சனி, 27 நவம்பர், 2010

மாவீரர் நாள் வீரவணக்க நிகழ்ச்சி

நவம்பர் 27 சனிக்கிழமை மாலை 6.04 மணிக்கு மாவீரர் நாள் வீரவணக்க நிகழ்ச்சி திருப்பூர் அறிவுச்சோலை குழந்தைகள் சார்பில் திருப்பூர் வெள்ளியங்காடு பகுதியில் உள்ள பெரியார் படிப்பகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் போரில் இறந்த மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

வெள்ளி, 17 செப்டம்பர், 2010

உறுதியேற்போம்....

அறியாமை இருளகற்றி

அறிவியல் வளர்க்க

உறுதியேற்போம்....

சாதி மறுப்புத் திருமணம் செய்து

சமத்துவம் படைக்க

உறுதியேற்போம்...

ஆணாதிக்கக் கொடுமையிலிருந்து

பெண்ணினத்தை மீட்டெடுக்க

உறுதியேற்போம்...

சாதி மத சழக்குகளிலிருந்து

தமிழர்களை விடுவிக்க

உறுதியேற்போம்....

அரசு தனியார் வேலைகளில்

ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உரிய

பங்கை பெறுவதற்கு

உறுதியேற்போம்...

உலக வர்த்தக பேரத்தில்

உருக்குலையும் தமிழினத்தை

பாதுகாக்க உறுதியேற்போம்...

ஆரியப் பார்ப்பனர்

கொட்டங்களை

அடியோடு ஒழிக்க

உறுதியேற்போம்....

வடவர்களின் பிடியிலிருந்து

தமிழ்நாட்டை விடுவிக்க

உறுதியேற்போம்...

பார்ப்பன இந்திய சதியாலே

சர்வதேச துணையோடு

சிங்களம் அழித்த ஈழத்தை

மீட்டெடுக்க உறுதியேற்போம்...

தமிழ்நாடு தமிழருக்கேயென

அய்யா சொன்ன வார்த்தைகளை

உண்மையாக்க உறுதியேற்போம்...

பெரியார் பிறந்தநாள் உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி-2010

தந்தை பெரியார் அவர்களின் 132 பிறந்தநாளை முன்னிட்டு வருகிற 17-9-2010 வெள்ளிக் கிழமை காலை 11-00 மணிக்கு பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் திருப்பூர் இரயில் நிலையம் அருகில் உள்ள பெரியார் அண்ணா சிலைகளுக்கு மாலை அணிவித்து பிறந்தநாள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன் தலைமையில் நடைபெற்றது நிகழ்ச்சியில் சாதி,மத மூடநம்பிக்கை ஒழிப்பு உறுதிமொழியை அனைவரும் எடுத்துக்கொண்டனர். நிகழ்ச்சியில் தலைமைச் செயற்குழு உறுப்பினர் அங்ககுமார்,மாவட்டத்தலைவர் துரைசாமி,மாநகர்த் தலைவர் இரமேசுபாபு,மாநகரச் .செயலாளர் முகில்ராசு,ஒன்றிய தலைவர் அகிலன், மாணவரணி அமைப்பாளர் கார்த்திகேயன், அறிவரசு, சண்.முத்துக்குமார், அவிநாசியப்பன்,கருணாநிதி,கமல்,கார்த்தி,முரளி உட்பட மாநில,மாவட்ட,மாநகர,ஒன்றிய நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்..

சனி, 4 செப்டம்பர், 2010

வீரவணக்கம்

சீரிய தமிழினப்போராளி
திருப்பூர் தென்மொழி துரையரசனார் அவர்கள் மறைந்தார்.அவருக்கு எமது வீரவணக்கம்

ஞாயிறு, 15 ஆகஸ்ட், 2010

உறுதிகொள்ளுங்கள்! உறுதிகொள்ளுங்கள்! உறுதிகொள்ளுங்கள்!

நாம் சட்டத்தைப் பற்றி பயப்படாமலும்,பதவி கிடைக்காதே என்று கவலைப்ப்டாமலும் சுதந்திரத் தமிழ் நாடு பெற ஒவ்வொருவரும் முடிவு செய்து கொண்டு முன் வர வேண்டியது ஒவ்வொரு தமிழனுக்கும் அவசியமான காரியம் என்பதைபணிவோடு தெரிவித்துக் கொள்கிறேன். சுதந்திரத் தமிழ்நாடு-என் இலட்சியம் என்ற சொற்களை ஒவ்வொருவரும் இலட்சியச்சொல்லாகக் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன். பதினாயிரக் கணக்கில் பாட்ஜுக்கு ஆர்டர் கொடுத்துத் தயார் செய்து மக்களுக்கு விநியோகிக்க ஆசைப்ப்படுகிறேன். பொது மக்களுக்கும் இதுவே இலட்சியச் சொல்லாக இருக்கவேண்டும் என்று ஆசைப்படுகிறேன். பொதுமக்களே! இளைஞர்களே! பள்ளி,கல்லூரி மணவர்களே! மணவிகளே! உறுதிகொள்ளுங்கள்! உறுதிகொள்ளுங்கள்! உறுதிகொள்ளுங்கள்!
பெரியார்
[பிறந்தநாள் மலர் 17.9.1973]

செவ்வாய், 10 ஆகஸ்ட், 2010

சுயமரியாதை

மனித தர்மத்தை அடிப்படையாக வைத்து, மனித சமுதாயத்திற்கு யாராவது தொண்டாற்ற வேண்டுமானால் முதலில் செய்யவேண்டியது, பகுத்தறிவுப்படி மக்களை நடக்கச் செய்வதும் சிந்திக்கச் செய்வதுமே யாகும். மனிதன் தனக்குள்ளாகவே, தான் மற்றவனைவிடத் பிறவியில் தாழ்ந்தவன் என்கிற உயர்வு தாழ்வு உணர்ச்சியைப் போக்கித் தன்னம்பிக்கையும், சுயமரியாதையும் பெற வேண்டும். சீர்திருத்தமும், சுயமரியாதையும், சட்டம் கொண்டு வந்து, வாக்கு வாங்கி நிறைவேற்றப் பெற்றுவிடலாம் என்று நினைப்பது ஒரு நாளும் முடியாத காரியம் மனிதன் உலகில் தன் சுயமரியாதையை - தன்மானத்தை உயிருக்குச் சமமாகக் கொள்ளவேண்டும். மானமுள்ள ஆயிரம் பேருடன் போராடலாம். மானமற்ற ஒருவனுடன் போராடுவது சிரமமான காரியம்.
-தந்தை பெரியார்

சனி, 7 ஆகஸ்ட், 2010

என்னடா தேசபக்தி

எதற்காக இந்தியா
புரிய வில்லை
எதைச்சொன்னாலும்
சொரணை யில்லை

நாடாளு மன்றம்
தமிழ் பேசாதாம்
நற்றமிழ், 'நீதி
மொழி' ஆ காதாம்!

யாரடா நாயே
இதை நீ சொல்ல
இந்திதான் நுழையுமா?
எம்மையே கொல்ல

பனிமலைக் காசுமீர்
தீப்பற்றி எரியுது
ஒரிசா சதீசுகர்
கோவணம் கிழியுது

ஆந்திரா கன்னடம்
மராட்டியம் மோதுது
அட உன், தேசபக்தி
அடிபட்டுச்சாகுது

மீனவன் சாகிறான்
தடுக்க மாட்டாய்நீ
முள்வேலிக்கம்பியை
அறுக்க மாட்டாய் நீ

குட்டி நாடுதான்
அதட்ட மாட்டாய்நீ
கொழுத்துப் பேசுவான்
உதைக்க மாட்டாய்நீ

எங்கள் தாயரின்
தாலி ஏன் அறுக்கிறாய்?
இத்தாலிக்காய் ஏண்டா
தமிழனை எரிக்கிறாய்?


-தமிழேந்தி

நன்றி
சிந்தனையாளன்
ஆக .2010

வியாழன், 29 ஜூலை, 2010

பேராசிரியர் கீசகனுக்கு வீரவணக்கம்

பட்டி தொட்டி எல்லாம் சுற்றி சுழன்று சாதி,மத,மூட பழக்க வழக்கங்களை எதிர்த்து தமிழர் விடுதலைக்கு போராடிய பெரியார் பெருந்தொண்டர் பேராசிரியர் கீசகன் அவர்கள் மறைந்தார் அவருக்கு எமது வீரவணக்கங்கள்.

புதன், 28 ஜூலை, 2010

சமரசம் என்ற பேச்சே இல்லை

எங்களது இதயம் எங்கள் கடமையைச் சுட்டிக் காட்டுகிறது. இனியும் நாங்கள் தயங்கி நிற்கத்துணியமாட்டோம். நாங்கள் எங்கள் கொடியை உயர்த்தி விட்டோம். அந்தக்கரங்களை கீழே இறக்கமாட்டோம். எங்கள் கரங்கள் முறியடிக்கப்பட்டு புழுதிக்குள் புதையுண்டாலொழிய... எங்கள் கரங்கள் உயர்ந்தே நிற்கும். இனி சமரசம் என்ற பேச்சே இல்லை. எங்கள் நியாயங்களுக்கு செவிகள் காது கொடுத்தேதீரும். -ரிவோல்ட் [3-11-1929]

செவ்வாய், 20 ஜூலை, 2010

அபாயச்சங்கு

தமிழ்நாடும்,தமிழனும் தப்பி பிழைத்து விடுதலை பெற வேண்டுமானால் ... இந்தியக் கூட்டாட்சி என்கின்ற பார்ப்பன ஏகபோக சர்வாதிகார ஆட்சியிலிருந்து விலகி தமிழ்நாட்டை சுதந்திரத் தமிழ்நாடு ஆக்கிக் கொண்டாலன்றி வேறு எந்தக் காரணத்தாலும், எக் கிளர்ச்சியாலும் முடியவே முடியாது என்பதைத் தமிழ் மக்கள் உணர வேண்டுமாய் வேண்டிகொள்கிறேன். தியாகம் என்பது சிறத்தண்டனை அனுபவிப்பதுதான் என்று பலர் கருதிக்கொண்டிருக்கிறார்கள். தியாகம் என்பது தன்னலமறுப்பு ஆகும்.தன்னலமறுப்பு என்பது உயிரைப் பலிகொடுப்பது என்பதை இறுதியாகக் கொண்டதாகும்.இப்படிப் பட்ட தன்னல மறுப்புக் கொண்ட ஓர் ஆயிரம் வீரர்கள் முன்வந்தால்தான் தமிழ்நாடு சுதந்திரத் தமிழ்நாடாக முடியும்.இளைஞர்கள் இதை நல்லபடி சிந்தித்து முடிவு செய்து கொண்டு செயலில் ஈடுபட வேண்டுகிறேன். சிந்திக்க வேண்டிய காலம் நெருங்கிவிட்டது என்பதற்காகத்தான் இந்த அபாயச்சங்கை ஊதுகிறேன்.

தந்தை பெரியார்.
[விடுதலை13.5.1960]

ஞாயிறு, 18 ஜூலை, 2010

ஒழிக்கப்பட வேண்டியவை

1. மக்களிடம் உணர்ச்சி, ஒழுக்கம் ஏற்படவேண்டுமானால் சினிமா ஒழிக்கப்பட வேண்டும்.

2. நீதி, நேர்மை ஏற்படவேண்டுமானால், வக்கீல் முறை ஒழிக்கப்பட வேண்டும்.

3. நாட்டில் காலிகள், அயோக்கியர்கள் ஒழிக்கப்பட வேண்டுமானால்பத்திரிகைகள் பெரிதும் ஒழிக்கப்பட வேண்டும்.

4. அரசியலில் நல்ல ஆட்சியும், நாணயமும் ஏற்படவேண்டுமானால்தேர்தல் முறை ஒழிக்கப்பட வேண்டும்.

5. வியாபாரத்தில் நாணயக் குறைவும், கள்ள வியாபாரமும் ஒழிக்கப்படவேண்டுமானால் லைசென்சு, பெர்மிட், கட்டுப்பாடு முறைஒழிக்கப்பட வேண்டும்.

6. தொழில் துறையில் தொழிலாளர்களிடையே சுமூகமும், நாணயமும்,பொறுப்பும் ஏற்பட வேண்டுமானால் லாபத்தில் பங்கு கொடுத்து, தொழிலாளர் சட்டம் ஒழிக்கப்படவேண்டும்.

7. அய்க்கோர்ட்டில் சமூக நீதி வேண்டுமானால் பார்ப்பனரை நீதிபதியாகநியமிப்பது ஒழிக்கப்படவேண்டும்.
-தந்தை பெரியார்

வலைப்பதிவு காப்பகம்