புதன், 15 ஏப்ரல், 2009
காங்கிரஸ் வரலாறே - தமிழினப் பகைமை தான்!
காங்கிரஸ் கட்சி - பிரிட்டிஷ்காரரால் தொடங்கி யது முதல் இது நாள் வரை அது தமிழினத்தின் பகை சக்தியாகவே இருந்திருக்கிறது. இடையில் இந்திய தேசியத்திலிருந்து மாறுபட்டு, தமிழின அடையாளத் தோடு செயல்பட்ட காமராசர் காலம் மட்டுமே மாறு பட்டிருந்தது. மீண்டும் இந்திய தேசிய காங்கிரஸ் - தமிழினப் படுகொலைக்கு கரம் நீட்டிக் கொண்டிருக் கிறது. இளம் தலைமுறையினரே; இதோ, அந்த வரலாற்றிலிருந்து சில துளிகள்... • 1885 இல் காங்கிரஸ் கட்சியைத் தொடங்கியவர் ஆலன் ஆக்டேவியன் ஹுயூம் என்ற பிரிட்டிஷ் அய்.சி.எஸ். (அந்தக்கால அய்.ஏ.ஸ்.) அதிகாரி. அதற்கான ஆலோசனையை வழங்கியவர் பிரிட்டிஷ் கவர்னர் ஜெனரலாக இருந்த டஃப்ரின் பிரபு. • பம்பாய், கல்கத்தா, சென்னையில் காங்கிரஸ் மாநாடுகள் கூடியபோது மாநாட்டுப் பிரதிநிதி களுக்கு பிரிட்டிஷ் ஆளுநர்கள் தேனீர் விருந்து கொடுத்தனர். • காங்கிரஸ் தொடங்கப்பட்டது - சுதந்திரம் கேட்பதற்காக அல்ல. அப்போது நிர்வாகம் நடத்திய பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியாரின் அடக்குமுறைகளை எதிர்த்து எவரும் போரிடாமல் கட்டுக்குள் வைப்பதற்கே காங்கிரஸ் தொடங்கப்பட்டது. எனவேதான் காங்கிரசைத் தொடங்கிய ஹுயூம் என்ற பிரிட்டிஷ் அதிகாரியே அக்கட்சியின் செயலாளராக 20 ஆண்டுகாலம் இருந்தார். • ஒவ்வொரு காங்கிரஸ் கட்சியின் மாநாடும் தொடங்கும்போதும் - “பிரிட்டிஷ் அரசர் அரசிக்கு கடவுள் நீண்ட ஆயுளைத் தர வேண்டும்” என்று தீர்மானங்கள் போடுவது வழக்கம். 1886 இல் தொடங்கி 1914 வரை 8 மாநாடுகளில் இந்த ‘மன்னர் வழிபாட்டு’த் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. • கல்கத்தாவில் இரண்டாவது காங்கிரஸ் மாநாடு நடந்தபோது ‘மன்னர் வழிபாட்டுத் தீர்மானம்’ தேவையா என்ற கேள்வி எழுந்தது, மாநாட்டுத் தலைவரான தாதாபாய் நவ்ரோஜி “இந்த ஜனசபை (காங்கிரஸ் மாநாடு) பிரிட்டிஷ் ராஜ்யத்துக்கு வலிமையான அடித்தளம் (அளிதிவாரக்கல்) என்று பதில் தந்தார். • அப்போது - காங்கிரசுக்கு ‘ஆரிய ஜன அய்க்கியம்’ என்ற மற்றொரு பெயரும் உண்டு. ‘காங்கிரஸ் அல்லது ஆரிய ஜன அய்க்கியம்’ என்ற பெயரில் க. சுப்ரமணிய அய்யர் என்ற காங்கிரஸ் தலைவர் ஒரு நூலையே எழுதியுள்ளார். • காங்கிரசைத் தொடங்கிய ஹுயும் அப்போது காங்கிரசில் பெரும் எண்ணிக்கையாக இருந்த பார்ப்பனர்களிடம் மதம், ஆச்சாரம், வர்ணஸ்ரமப் பாதுகாப்பு போன்ற சமூகப் பிரச்சினை களில் கட்சி குறுக்கிடாது என்று ஒவ்வொரு மாநாட்டிலும் உறுதி தந்து பேசினார். இதை ‘அம்பேத்கர் தனது சாதியை ஒழிக்க வழி’ எனும் நூலில் குறிப்பிடுகிறார். • சென்னையில் கூடிய காங்கிரஸ் மாநாடு பற்றி ‘சுதேசமித்திரன்’ நாளேட்டில் காங்கிரஸ் ஒருவிளம்பரத்தை வெளியிட்டிருந்தது. அதில், “இந்த வருடத்துக் காங்கிரஸ் சபையில் ஒரு முக்கியமான புதுஅம்சம் - சாதி ஆச்சாரம் பார்க்கும் பிரதிநிதிகளுக்குப் (பார்ப்பனர்களுக்கு) பிரத்தியேகமான ஒரு பங்களாவை அவர் களுடைய சாதி ஆச்சாரங்களுக்கு ஏற்றபடி ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன” என்று அந்த விளம்பரம் கூறியது. • 1885 இல் நடந்த பம்பாய் காங்கிரசிலும் 1886 இல் நடந்த கல்கத்தா காங்கிரசிலும் ஒரு முளிலீம் பிரதிநிதிகூட பங்கேற்கவில்லை. காரணம் அப்போது பிரிட்டிஷாரை முழுமையாக எதிர்த்தது முளிலீம்கள்தான். ‘ஆரிய ஜன அய்க்கியம்’ என்று பெயர் சூட்டிக் கொண்ட கட்சியில் எப்படி முளிலீம்கள் வருவார்கள்? • சென்னையில் கூடிய மூன்றாவது காங்கிரஸ் மாநாட்டில் பங்கேற்ற 361 பிதிநிதிகளில் 138 பேர் பார்ப்பனர்கள். மற்றவர்கள், செட்டியார், ரெட்டியார், முதலியார் போன்ற முன்னேறிய சாதியினர். தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட பிரதிநிதிகள் எவரும் பங்கேற்கவில்லை. கும்ப கோண சங்கர மடத்தின் சார்பில் சங்கராச்சாரி பிரதிநிதி கலந்து கொண்டார். • சமூகப் பிரச்சினையில் காங்கிரஸ் ‘தலையை நுழைக்காது’ என்ற கூறினாலும், சென்னை காங்கிரஸ் மாநாட்டில் பசுவதையை தடை செய்ய வேண்டும் என்ற தீர்மானத்தை பார்ப்பனர் களுக்காக நிறைவேற்றினார்கள். • 1900க்குப் பிறகு நடந்த காங்கிரஸ் மாநாடுகளில் - காலையிலே இந்து மகாசபை மாநாடும், மாலை யில் - அதே மேடையில் காங்கிரஸ் மாநாடும் நடந்த வந்தன. காங்கிரசார் இரண்டு அமைப்பு களிலும் இரட்டை உறுப்பினர்களாக இருந்து வந்தனர். • இதற்குப் பிறகுதான் 1906 இல் முஸ்லீம்கள் தங்களுக்கு என்று ‘அகில இந்திய முளிலீம் லீக்’ என்ற அமைப்பை உருவாக்கிக் கொண்டார்கள். • வங்காளத்தை மத அடிப்படையில் இரண்டு மாகாணமாக பிரிட்டிஷார் பிரித்தபோது அதை எதிர்த்து ‘அய்க்கிய வங்காள இந்து இயக்கத்தை’ தொடங்கியது, காங்கிரசார் தான். அதே ஆண்டில் பஞ்சாபில் இந்து மகாசபையை காங்கிரசார் உருவாக்கி னார்கள். இதுவே பிறகு அகில பாரத இந்து மகா சபையாகியது. ஆக, அரசியலில் மதவாதத்துக்கு கால்கோள் நடத்தியதே காங்கிரஸ் தான். • லாலா லஜபதிராய், மதன்மோகன் மாளவியா இருவரும் ஒரே நேரத்தில் காங்கிரஸ் கட்சிக்கும் இந்து மகாசபைக்கும் தலைவர்களாக இருந்தனர். இருவருமே மோசமான வர்ணஸ்ரம வெறியர்கள். முளிலீம் எதிர்ப்பாளர்கள். ‘கடல் தாண்டுவது இந்துமத விரோதம்’ என்பதால், லண்டன் வட்ட மேஜை மாநட்டுக்கு சென்ற மதன் மோகன் மாளவியா, தன்னுடன் மண்ணை உருண்டையாக உருட்டி கையில் எடுத்துச் சென்றார். மண்ணை கையில் எடுத்துச் சென்றால், கடல் தாண்டி போனதாகாது என்பது அய்தீகமாம்! எனவே அவர் ‘மண்ணுருண்டை மாளவியா’ என்றும் அழைக்கப்பட்டார். • இப்போது - சென்னை காங்கிரஸ் அலுவலகம் ‘சத்திய மூர்த்தி பவனில்’ காங்கிரசார் கூடினாலே அங்கு கலவரம் வெடிக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். உண்மையில் காங்கிரசின் வரலாறே அப்படித்தான் இருந்திருக்கிறது. சூரத் நகரில் கூடிய காங்கிரஸ் கட்சி மாநாட்டில் ‘தீவிரவாதிகள்’ என்று அழைக்கப்பட்ட திலகர் தலைமையிலான ‘இந்து வெறியர்’ குழு கலவரத்தில் இறங்கியது எதிர்ப்பு அணி. திலகர் மீது செருப்பு வீசியது. பெரும் கலவரத்தினால் எந்த முடிவும் எடுக்காமல், மாநாடு கலைந்தது. அதன் பிறகு ஓராண்டு காலம் காங்கிரஸ் கூடவே இல்லை. அரசியலில் ‘செருப்பை’ ஆயுதமாகப் பயன்படுத்தலாம் என்பதை, அப்போது தான், காங்கிரசார் உலகத்துக்கே அறிமுகப்படுத்தினர். • பொது மக்களிடம் திரட்டிய நிதிக்கு கணக்கு காட்டாமல் விழுங்கி ஏப்பம் விடும் கலாச்சாரத்தை அறிமுகப்படுத்தியதும் காங்கிரஸ் தான். ‘திலகர் சுயராஜ்ய நிதி’ திரட்டி, கடைசி வரை காங்கிரஸ் அதற்கு கணக்கே காட்ட வில்லை. அதே ‘திலகர்’ நிதியை காந்தியார் வசூல் செய்தார். வசூல் செய்த பலரும் பணத்தை தங்கள் வசமாக்கிக் கொண்டார்கள். அதனால் தான் இப்போதும் “வசூல் பணம் என்னவா யிற்று?” என்று எவராவது கேட்டால் ‘காந்தி கணக்கில் எழுது’ என்று கூறும் வழக்கு உள்ளது. இது பொது வாழ்க்கை “ஒழுக்க”த்துக்கு காங்கிரஸ் வழங்கிய ‘அருட்கொடை’. • அரசியலில் மதத்தை நுழைத்தவர் பாலகங்காதர திலகர் என்ற மராட்டிய காங்கிரஸ் பார்ப்பனத் தலைவர்தான். ‘பிள்ளையாரை’ அரசியல் குறியீ டாக்கியவரும் அவர்தான். சைவ - வைணவப் பிரிவுகளை ஒருங்கிணைக்க அவர் விநாயகனைப் பயன்படுத்தி, பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக ‘விநாயகர்’ ஊர்வலங்களை மராட்டியத்தில் நடத்தினார். அதைத் தான் இப்போது இந்து முன்னணி நடத்திக் கொண்டிருக்கிறது. • புனே நகரத்தில் எலிகளால் பிளேக் நோய் பரவி ஏராளமானோர் உயிரிழந்த போது நோயைத் தடுக்க எலிகளை ஒழிக்கும் நடவடிக்கைகளை பிரிட்டிஷ் நிர்வாகம் தீவிரப்படுத்தியது. அப்போது விநாயகன் வாகனம் எலி. எனவே எலியை ஒழிப்பது இந்து மத விரோதம் என்று கூறினார் திலகர். இதனால் எலியை ஒழிக்க வந்த இரண்டு பிரிட்டிஷ் அதிகாரிகள் கொல்லப் பட்டனர். இந்த வழக்கில் திலகர் தண்டிக்கப்பட்டு 18 மாதம் சிறைபடுத்தப்பட்டார். • ஆண் குழந்தைகளும், பெண் குழந்தைகளும் ஒரே பள்ளியில் படிப்பதை எதிர்த்த திலகர், பெண்களுக்கு கல்வி தருவதையே எதிர்த்தார். குழந்தை திருமணங்களை (பால்ய விவாகம்) தடை செய்யும் சட்டத்தை பிரிட்டிஷார் கொண்டு வந்தபோது மதத்தில் தலையிடுவதாகக் கூறி, கடுமையாக எதிர்த்தார். • சென்னையில் பார்ப்பனரல்லாதார் இயக்கம் அரசியல் உரிமை கோரியபோது 1918 இல் திலகர் இவ்வாறு பேசினார்: “எதற்காக, செருப்பு தைக் கிறவனும், எண்ணெய்ச் செக்கு ஆட்டுபவனும், வெற்றிலை பாக்கு கடை வைத்திருப்பவனும், சட்டசபைக்குப் போக முயற்சிக்கிறார்கள்? யார், யார் எங்கே போக வேண்டும் என்று ஒரு வரைமுறை கிடையாதா?” - இந்த நிகழ்வுகளை அம்பேத்கர் தனது நூலில் (காந்தியும் - காங்கிரசும் தீண்டப்படாதோருக்கு செய்தது என்ன? நூலில்) பதிவு செய்துள்ளார். • அரசியலில் மதத்தைப் புகுத்தியதில் காந்திக்கு பெரும் பங்கு உண்டு. ‘ராம பஜனையோடு’ அவரது அரசியல் நடவடிக்கைகள் கலந்து நின்றன. தனது ‘அந்தராத்மா’வுடன் அடிக்கடிப் பேசுவதாக அவர் கூறிக் கொண்டார். இந்தியாவில் ‘ராம ராஜ்யம்’ அமைய வேண்டும் என்றார். ‘தீண் டாமை’ ஒழிய வேண்டும். ஆனால், நால்வர்ணப் பிரிவாகிய வர்ணாளிரம அமைப்பு நீடிக்க வேண்டும் என்றார். ஒவ்வொரு ‘வர்ணமும்’ தங்களுக்குரிய தொழிலை செய்வதே நல்லது என்றார். • ‘தீண்டப்படாத’ தலித் மக்களுக்கு இரட்டை வாக்குரிமை வழங்க பிரிட்டிஷ் அரசு முன்வந்த போது அதை எதிர்த்து சாகும் வரை உண்ணா விரதப் போராட்டத்தைத் தொடங்கினார் காந்தி. மிரட்டலுக்கு பிரிட்டிஷ் அரசு பணிந்தது. தலித் மக்களுக்கு கிடைத்த உரிமையை காந்தி பறித்தார். • மயிலாப்பூரிலுள்ள சீனிவாச அய்யங்கார் என்ற பிரபல காங்கிரசார் வீட்டில் காந்தி தங்குவது வழக்கம். அப்போதெல்லாம் அவர் வீட்டுத் திண்ணையில்தான் காந்திக்கு இடம்; உள்ளே போக முடியாது; இதை காந்தியே கூறியிருக்கிறார்.