா மிருந்தது. இந்த நிலை மாற்றப்பட்டது.  அமெரிக்கச் சர்க்காரால் இன்று    1951 சனங்கியைப்படி 100க்குத் 90 பேர் படித்தும், பட்டம் பெற்றும் வருகிறார்கள், எனவே காட்டு மிராண்டிக் காலச் சமூகமெல்லாம் முன்னேற்றமடைந்து மறுமலர்ச்சி பெற்று வாழும்போது, சேர-சோழ-பாண்டியர்களின் ஆட்சிகளில் வாழ்ந்த நம் இனம், அறிவுடன் வீரத்துடன் இருந்த நம் இனம் ஏன் இன்னமும் இழிவு தரும் மனப்பான்மையுடன் கீழ்த்தரமான முறையில் இருக்கிறோம்? நீங்கள் நன்றாகச் சிந்தித்துப்பாருங்கள். நமக்குள் இருக்கும் பேதம் ஒழிய வேண்டும். 

                                                                                                                                                            - தந்தை பெரியார்

ஞாயிறு, 21 டிசம்பர், 2008

ஈழத்தமிழர் பாதுகாப்பு பொதுக்கூட்டம்

20-12-2008 சனிக்கிழமை மாலை 6-00 மணிக்கு திருப்பூரில் ஈழத்தமிழர் பாதுகாப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது.  'உணர்ச்சிக்கவிஞர்' காசிஆனந்தன், பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன், துரைசாமி, ஆகியோர் பேசினார்கள்.'உணர்ச்சிக்கவிஞர்' காசிஆனந்தன்,  ஈழத்தமிழர்களின் பிரச்சினைகள் குறித்தும்,தீர்வு குறித்தும் விளக்கமாக பேசினார். முக்கியமான கடைத்தெருவான
அரிசிக்கடை வீதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த கூட்டத்திற்கு கடைசி நேரத்தில் காவல் துறை தடை விதித்தது. உடனே கூட்ட அமைப்பளர்கள் அரங்கம் ஏற்பாடு செய்துகூட்டத்தை நடத்தினார்கள். மக்கள் பெருமளவில் கலந்துகொண்டனர்.








சனி, 20 டிசம்பர், 2008

கண்டன ஆர்ப்பாட்டம்

இயக்குனர் சீமான் அவர்களின் மகிழுந்து எரிக்கப்பட்டதைக் கண்டித்தும்,பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர்மணி,இயக்குனர் சீமான் ஆகியோர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும் பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது மாவட்டத்தலைவர் துரைசாமி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்ட த்திற்கு காவல் துறை அனுமதி மறுத்திருந்தது. தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய 50க்கும் மேற்பட்ட தோழர்கள் கைது செய்யப்பட்டனர்.

வியாழன், 18 டிசம்பர், 2008

திராவிடன்

திராவிடன் என்றால் என்ன மொழி என்று சிலர் கேட்கிறார்கள். என்ன வார்த்தையாகத்தான் இருக்கட்டுமே. இந்தக் கருத்து இருக்க வேண்டும். இழிவுள்ள சகல மக்களும் ஒன்று சேர அவ்வார்த்தையில் இடம் இருக்க வேண்டும் என்பதுதான் எங்கள் ஆசை. நாம் எல்லோரும் காப்பி சாப்பிடுகிறோம். அது என்ன  மொழி என்று நாம் சிந்திக்கிறோமா? வாய்க்குள்ளே செலுத்தும் காப்பி என்ன மொழி எனறு நீ சிந்திப்பதாகக் காணோம். திராவிடன் என்ற சொல்லைக் கேட்கத்தானா உன் காது கூசுகிறது.

                                                                                                                             -- தந்தை பெரியார்

புதன், 17 டிசம்பர், 2008

நமது சுதந்திரத்தின் தன்மை

நமது சுதந்திரமானது ஒரு யோக்கியன், ஒரு பெரிய மனிதன் என்று சொல்லுவதற்கு ஒரு ஆள் கூட நமது தேசத்தில்-நாட்டில் இல்லாமல் செய்து விட்டது.  அது மாத்திரமா? நம் நாட்டில் காலித்தனம்,   அயோக்கியத்தனம், கயவாளித்தனம், புரட்டு, பித்தலாட்டம், மோசடி, துரோகம், வஞ்சனை முதலிய குணங்கள்-தன்மைகள் இல்லாத மக்களையோ, அரசியல் கட்சிகளையோ, தலைவர்களையோ,  அரசியல்வாதிகளையோ காண முடியவே முடியாதபடி செய்து விட்டது.


செவ்வாய், 16 டிசம்பர், 2008

காட்டு மிராண்டிகள்

    உலக அதிசயங்களைப் புரிந்து கொண்டால்தான் நமது முட்டாள் தனங்கள் நமக்குத் தெரியும். இன்னும் உலகம் எந்த அளவுக்கு மாறும் என்று சொல்வதற்கில்லை.  இன்னும் 4, 5வருடங்களில் மனிதன் தானாகவே பறப்பான்.  எப்படி என்பீர்களா? பறக்கக்கூடிய இயந்திரத்தை முதுகில் கட்டிக் கொண்டு விசையை திருப்பினால் தானகவே பறக்க ஆரம்பிதது விடுவான். இப்படிப்பட்ட புரட்சிகரமான மாறுதல் காலத்தில் 200டன் விறகின் மேல் ஒரு முழச் சிலையை வைத்து 2000, 3000 முட்டாள்கள் இழுக்கிறான் என்றால் நாமெல்லாம் காட்டு மிராண்டிகள் என்பதற்கு இதைவிட வேறு என்ன அத்தாட்சி வேண்டும்.

   
                                                                                                             ----தந்தை பெரியார் 

திங்கள், 15 டிசம்பர், 2008

சுதந்திரம் யாருக்கு?

அன்றைக்கு மீனவர்கள் மீனவர்களாகத்தான் இருந்தார்கள்; இன்றைக்கும் மீனவர்கள் மீனவர்களாகத்தானே உள்ளனர்? பறையர், பறையராகத்தானே உள்ளார்கள். பிற்படுத்தப்பட்டவர்கள் பிற்படுத்தப்பட்டவர்களாகவே, "சூத்திர" ராகவே இருக்கிறார்கள்! ஆனால் சுதந்திரம் வந்ததன் பயனாகச் சில காலிப்பசங்கள், திடீர்ப் பணக்காரர்களாக ஆகி இருக்கிறார்கள். கொள்ளையடித்துப் பம் குவித்து உள்ளார்கள். தெருவிலே திரிந்தவர்கள் எல்லாம் மந்திரிகளாக ஆகி இருக்கிறார்கள். எனவே சுதந்திரம் வந்து நமக்கு ஒன்றும் சாதித்துப் போடவே இல்லை.

- தந்தை பெரியார்

ஞாயிறு, 14 டிசம்பர், 2008

அடிமை வாழ்வு

நீக்ரோக்களை மாட்டை விற்பது போல் விற்று வந்தார்கள். அவர்களை என்ன செய்தாலும் கேட்க முடியாது. அப்படிப்பட்ட காட்டு மிராண்டியாக விருந்த நீக்ரோ இன்று விடுதலை பெற்றுச் சுதந்திர நாடமைத்துக் கொண்டானே. ஆனால் தமிழன் அப்படி வாழ்ந்தான். இப்படி வாழ்ந்தான் என்று பழம் பெருமை பேசப்படும் அந்தத் தமிழனின் இன்றைய நிலை எனன? வறுமை காரணமாகத் தற்கொலை செய்து கொள்கிறான். நாடு தாண்டிக் கூலி வேலை செய்யக் கள்ள தோணி மூலம் சென்று கஷ்டப்படுகிறானே. ஏனிந்த நிலை? சிந்திக்க வேண்டாமா? - தந்தை பெரியார்.

வெள்ளி, 12 டிசம்பர், 2008

இளைஞர்தம் இயல்பு

இளைஞர்கள் குழந்தைகளுக்குச் சமானமானவர்கள். சமீபத்தில் உள்ளதைப் பற்றுகிற்வர்கள். பின் விளைவை அனுபவித்து அறியாதவர்கள். கண்ணோட்டம் விழுவதால் பற்றி பற்றி விடுபவர்கள். எழுச்சி என்பது எங்கெங்குக் காணப்படுகிறததோ, கூட்டம் குதூகல்ம் என்பவை எங்கெங்குக் காணப்படுகின்றனவோ அவற்றை யெல்லாம் பற்றுவதும், அவை மறைந்தால் கைவிட்டு விடுவதுமான குண முடையவர்கள்.

வியாழன், 11 டிசம்பர், 2008

“நான் தோற்கடிக்கப்பட்டு விட்டேன்…… ஆனால்……”

“நான் தோற்கடிக்கப்பட்டு விட்டேன்…… ஆனால்……”

vps2

முதலிலேயே சொல்லிவிடுவது நல்லது. ஓட்டு அரசியலின் மீது நம்பிக்கையோ…… மரியாதையோ இல்லை எனக்கு.. ஆனால் எனக்கு இல்லை என்பதற்காக அரிதான பூக்கள் பூக்காமலா இருக்கும் அங்கு? அப்படிப்பட்ட ஒன்றுதான் விஸ்வநாத் பிரதாப் சிங்.

வி.பி.சிங் 1931 ல் பிறந்தார்.
1980 ல் உ.பி.முதல்வரானார்.
1984 ல் மத்திய நிதியமைச்சரானார்.
பிற்பாடு ராணுவ அமைச்சரானார்.
போபர்ஸ் காந்தியால் டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.
1989 ல் பிரதமரானார்.
1990 ல் ஆட்சியை இழந்தார்.
2008 ல் இறந்தார்.
என வெறுமனே புள்ளிவிவரங்களுக்குள் புதைத்துவிடக் கூடிய வாழ்க்கையா அவருடையது?

91 ஆம் ஆண்டு புது தில்லி ரயில் நிலையத்தில் இறங்குகிறேன். எதேச்சையாக எதிரில் நிற்கும் ரயில்களைப் பார்த்தவனுக்கு பேரதிர்ச்சி. பெரிய பெரிய கொட்டை எழுத்துக்களில் “விபி.சிங்கைக் கொல்வோம்” …… “கொல்பவர்களுக்குப் பரிசு 1 லட்சம்”…… என வெள்ளை நிறத்தில் வண்டி முழுவதும் எழுதிக் குவிக்கப்பட்டிருந்தது. அந்த வேளையில்…… அதை எழுதியவர்களின் அறியாமையை விடவும்…… அதை ஆறு மாதங்களாகியும் அழிக்காமல் விட்டிருந்த அதிகார வர்க்கத்தின் வக்கிரம்தான் என்னை கோபத்தின் உச்சிக்கே கொண்டு சென்றது. தமிழகக் கட்சிகளுக்குள் எவ்வளவுதான் குடுமிபிடி சண்டை இருந்தாலும்…… ஒரு ஆளுங்கட்சித் தலைவரையோ…… ஒரு எதிர்க்கட்சித் தலைவரையோ தரக்குறைவாக விமர்சித்து எழுதியிருந்தால் அதை இரவோடு இரவாக போலிசாரே அழித்துவிடுவார்கள். ஆனால் வி.பி.சிங் அவர்கள் ஆட்சியை இழந்து ஆறுமாதமாகியும் அப்படியே அதை அழிக்காமல் விட்டிருக்கிறார்கள் என்றால் காரணம் என்னவாக இருக்கும் என்று யோசிக்கிறேன். ஒரே ஒரு காரணம்தான்.

அது: மண்டல் கமிஷன்.
(வடக்கு எதிலும் நம்மை விட ஸ்லோ பிக்கப்தானே……)

ஆண்டாண்டு காலமாக தாங்கள் மட்டுமே அனுபவித்து வந்த பதவிகளும், பெருமைகளும் இந்தப் “பாழாய்ப் போன” மண்டலால் எல்லோருக்கும் பகிர்ந்தளிக்க வேண்டி வந்துவிட்டதே என்கிற எரிச்சல்……

மனுதர்மத்தின் பேரால் கல்வி மறுக்கப்பட்டவர்களுக்கு
மண்டல்தர்மத்தின் மூலம் கல்விக்கூடங்களின் கதவு திறக்கப்படுகிறதே என்கிற ஆத்திரம்……
இவை எல்லாம்தான் அவர்களை அப்படி எழுத வைத்திருக்கிறது.

இன்னமும் என் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது வி.பி.சிங்கின் அந்த வரிகள் :
மஸ்ஜித் பிரச்சனையை முன்னிருத்தியவர்களை
மண்டலால் கவிழ்த்துவிட்டாரே என்கிற ஆத்திரம் தலைக்கேற அரசுக்கான ஆதரவை விலக்கிக்கொண்டு வெளியில் வருகிறார் அடல் பிகாரி. அடுத்து வி.பி.சிங்கை நோக்கி நீளுகின்றன பத்திரிக்கையாளர்களின் மைக்குகள்.

“என்ன…… இவ்வளவு மோசமான தோல்வியைத் தழுவியிருக்கிறீர்களே……?” என்கிறார்கள் பத்திரிக்கையாளர்களும் தொலைக்காட்சியினரும்.

“ஆம்…… நான் தோற்கடிக்கப்பட்டு விட்டேன். ஆனால்…… பலகோடி பிற்படுத்தப்பட்டவர்களின் நலனுக்காக வந்த மண்டல் குழுவின் பரிந்துரைகளை இந்திய அரசியலின் நிகழ்ச்சி நிரலில் வைத்த பிற்பாடு.”

(Yes. I am defeated.
But Mandal is in Agenda.)
என்று வெகு நிதானமாக தெரிவித்தபடி இறங்கிச் செல்கிறார் வி.பி.சிங்.

ஆம். அதுதான் நிதர்சனமான உண்மை.

தங்களது இந்திரா காந்தியின் காலத்தில் கண்டுகொள்ளவே படாத மண்டல் குழுவின் பரிந்துரைகளை……

தங்களது ராஜீவ் காந்தியின் காலத்தில் குப்பைக் கூடையில் வீசப்பட்ட மண்டல் குழுவின் பரிந்துரைகளை……

தங்களது நரசிம்மராவ் காலத்தில் நிறைவேற்ற வேண்டிய கட்டாயம் காங்கிரசுக்கு ஏற்பட்டது என்றால் அதற்குக் காரணம் விஸ்வநாத் பிரதாப் சிங்தான்.

அவ்வளவு ஏன்…… பா.ஜ.க.வின் கட்சித் தலைமையில் கூட பிற்படுத்தப்பட்டவர்களைக் கணக்குக் காட்ட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது என்றால் அதற்கும் விஸ்வநாத் பிரதாப் சிங்தான் காரணம்.

நேரு யுகத்தில் நேரடி அரசியலில் நுழைந்தாலும்
நேரு பரம்பரை செய்யத் தவறியதை
செய்யத் துணியாததை செய்து காட்டியவர்தான் வி.பி.சிங்.

ஆனால் வி.பி.சிங்கை வெறுமனே இட ஒதுக்கீட்டுக்கான ஆளாக மட்டும் ஒதுக்கிவிடுவதில் ஒப்புதலில்லை எனக்கு. எப்படிப் பெரியாரை வெறும் கடவுள் மறுப்பாளராக மட்டுமே சுருக்கிக்காட்டி சுகம் காணுகிறார்களோ சிலர் அப்படி. பிரதமர் பதவியை விட்டு விலகிய பின்பு அவர் வாழ்ந்த வாழ்க்கை அப்படிக் காட்டவில்லை நமக்கு. புற்று நோயோடு போராடியபடியும்…… வாரத்தில் மூன்று நாட்கள் சிறுநீரகத்துக்கான டயாலிசிஸ் செய்தபடியும்…… டெல்லி குடிசைப் பகுதி மக்கள்…… ரிக்க்ஷா இழுப்பவர்கள்…… வாழ்வுரிமைக்காக அவர் நடத்திய போராட்டங்கள் ஏராளம்.

தனது ஒத்துழைக்காத உடலோடு ஒருபுறம் போராடிக் கொண்டே மறுபுறம் தலித்துகள்…… நிலமற்ற தொழிலாளர்கள்…… “நலத்”திட்டங்களின் பேரால் தங்களது வாழ்விடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள்…… என எண்ணற்ற விளிம்புநிலை மக்களுக்காக தன் பங்களிப்பை அளித்து வந்தார்.

ஆனால்…… அவையெல்லாம் வட இந்தியப் பத்திரிக்கைகளின் பதினாறாம் பக்கச் செய்தியாகக் கூட இடம் பெறவில்லை. அவர் நம்மிடமிருந்து விடை பெற்ற அன்று மும்பையில் நடந்த துயரமான துப்பாக்கிச் சூடுகளுக்கும், குண்டுவெடிப்புகளுக்கும் கூட மனதார நன்றி சொல்லியிருப்பார்கள் வடபுலத்து ஊடகவியலாளர்கள். எப்படியோ இந்தச் செய்திகளால் அந்த மனிதனது மரணம் பின்னுக்குத் தள்ளப்பட்டதே என்று. கமண்டலங்களின் கதையை மண்டலால் முடிவுக்குக் கொண்டு வந்தவன் மீது ஆத்திரம் இல்லாமலா இருக்கும்?

இவை எல்லாவற்றை விடவும் ராஜகுடும்பத்தில் பிறந்து வளர்ந்திருந்தாலும்…… பிரதமர் பதவியையே வகித்திருந்தாலும்…… இன்றைய இந்திய அரசியல் அமைப்பு முறை அவருக்குள் ஏற்படுத்திய ஏமாற்றமும்…… அதிருப்தியும்…… அவரை “நான் மாவோயிஸ்ட் ஆக விரும்புகிறேன்” என்று பிரகடனப்படுத்தும் அளவிற்குக் கொண்டு சென்றது.

ஆம். அதனை அவரது வார்த்தைகளிலேயே சொல்வதானால்……

“ உயர் தொழில் நுட்ப நகரங்களின் பேராலும்…… சிறப்புப் பொருளாதார மண்டலங்களின் பேராலும்…… லட்சக்கணக்கான வேலை வாய்ப்புகளை வழங்குவதாக ஒவ்வொரு முதல்வரும் அள்ளி வீசுகிறார்கள். ஒவ்வொரு தொழில் அதிபரும் தனது பொருளுக்கான விலையாக அரசு இவ்வளவு தந்தாக வேண்டும் என அரசுக்கு ஆணையிடுகிறார்கள். ஆனால்…… “உனது விளைபொருள்களுக்கான விலையை நாங்கள்தான் தீர்மானிப்போம்” என்று விவசாயிகளிடம் ஆணை பிறப்பிக்கிறது அரசாங்கம். இந்த மக்களின் குரலுக்கு நீங்கள் செவிமடுக்க மறுத்தால் நாளை அவர்கள் ஆயுதம் ஏந்துவதை எவராலும் தடுக்க முடியாது. உண்மையில் நான் மாவோயிஸ்ட் ஆகவே விரும்புகிறேன். ஆனால் அதற்கு என் உடல் நிலை மட்டும்தான் தடையாக இருக்கிறது.”

உண்மைதான்.
‘பொருளாதாரச் சீரழிவு என்கிற எரிமலையின் மீதுதான் உட்கார்ந்து கொண்டிருக்கிறது இந்தியா.’

சாதீய ஏற்றதாழ்வுகளும்
மதங்களின் மடைமையும்
பொருளாதாரப் பாகுபாடுகளும்
அதன் சீற்றத்தைக் கூட்டுமேயன்றி
குறைக்கப் போவதில்லை.

எரிமலையற்ற வாழ்க்கைதான் அந்த எளிய மனிதனின் கனவு. பாதியில் அறுபட்ட அக்கனவின் மீதியை நனவாக்குவது நம் கைகளில்தான் இருக்கிறது.

சென்றுவா எம் நண்பனே.



நன்றி

http://pamaran.wordpress.com

ஞாயிறு, 7 டிசம்பர், 2008

சிந்தனா சக்தியற்றவன்

தெரியாததை, இல்லாததை நம்ப வேண்டும்; ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதால், மனிதன் அறிவு பெற முடியாமல் சிந்தனா சக்தியற்ற வனாக ஆகிவிடுகின்றான்.

- தந்தை பெரியார்

திங்கள், 1 டிசம்பர், 2008

வீரவணக்கம்

சமூகநீதிப்போராளி 
வி.பி. சிங் 
அவர்களுக்கு
வீரவணக்கம்

ஈழக் கொடுமைகளை விளக்கி மாணவர் பிரச்சாரம்

தமிழர்களின் மீது விமானம் மூலம் குண்டுகள் வீசி படுகொலைகள் செய்து வருகிற சிங்கள இனவெறி இலங்கை அரசை கண்டித்தும். இலங்கை அரசுக்கு ராணுவபயிற்சி,கருவிகள், பொருளாதாரஉதவிகள் என தொடர்ந்து உதவி செய்து தமிழர்களை கொன்றொழிக்க துணை போகும் இந்திய அரசைக் கண்டித்தும். இலங்கையில் என்ன நடைபெறுகிறது என்பதை விளக்கியும் தமிழ்நாடு மாணவர் கூட்டமைப்பு சார்பில்
தமிழகமெங்கும் நடைபெற்று வருகிற பிரச்சாரப்பயணம்  30-11-2008 ஞயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு திருப்பூர் வந்தடைந்தது. திருப்பூரில் அனுப்பர்பாளையம்,பழைய பேருந்துநிலையம், வெள்ளியங்காடு.
வீரபாண்டி பிரிவு ஆகிய் இடங்களில் நடைபெற்ற இப்பிரச்சாரத்தில் மாணவர் கூட்டமைப்பு தலைவர் டாக்டர் எழிலன், பெரியார்திராவிடர் கழக நிர்வாகிகள் அங்ககுமார்,துரைசாமி,அகிலன்,முகில்ராசு,கார்த்திகேயன், 
ராஜேஷ்குமார்,விவேகானந்தன், மற்றும் அனைத்துக் கல்லூரிகளிலிருந்தும் மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.                                            

வலைப்பதிவு காப்பகம்