“நான் தோற்கடிக்கப்பட்டு விட்டேன்…… ஆனால்……”
முதலிலேயே சொல்லிவிடுவது நல்லது. ஓட்டு அரசியலின் மீது நம்பிக்கையோ…… மரியாதையோ இல்லை எனக்கு.. ஆனால் எனக்கு இல்லை என்பதற்காக அரிதான பூக்கள் பூக்காமலா இருக்கும் அங்கு? அப்படிப்பட்ட ஒன்றுதான் விஸ்வநாத் பிரதாப் சிங்.
வி.பி.சிங் 1931 ல் பிறந்தார்.
1980 ல் உ.பி.முதல்வரானார்.
1984 ல் மத்திய நிதியமைச்சரானார்.
பிற்பாடு ராணுவ அமைச்சரானார்.
போபர்ஸ் காந்தியால் டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.
1989 ல் பிரதமரானார்.
1990 ல் ஆட்சியை இழந்தார்.
2008 ல் இறந்தார்.
என வெறுமனே புள்ளிவிவரங்களுக்குள் புதைத்துவிடக் கூடிய வாழ்க்கையா அவருடையது?
91 ஆம் ஆண்டு புது தில்லி ரயில் நிலையத்தில் இறங்குகிறேன். எதேச்சையாக எதிரில் நிற்கும் ரயில்களைப் பார்த்தவனுக்கு பேரதிர்ச்சி. பெரிய பெரிய கொட்டை எழுத்துக்களில் “விபி.சிங்கைக் கொல்வோம்” …… “கொல்பவர்களுக்குப் பரிசு 1 லட்சம்”…… என வெள்ளை நிறத்தில் வண்டி முழுவதும் எழுதிக் குவிக்கப்பட்டிருந்தது. அந்த வேளையில்…… அதை எழுதியவர்களின் அறியாமையை விடவும்…… அதை ஆறு மாதங்களாகியும் அழிக்காமல் விட்டிருந்த அதிகார வர்க்கத்தின் வக்கிரம்தான் என்னை கோபத்தின் உச்சிக்கே கொண்டு சென்றது. தமிழகக் கட்சிகளுக்குள் எவ்வளவுதான் குடுமிபிடி சண்டை இருந்தாலும்…… ஒரு ஆளுங்கட்சித் தலைவரையோ…… ஒரு எதிர்க்கட்சித் தலைவரையோ தரக்குறைவாக விமர்சித்து எழுதியிருந்தால் அதை இரவோடு இரவாக போலிசாரே அழித்துவிடுவார்கள். ஆனால் வி.பி.சிங் அவர்கள் ஆட்சியை இழந்து ஆறுமாதமாகியும் அப்படியே அதை அழிக்காமல் விட்டிருக்கிறார்கள் என்றால் காரணம் என்னவாக இருக்கும் என்று யோசிக்கிறேன். ஒரே ஒரு காரணம்தான்.
அது: மண்டல் கமிஷன்.
(வடக்கு எதிலும் நம்மை விட ஸ்லோ பிக்கப்தானே……)
ஆண்டாண்டு காலமாக தாங்கள் மட்டுமே அனுபவித்து வந்த பதவிகளும், பெருமைகளும் இந்தப் “பாழாய்ப் போன” மண்டலால் எல்லோருக்கும் பகிர்ந்தளிக்க வேண்டி வந்துவிட்டதே என்கிற எரிச்சல்……
மனுதர்மத்தின் பேரால் கல்வி மறுக்கப்பட்டவர்களுக்கு
மண்டல்தர்மத்தின் மூலம் கல்விக்கூடங்களின் கதவு திறக்கப்படுகிறதே என்கிற ஆத்திரம்……
இவை எல்லாம்தான் அவர்களை அப்படி எழுத வைத்திருக்கிறது.
இன்னமும் என் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது வி.பி.சிங்கின் அந்த வரிகள் :
மஸ்ஜித் பிரச்சனையை முன்னிருத்தியவர்களை
மண்டலால் கவிழ்த்துவிட்டாரே என்கிற ஆத்திரம் தலைக்கேற அரசுக்கான ஆதரவை விலக்கிக்கொண்டு வெளியில் வருகிறார் அடல் பிகாரி. அடுத்து வி.பி.சிங்கை நோக்கி நீளுகின்றன பத்திரிக்கையாளர்களின் மைக்குகள்.
“என்ன…… இவ்வளவு மோசமான தோல்வியைத் தழுவியிருக்கிறீர்களே……?” என்கிறார்கள் பத்திரிக்கையாளர்களும் தொலைக்காட்சியினரும்.
“ஆம்…… நான் தோற்கடிக்கப்பட்டு விட்டேன். ஆனால்…… பலகோடி பிற்படுத்தப்பட்டவர்களின் நலனுக்காக வந்த மண்டல் குழுவின் பரிந்துரைகளை இந்திய அரசியலின் நிகழ்ச்சி நிரலில் வைத்த பிற்பாடு.”
(Yes. I am defeated.
But Mandal is in Agenda.)
என்று வெகு நிதானமாக தெரிவித்தபடி இறங்கிச் செல்கிறார் வி.பி.சிங்.
ஆம். அதுதான் நிதர்சனமான உண்மை.
தங்களது இந்திரா காந்தியின் காலத்தில் கண்டுகொள்ளவே படாத மண்டல் குழுவின் பரிந்துரைகளை……
தங்களது ராஜீவ் காந்தியின் காலத்தில் குப்பைக் கூடையில் வீசப்பட்ட மண்டல் குழுவின் பரிந்துரைகளை……
தங்களது நரசிம்மராவ் காலத்தில் நிறைவேற்ற வேண்டிய கட்டாயம் காங்கிரசுக்கு ஏற்பட்டது என்றால் அதற்குக் காரணம் விஸ்வநாத் பிரதாப் சிங்தான்.
அவ்வளவு ஏன்…… பா.ஜ.க.வின் கட்சித் தலைமையில் கூட பிற்படுத்தப்பட்டவர்களைக் கணக்குக் காட்ட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது என்றால் அதற்கும் விஸ்வநாத் பிரதாப் சிங்தான் காரணம்.
நேரு யுகத்தில் நேரடி அரசியலில் நுழைந்தாலும்
நேரு பரம்பரை செய்யத் தவறியதை
செய்யத் துணியாததை செய்து காட்டியவர்தான் வி.பி.சிங்.
ஆனால் வி.பி.சிங்கை வெறுமனே இட ஒதுக்கீட்டுக்கான ஆளாக மட்டும் ஒதுக்கிவிடுவதில் ஒப்புதலில்லை எனக்கு. எப்படிப் பெரியாரை வெறும் கடவுள் மறுப்பாளராக மட்டுமே சுருக்கிக்காட்டி சுகம் காணுகிறார்களோ சிலர் அப்படி. பிரதமர் பதவியை விட்டு விலகிய பின்பு அவர் வாழ்ந்த வாழ்க்கை அப்படிக் காட்டவில்லை நமக்கு. புற்று நோயோடு போராடியபடியும்…… வாரத்தில் மூன்று நாட்கள் சிறுநீரகத்துக்கான டயாலிசிஸ் செய்தபடியும்…… டெல்லி குடிசைப் பகுதி மக்கள்…… ரிக்க்ஷா இழுப்பவர்கள்…… வாழ்வுரிமைக்காக அவர் நடத்திய போராட்டங்கள் ஏராளம்.
தனது ஒத்துழைக்காத உடலோடு ஒருபுறம் போராடிக் கொண்டே மறுபுறம் தலித்துகள்…… நிலமற்ற தொழிலாளர்கள்…… “நலத்”திட்டங்களின் பேரால் தங்களது வாழ்விடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள்…… என எண்ணற்ற விளிம்புநிலை மக்களுக்காக தன் பங்களிப்பை அளித்து வந்தார்.
ஆனால்…… அவையெல்லாம் வட இந்தியப் பத்திரிக்கைகளின் பதினாறாம் பக்கச் செய்தியாகக் கூட இடம் பெறவில்லை. அவர் நம்மிடமிருந்து விடை பெற்ற அன்று மும்பையில் நடந்த துயரமான துப்பாக்கிச் சூடுகளுக்கும், குண்டுவெடிப்புகளுக்கும் கூட மனதார நன்றி சொல்லியிருப்பார்கள் வடபுலத்து ஊடகவியலாளர்கள். எப்படியோ இந்தச் செய்திகளால் அந்த மனிதனது மரணம் பின்னுக்குத் தள்ளப்பட்டதே என்று. கமண்டலங்களின் கதையை மண்டலால் முடிவுக்குக் கொண்டு வந்தவன் மீது ஆத்திரம் இல்லாமலா இருக்கும்?
இவை எல்லாவற்றை விடவும் ராஜகுடும்பத்தில் பிறந்து வளர்ந்திருந்தாலும்…… பிரதமர் பதவியையே வகித்திருந்தாலும்…… இன்றைய இந்திய அரசியல் அமைப்பு முறை அவருக்குள் ஏற்படுத்திய ஏமாற்றமும்…… அதிருப்தியும்…… அவரை “நான் மாவோயிஸ்ட் ஆக விரும்புகிறேன்” என்று பிரகடனப்படுத்தும் அளவிற்குக் கொண்டு சென்றது.
ஆம். அதனை அவரது வார்த்தைகளிலேயே சொல்வதானால்……
“ உயர் தொழில் நுட்ப நகரங்களின் பேராலும்…… சிறப்புப் பொருளாதார மண்டலங்களின் பேராலும்…… லட்சக்கணக்கான வேலை வாய்ப்புகளை வழங்குவதாக ஒவ்வொரு முதல்வரும் அள்ளி வீசுகிறார்கள். ஒவ்வொரு தொழில் அதிபரும் தனது பொருளுக்கான விலையாக அரசு இவ்வளவு தந்தாக வேண்டும் என அரசுக்கு ஆணையிடுகிறார்கள். ஆனால்…… “உனது விளைபொருள்களுக்கான விலையை நாங்கள்தான் தீர்மானிப்போம்” என்று விவசாயிகளிடம் ஆணை பிறப்பிக்கிறது அரசாங்கம். இந்த மக்களின் குரலுக்கு நீங்கள் செவிமடுக்க மறுத்தால் நாளை அவர்கள் ஆயுதம் ஏந்துவதை எவராலும் தடுக்க முடியாது. உண்மையில் நான் மாவோயிஸ்ட் ஆகவே விரும்புகிறேன். ஆனால் அதற்கு என் உடல் நிலை மட்டும்தான் தடையாக இருக்கிறது.”
உண்மைதான்.
‘பொருளாதாரச் சீரழிவு என்கிற எரிமலையின் மீதுதான் உட்கார்ந்து கொண்டிருக்கிறது இந்தியா.’
சாதீய ஏற்றதாழ்வுகளும்
மதங்களின் மடைமையும்
பொருளாதாரப் பாகுபாடுகளும்
அதன் சீற்றத்தைக் கூட்டுமேயன்றி
குறைக்கப் போவதில்லை.
எரிமலையற்ற வாழ்க்கைதான் அந்த எளிய மனிதனின் கனவு. பாதியில் அறுபட்ட அக்கனவின் மீதியை நனவாக்குவது நம் கைகளில்தான் இருக்கிறது.
சென்றுவா எம் நண்பனே.
நன்றி