திங்கள், 27 ஜூலை, 2009

வீரமணியின் மனு தள்ளுபடி

தந்தை பெரியாரின் எழுத்துக் களுக்கும், கருத்துக்களுக்கும் யாரும் உரிமையோ, காப்புரிமையோ கோர முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது. பெரியாரின் எழுத்துக்களை பெரியார் திராவிடர் கழகம் நூலாக வெளியிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தாக்கல் செய்த மனுவையும் சென்னை உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்து விட்டது.
.
1925ம் ஆண்டு முதல் 1938ம் ஆண்டு வரை தான் தோற்றுவித்த சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தின் தலைவராக தந்தை பெரியார் இருந்த போது, குடியரசு பத்திரிகையில் அவர் தனது கட்டுரைகளையும், கருத்துக்களையும் வெளியிட்டு வந்தார்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இதனை பெரியார் திராவிடர் கழகம் பல்வேறு நூல் தொகுதிகளாக வெளியிட ஏற்பாடு செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தின் தலைவராக தான் இருந்து வருவதால், தந்தை பெரியாரின் எழுத்துக்களும், கருத்துக் களும் தங்களுக்கே சொந்தமானது என்றும், இவற்றை வெளியிட தங்களுக்குத்தான் காப்புரிமை உள்ளது என்றும் அந்த மனுவில் அவர் தெரிவித்திருந்தார்.

எனவே, பெரியார் திராவிடர் கழகம் பெரியாரின் கருத்துக்களை நூல்களாக தொகுத்து வெளியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் அவர் அந்த மனுவில் கேட்டுக் கொண்டிருந்தார்.' இதனை விசாரித்த உயர்நீதிமன்றம் நூல்களை வெளியிடுவதற்கு பெரியார் திராவிடர் கழகத்திற்கு கடந்த ஆண்டு ஜூலை மாதம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.

இதனை நீக்கக்கோரி பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச்செயலாளர் கோவை ராமகிருஷ்ணன் ஆகியோர் ஐகோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கே.சந்துரு, பெரியார் திராவிடர் கழகத்திற்கு விதிக்கப்பட்ட இடைக் கால தடையை நீக்கி உத்தரவிட்டார்.

தந்தை பெரியாரின் கருத்துக்களுக்கும், எழுத்துக்களுக்கும் யாரும் உரிமையோ, காப்புரிமையோ கோர முடியாது என்று தீர்ப்பில் தெரிவித்த நீதிபதி, இது தொடர்பாக வீரமணி தாக்கல் செய்த மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

தீர்ப்பின் விவரம் வருமாறு:
கடவுள் இல்லை, மதம் இல்லை, ஜாதி இல்லை என்று பிரச்சாரம் செய்தவர் தந்தை பெரியார். சமூகத்தில் மண்டிக்கிடந்த மூட நம்பிக்கைகளுக்கு எதிராக குரல் கொடுத்தவர் அவர். தன்னுடைய கருத்துக்களை அவர் குடியரசு பத்திரிகையில் எழுதியுள்ளார்.

முதல் உலகப் போருக்கும், இரண்டாம் உலகப்போருக்கும் இடையே சிக்கலான காலக்கட்டத்தில் அவர் தன்னுடைய கருத்துக்களை துணிச்சலாக வெளியிட்டுள்ளார். சமூக நீதிக்காக பலம் மிகுந்த காங்கிரசுக்கு எதிராகவும் அவர் கருத்துக்களை வெளியிட்டு வந்தார்.

தன்னுடைய கருத்துக்களும், எழுத்துக்களும், பேச்சுக்களும் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்பதே பெரியாரின் நோக்கம். நூறு ஆண்டுக்கு பிறகும் இளைய சமுதாயத்தினர் அவருடைய கொள்கைகளை தெரிந்து கொள்வது நல்லது.

எனவே, பெரியாரின் கருத்துக் களுக்கும், எழுத்துக்களுக்கும், யாரும் உரிமையோ, காப்புரிமையோ கோர முடியாது. காப்புரிமை என்ற பெயரில் அவரது கருத்துக்களை முடக்கவும் கூடாது. வழக்கு ஆவணங்களுக்கு நடுவே அவரது கொள்கைகளை அடைத்து விடக்கூடாது.

எனவே பெரியாரின் கருத்துக்களை நூல்களாக வெளியிட பெரியார் திராவிடர் கழகத்திற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை நீக்கப்படுகிறது. இது தொடர்பாக வீரமணி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது
. இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளது. இவ்வழக்கில் பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் வழக்கறிஞர்கள் துரைசாமி, இளங்கோவன் ஆகியோர் ஆஜராகினர்.