சென்னை சட்டக் கல்லூரியில் நடந்த வன்முறையை தொலைக்காட்சியில் பார்த்தீர்களா? ஐயோ என்ன கொடுமை? அதைப் பார்த்த அன்று முழுவதும் என்னால் சரியாக சாப்பிடக் கூட முடியவில்லை.
-எஸ். சௌமியா
அது சென்னை சட்டக் கல்லூரி அல்ல. சென்னையில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரி.
அந்தக் காட்சியை நானும் பார்த்தேன். நிஜமாகவே நடக்கிற எந்த சண்டையையும் இப்படி காட்சியாக்கி திட்மிட்டு தொகுத்து, பின்னுரைகளோடு ஒளிப்பரப்பினால், பார்ப்பவர்களுக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுக்கும்.
நானும் அதைப் பார்த்த மாத்திரத்தில் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளானேன். அந்தக் காட்சி என்னை பதட்டப்படவைத்தது. மிகுந்த வேதனைக்கு உள்ளாக்கியது.
கட்டையாலும், தடியாலும், குச்சியாலும் தாக்குகிற இந்தக் காட்சியே நம்மை இவ்வளவு திகில் அடைய வைக்கிறதே, மேலவளவு என்ற கிராமத்தில், பஞ்சாயத்துத் தலைவர் பதவிக்கு நின்று வெற்றி பெற்றார் என்கிற ஒரே காரணத்திற்காக, ஓடுகிற பஸ்சில் ஆதிக்க ஜாதி வெறியர்களால் வித விதமாக வெட்டி கொலை செய்யப்பட்டார் ஒருபாவமும் அறியாத முருகேசன்.
அந்தக் கொலை வழக்கில் உயர்நீதி மன்றம் வழங்கிய தீர்ப்புரையின் சிறிய பகுதியை உங்களுக்குத் தருகிறேன்;
1. “ஈனப்பயலான உனக்கு எதற்கு தலைவர் பதவி, எதற்கு நஷ்ட ஈடு?” என்றபடி, தான் பதுக்கி வைத்திருந்த (அருவாள்) ஆயுதத்தால் அழகர்சாமி முருகேசனின் வலது தோளில் வெட்டினார். பேருந்திலிருந்த பயணிகள் அலறி அடித்து இறங்கி ஓடினார்கள். அழகர்சாமி முருகேசனின் தலையைத் துண்டித்து, துண்டித்த தலையோடு மேற்கு நோக்கி ஓடினார்” (சாட்சி கிருஷ்ணன்).
2. “மார்க்கண்டன் முருகேசனின் வயிற்றில் குத்தினார். அய்யாவு முருகேசனின் வலது உள்ளங்கையை வெட்டினார். அழகர்சாமியோ முருகேசனின் தலையைத் துண்டித்து, துண்டித்த தலையை எடுத்துக்கொண்டு வடமேற்கு திசை நோக்கி ஓடினார்” (சாட்சி ஏகாதெசி).
3. “முருகேசனின் துண்டிக்கப்பட்ட தலை, பேருந்தின் படிக்கட்டில் வந்து விழுவதைப் பார்த்தேன். அழகர்சாமி அந்தத் தலையை எடுத்துக் கொண்டு போய்விட்டார்” (சாட்சி மாயவர்).
4. “சக்கரமூர்த்தி முருகேசனின் கைகளை அருவாளால் வெட்டினார். அழகு முருகேசனை சரமாரியாக வெட்டினார்” (சாட்சி கல்யாணி).
5. “அழகர்சாமி முருகேசனை அருவாளால் வெட்டினார். அழகு முருகேசனின் இடது கன்னத்தை வெட்டினார்; பாரதிதாசன் முருகேசனின் இடது கையை வெட்டினார்; நாகேஷ் முருகேசனின் இடது மணிக்கட்டை வெட்டினார். கதிர்வேல், தங்கமணி, கணேசன், மணி ஆகியோரும் முருகேசனின் வயிற்றுப் பகுதி மற்றும் மார்புப் பகுதியில் வெட்டினார்கள். அழகர்சாமி முருகேசனை வெட்டுவதைப் பார்த்தேன். முதல் வெட்டு முருகேசனின் வலது தோளில் விழுந்தது. பின்னர் முருகேசன் இழுக்கப்பட்டு மற்ற அம்பலக்காரர்களும் முருகேசனை வெட்டினார்கள், குத்தினார்கள்” (சாட்சி பழனி).
6. “அழகர்சாமி முருகேசனின் வலது தோளில் அருவாளால் வெட்டினார். பேருந்தில் இருந்தவர்கள் அலறி அடித்துக் கொண்டு இறங்கி ஓடினார்கள். அப்போது மேலும் சில அம்பலக்கார சாதியினர் அங்கு வந்து, ஆதி திராவிடர்களைத் தாக்கினார்கள். இத்தாக்குதல்களினால் முருகேசன், மூக்கன், ராஜா, பூபதி, செல்லத்துரை, சேவகமூர்த்தி ஆகியோர் செத்துவிட்டனர். நான் பார்த்துக் கொண்டிருந்தபோது, முருகேசனின் தலையில்லா உடல் பேருந்திலிருந்து வெளியே வீசி எறியப்பட்டது” (சாட்சி கணேசன்)
மனிதாபிமானம் கொண்ட எந்த ஜாதிக்காரர் இதைப் படித்தாலும் ஆத்திரமும், அழுகையும் இல்லாமல் படிக்க முடியுமா?
இதை நினைத்துப் பார்க்கவே நெஞ்சு நடுங்குகிறதே….
இந்தக் கொலைகளையும் காட்சியாகத் தந்திருந்தால்…..
இந்த ஜாதிவெறிதான் தமிழனின் வீரமா?
தமிழனை பல்லவன் ஆண்டு இருக்கிறான். விஜயநகர மன்னர்கள் ஆண்டு இருக்கிறார்கள். மொகலாயர்கள் ஆண்டு இருக்கிறார்கள். வெள்ளையன் ஆண்டு இருக்கிறான் தமிழர்கள் அல்லாத பல நாட்டு மன்னர்கள் தமிழர்கள் மீது பல ஆண்டுகளாக அதிகாரம் செலுத்தியிருக்கிறார்கள், சுரண்டி இருக்கிறார்கள்
‘குற்றப்பரம்பரையினர்’ என்று ஒரு குறிப்பிட்ட ஜாதியை தமிழ்நாட்டை ஆண்ட தமிழ் மன்னர்கள் உட்பட பலரும் கேவலப்படுத்தி அவமானப்படுத்தி ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கி இருக்கிறார்கள்.
அவர்களை எதிர்த்து வராத வீரம், ஒரு தாழ்த்தப்பட்டவர் பஞ்சாயத்துத் தலைவராக வரும்போது வருகிறதே? இந்த மோசமான மனநிலைக்கு பெயர் தான் தமிழனின் வீரமா?
ஜாதி படிநிலையில் தனக்கு மேல் உள்ளவர்கள் தன்னை அவமரியாதை செய்வதை, பொருட்படுத்தாமல் இருப்பதும், தனக்கு கீழ் உள்ளவர்கள் மேல் நிலைக்கு வருவதை பொறுத்துக் கொள்ளாமல் இருப்பதும்தான் ஜாதி இந்துவின் உளவியல். இப்படித்தான் ஜாதி சிஸ்டம் உயர்ஜாதிக்காரர்களுக்கு அதிலும் குறிப்பாக பார்ப்பனர்களுக்கு எந்தப் பிரச்சினை இல்லாமல், ஜாதி ரீதியான சமூக அந்தஸ்த்தோடு இயங்குகிறது.
இடைநிலை ஜாதிகளுக்கு ‘சூத்திரன், வேசி மகன்’ என்ற பட்டங்கள் இருந்தாலும் அதைக் குறித்தான எந்த சொரணையும் இல்லாமல், பார்ப்பனியத்தின் மீது எந்த கீறலும் விழாமல் தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான தனது காழ்ப்புணர்சியின் மூலமாக ஜாதி மேலாதிக்கத்தை, பார்ப்பனியத்தை பிற்படுத்தப்பட்ட ஜாதிகள்தான் மிகவும் பத்திரமாக பாதுகாக்கிறது
மேலவளவு முருகேசனின் மனைவி பிணமான தன் கணவனுடன்
டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் நடந்த வன்முறையை பார்த்தே உங்களால் ஒருநாள் முழுக்க சாப்பிட முடியவில்லை என்கிறீர்கள். மேலவளவு முருகேசன் கொலையைக் காட்சியாக்கிக் காட்டியிருந்தால் நீங்கள் வாழ்நாள் முழுவதும் உணவை மறந்துதான் வாழ்ந்து இருக்க வேண்டும்.
டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரி சண்டை காட்சிகளை திரும்ப, திரும்ப தொலைக்காட்சியில் காட்டப் படுவதால் மக்களிடம் தேவையற்ற பதற்றமும், கலவரமும்தான் ஏற்படும். வர்த்தக மற்றும் அரசியல் நோக்கம் கொண்ட இதுபோன்ற காட்சிகளை ஒளிபரப்புவதை அரசு தடைசெய்யவேண்டும்.
***
இந்தச் சண்டை நடக்கும்போது அதை தடுக்கு முயற்சிகாமல் காவல் துறையினர் வேடிக்கைப் பார்த்தது சட்டபடியும் குற்றம். அதை தடுக்க வேண்டும் என்ற எந்த முயற்சியும் செய்யாமல் விரட்டி, விரட்டி படம் எடுத்த போட்டோக் கிராப்பர்கள், கேமராமேன்கள், பத்திரிகையாளர்கள் செய்தது தர்மபடி குற்றம்
தனிமனிதராக இந்தச் சண்டைய தடுக்க முயற்சித்த கேண்டின் பொறுப்பாளருக்கு இருந்த இந்த உணர்வும், தைரியமும் - காவல் துறைக்கும், பத்திரிகையாளர்களுக்கும் இல்லாதது வெட்கப்படக்கூடியது. மிகுந்த வன்முறை நிறைந்தது.
கண்முன்னே ஒருவன், புதைக்குழியில் சிக்கி ‘காப்பாற்றுங்கள்’ என்ற கூக்குரலிட்டபடி மரணதத்தோடு போராடுகிறான். பத்திரிகை, தொலைக்காட்சி கேமராமேன்கள் அவரை காப்பாற்றுவார்களா? மரணம் வரை படம் எடுப்பார்களா?
அதுபோன்ற காட்சிகள் கிடைப்பது அரிது. அதனால் மரணம் வரை படம் எடுப்பார்கள். பார்வையாளர்களை பரபரப்பாக்கி பல முறை பார்க்க வைக்கிற காட்சி அது. தொழிலில் ஒரு நல்ல பெயர் கிடைக்கும். முதலாளியின் பாராட்டையும் பெற முடியும். முன்கூட்டியே அந்த நபர் புதைக்குழியில் மாட்டிக் கொள்ளபோவது தெரிந்தால், நன்றாக மார்க்கெட்டிங் செய்து,This program sponsor by என்றும் ஒளிபரப்பலாம்.
அது மனித தர்மமாக இல்லாமல் இருக்கலாம். அதுதான் தொழில் தர்மம். தொழில் அதிபதிர்களுக்கு லாபம் தருகிற தர்மம். அதுவேதான் பத்திரிகை தர்மமும்.
நன்றி
வே.மதிமாறன்
http://mathimaran.wordpress.com